காணொளி: இரானில் மூன்றாவது நாளாக போராட்டம் ஏன்?

காணொளிக் குறிப்பு, இரானில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சியை முன்னிறுத்தி, மூன்றாவது நாளாக போராட்டம்
காணொளி: இரானில் மூன்றாவது நாளாக போராட்டம் ஏன்?

இரானில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சியை முன்னிறுத்தி, மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இரான் நாணயமான ரியாலின் (Rial) மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்ததே இந்த போராட்டத்திற்கு காரணமாகும். கடந்த திங்கட்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு 13 லட்சத்து 90 ஆயிரமாக குறைந்ததாக திறந்த சந்தை விகிதங்களை கண்காணிக்கும் வலைதளங்களை மேற்கோள் காட்டி ராயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராயிட்டஸ் செய்தியின்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் நாட்டின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, ​​இரானின் மீது அமெரிக்கா மீண்டும் தடைகள் விதித்ததில் இருந்து பல ஆண்டுகளாக இரானின் பொருளாதாரம் ஆழ்ந்த சிக்கலை சந்தித்து வருகிறது.

2022ல் முக்கிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

தற்போது 2025ஆம் ஆண்டில் இரானின் நாணயம் டாலருக்கு நிகராக கிட்டத்தட்ட பாதி மதிப்பை இழந்துள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெஹ்ரானின் கிராண்ட் பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தைத் தொடங்கினர். பின் இது மற்ற நகரங்களுக்கும் பரவியது.

கராஜ் (Karaj), ஹமேடன் (Hamedan), கெஷ்ம் (Qeshm), மலார்ட் (Malard), இஸ்ஃபஹான் (Isfahan), கெர்மேன்ஷா (Kermanshah), ஷிராஸ் (Shiraz), யாஸ்ட் (Yazd) கிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெறுவதை பிபிசி பெர்சிய சேவையால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. கூட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதையும் இதில் பார்க்க முடிகிறது.

பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டங்களில் இணைந்துள்ளனர். அவர்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 'Death to the dictator' என்ற முழக்கத்துடன் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் 1979ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, மறைந்த ஷா முகமது ரேஸா பஹ்லவியின் மகனுக்கு ஆதரவாக'ஷா வாழ்க' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்து, அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள ரேசா பஹ்லவி தனது X தளத்தில், “நான் உங்களுடன் இருக்கிறேன். நமது நோக்கம் நியாயமானது; நாம் ஒன்றிணைந்திருப்பதால் வெற்றி நமதே” என்று பதிவிட்டார்.

மேலும், “இந்த ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடையும்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் பெர்சிய மொழியின் X தள பக்கத்திலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பதிவிடப்பட்டுள்ளது.

அதில் பல ஆண்டுகளாக தோல்வியடைந்த கொள்கைகள் மற்றும் தவறான பொருளாதார நிர்வாகத்திற்குப் பிறகு மரியாதை மற்றும் நல்ல எதிர்காலத்தை தேடி போராடுபவர்களுடன் அமெரிக்கா துணையாக நிற்கிறது என்றும், போராட்டக்காரர்களின் தைரியத்தை பாராட்டுகிறோம் என்றும் அந்த பதிவு தெரிவிக்கிறது.

இந்தப் போராட்டங்களை அரசு அங்கீகரிப்பதாகவும், விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும், பொறுமையுடன் கருத்துகளை கேட்க தயாராக இருக்கிறோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று அதிபர் மசூத் பெஸெஷ்கியான் தனது எக்ஸ் தள பக்கத்தில், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு உள்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் பிரச்னையை தீர்க்க, பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமட்ரேஸா ஃபர்ஸினின் (Mohammadreza Farzin) ராஜினாமாவையும் அவர் ஏற்றுக்கொண்டார். இவருக்கு பதிலாக முன்னாள் பொருளாதார மற்றும் நிதியமைச்சராக இருந்த அப்டோல்நாசர் ஹெம்மடி (Abdolnasser Hemmati) புதிய மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை அன்று ஃப்ளோரிடாவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திப்பின் முக்கிய விவாதப் பொருட்களில் ஒன்றாக இரான் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்புக்கு பின் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கிறாரா என்பது குறித்து டிரம்ப் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர், "அவர்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. பணவீக்கம், பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்" என்றார்.

மேலும், இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது அணு திட்டங்களை மீண்டும் கட்டியெழுப்பினால், அதற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் மற்றொரு விமான தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கக்கூடும் எனவும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு