கோவைக்கு செந்தில் பாலாஜி, சேலத்துக்கு கே.என்.நேரு - தி.மு.கவின் திட்டம் என்ன?

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு, செந்தில் பாலாஜி
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வளர்ச்சிப் பணிகள்' என்ற பெயரில் அமைச்சர் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கிய அமைச்சர்களை தி.மு.க நியமனம் செய்துள்ளதை, எதிர்க்கட்சிகள் உற்று கவனிக்கின்றன. ` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, மாவட்டங்களில் இயற்கைப் பேரிடர், நோய்த் தொற்று, அரசு வழங்கும் உதவிகளை கண்காணித்தல் உள்பட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், சேலம் மாவட்டத்துக்கு கே.என்.நேருவும் தேனி மாவட்டத்துக்கு ஐ.பெரியசாமியும் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு எ.வ.வேலுவும் தருமபுரிக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கம் தென்னரசுவும் காஞ்சிபுரத்துக்கு தா.மோ.அன்பரசனும் நெல்லைக்கு ராஜகண்ணப்பனும் திருவாரூர் மாவட்டத்துக்கு அர.சக்ரபாணியும் கோவைக்கு செந்தில்பாலாஜியும் கிருஷ்ணகிரிக்கு காந்தியும் பெரம்பலூருக்கு சிவசங்கரும் தஞ்சைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு மெய்யநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டாலும், கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியை தி.மு.க பெறவில்லை. அந்தநேரத்தில் கொரோனா அலை தீவிரமாக இருந்ததால், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு சிறப்புக் கவனம் கொடுத்தது. இருப்பினும், அந்த மாவட்டங்களில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் செயல்படவில்லை' எனவும் அவர்களில் சிலர் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் இணக்கத்தில் இருந்தாகவும் கூறப்படுகிறது.

டிசம்பருக்குள் தேர்தல்

மு க ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மு க ஸ்டாலின்

இதனையடுத்து, `டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரலாம்' என்பதால் மாநகராட்சிகளை இலக்காக வைத்து அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்துள்ளதாகத் தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். `இவர்கள் மூலம் ஆட்சிக்கும் கட்சிக்கும் வலுசேர்ப்பதுதான் தலைமையின் நோக்கம்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

ஹைலைட்டாக கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியும் சேலம் மாவட்டத்துக்கு கே.என்.நேருவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் சேலம் மாவட்டத்தை செந்தில் பாலாஜி சிறப்பாக கையாண்டதை அடிப்படையாக வைத்தே, அவரை கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை, சேலத்துக்கு முக்கியத்துவம்

``கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க வலுவாக இருக்கும்போது, செந்தில் பாலாஜியை நியமிப்பது எந்த வகையில் பலன் கொடுக்கும்?" என தி.மு.கவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஈரோடு சந்திரகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``முதலமைச்சர் எடுத்துள்ள முடிவு சரியானது. எந்த மாவட்டத்துக்கு யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து நியமித்துள்ளார். இதன்மூலம், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கட்சியிலும் நிர்வாகத்திலும் எழுச்சியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``சட்டமன்றத் தேர்தலில் இந்த 2 மாவட்டங்களிலும் தோல்வியை சந்தித்தோம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர்களாக அமைச்சர்கள் கே.என்.நேருவும் அமைச்சர் செந்தில்பாலாஜியும் உள்ளனர். இவ்விரு மாவட்டங்களின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு அளப்பறியதாக இருக்கும்," என்கிறார்.

``அ.தி.மு.க செல்வாக்காக உள்ள மாவட்டங்களில் கோவையும் ஒன்று. இதை தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது?" என்றோம். `` சட்டமன்றத் தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்குகளில்தான் தி.மு.க தோற்றுள்ளது. ஊரக உள்ளாட்சியில் இங்கு பல இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த மாவட்டங்களுக்கு நிறைய செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றித்தான் கோவையிலும் சேலத்திலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அது ஒரு மாயத் தோற்றம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

என்ன செய்தார் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

உதாரணமாக, கோவையில் அண்மையில் பெய்த மழையில் மழைநீர் கால்வாய்கள் சரியாக வேலை செய்யாததால் மக்கள் அவதிப்பட்டனர். சேலத்தில் 2 பாலங்களைக் கட்டியதைத் தவிர எடப்பாடி பழனிசாமி எதையும் செய்யவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க ஆட்சியில் வாங்கிய 5 லட்சம் கோடி கடனும் இவர்கள் செய்த ஊழலையும் மக்கள் அறிந்து கொண்டனர். அதன் விளைவாக, ஊரக உள்ளாட்சியில் தி.மு.க பெரும் வெற்றியைப் பெற்றது. முதலமைச்சரின் ஐந்து மாத உழைப்புக்குக் கிடைத்த பலனாக இதைப் பார்க்கிறோம்" என்கிறார்.

மேலும், ``இந்த வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கும். காரணம், நகர்ப்புறங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். ஊரக உள்ளாட்சியை விடவும் அதிக வெற்றியைப் பெறுவோம். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வோரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களின் நியமனங்களே, நகர்ப்புற உள்ளாட்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைய உள்ளன" என்கிறார்.

உற்சாகத்தில் தொண்டர்கள்

`` செந்தில் பாலாஜியின் வருகை தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கட்சியின் சூழல்கள், இன்னும் மேம்படும் என தொண்டர்கள் நம்புகிறார்கள். தான் மேற்கொண்ட பணிகளில் செந்தில் பாலாஜி அடைந்த வெற்றி, கரூரில் கட்சிக்குக் கிடைத்த வெற்றி ஆகியவற்றைப் பார்த்து கோவை மாவட்ட தொண்டர்கள் அவரை வரவேற்கின்றனர்" என்கிறார், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் அ.தமிழ்மறை.

தொடர்ந்து பேசுகையில், `` செந்தில் பாலாஜியை போன்ற ஒருவர், கோவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம், கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கெனவே இருந்தது. இனி வரும் நாள்களில் அவரது வழிகாட்டலில்தான் எதுவும் நடக்கும். இது உள்ளாட்சித் தேர்தலுக்காக போடப்பட்ட நியமனம் அல்ல. வளர்ச்சிப் பணிகளுக்காக போடப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளையும் அவர் ஆய்வு செய்வார். அதனால், அரசு திட்டப் பணிகளும் வேகம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சேலத்தில் கொரோனா பணிக்காக அவர் நியமிக்கப்பட்டபோது மிகச் சிறப்பாக செய்தார். அந்த எதிர்பார்ப்பு கோவை மாவட்ட தொண்டர்களிடமும் உள்ளது" என்கிறார்.

தி.மு.கவின் திட்டம் எடுபடுமா?

திமுக சின்னம்

பட மூலாதாரம், @DMK, Twitter

படக்குறிப்பு, திமுக சின்னம்

கோவை மாவட்ட தி.மு.கவினரின் உற்சாகம் குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கோவை மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.கவின் அசைக்க முடியாத கோட்டையாக உள்ளது. தி.மு.கவின் ஆசை எந்தக் காலத்திலும் சாத்தியப்படப் போவதில்லை. ஐம்பது ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை 5 ஆண்டுகளில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணியும் நிறைவேற்றித் தந்தனர். அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தைச் சாத்தியப்படுத்தியது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிதான். இங்கே தி.மு.கவின் திட்டம் எடுபடப் போவதில்லை" என்கிறார்.

`` கடந்த ஆட்சியில் நொய்யல் மீட்டெடுப்பு திட்டம் என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினார். இது மக்களால், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இது. அதனை நிரூபிக்கும் வகையில் மக்களோடு மக்களாக இருந்து திட்டங்களை நிறைவேற்றினார்கள். இதனால் மக்களின் குறைகளையும் எளிதில் உணர முடிந்தது. கடந்த ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான தடையில்லா மின்சாரத்தை அளித்தோம். தற்போது கோவையை அ.தி.மு.கவிடம் இருந்து அபகரித்துவிட வேண்டும் எனத் தி.மு.க திட்டமிடுகிறது. தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சியில் ஏராளமான முறைகேடுகளை அரங்கேற்றித்தான் வெற்றி பெற்றனர். பல இடங்களில் வாக்குப் பெட்டிகள் அபகரிக்கப்பட்டன" என்கிறார் மகேஸ்வரி.

மேலும், `` செந்தில் பாலாஜி வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஸ்டாலினால் ஒருகாலத்தில் `ஊழல்வாதி' என விமர்சிக்கப்பட்டவரையே கோவைக்கு அனுப்புகின்றனர். யாரையெல்லாம் அவர் ஊழல்வாதி எனக் கூறினாரோ, அவர்களையெல்லாம் அரியணையில் ஏற்றியுள்ளார். இவர்களின் வருகையால், எங்கள் வெற்றியை எந்த வகையிலும் தடுக்க முடியாது" என்கிறார்.

மகுடிக்கு யாரும் மயங்கப் போவதில்லை

`` சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்வியடைந்தது. அதனால் எதற்கும் துணிந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என முடிவு செய்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் நியமித்துள்ளார். அவர் ஏற்கெனவே அ.தி.மு.கவில் இருந்ததால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோடு அவருக்கு நட்பு உள்ளது. தற்போது அ.தி.மு.க ஆட்சியில் இல்லாததால் அதிருப்தியில் உள்ளவர்களையெல்லாம் இழுக்கும் வேலைகள் நடக்கின்றன.

எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க இருப்பதையே இந்த நியமனம் காட்டுகிறது. அவரின் வருகையின் மூலம் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. அ.தி.மு.கவில் உள்ள அனைவருக்கும் செந்தில் பாலாஜி யார் என்பது தெரியும். எனவே, அவரது திட்டங்கள் வெற்றி பெறப் போவதில்லை. தி.மு.கவின் மகுடிக்கு எந்தப் பாம்பும் மயங்கப் போவதில்லை" என்கிறார், தமிழ்நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் வகுக்கத் தொடங்கிவிட்டன. இதில் வெல்லப் போவது யார் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :