குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images
டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்று டேரா சச்சா சௌதாவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரஞ்சித் சிங் என்ற முன்னாள் ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் ராம் ரஹீம் சிங் மற்றும் வேறு நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஒரு பாலியல் வல்லுறவு வழக்கிலும், ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் ரஹீமுக்கு 31 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்?
ராம் ரஹீம் சிங் 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் பிறந்தார்.
1948ஆம் ஆண்டு ஷா மஸ்தானா பலூசிஸ்தானி என்பவரால் நிறுவப்பட்டிருந்த டேரா சச்சா சௌதா அமைப்பில் இவரது குடும்பத்தினர் ஈடுபாடு கொண்டிருந்ததால் சிறுவயதிலேயே அந்த அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார் ராம் ரஹீம் சிங்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரத்த தான முகாம்கள் நடத்துதல், ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு அதைப் பின்பற்றுபவர்களால் சமூக சேவை அமைப்பாகவும், ஒரு மதப் பிரிவாகவும் கருதப்படுகிறது.
1990ஆம் ஆண்டு டேராவின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ராம் ரஹீம் சிங்.
தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ராம் ரஹீம் சிங், தண்டனை பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பாரதிய ஜனதா கட்சிக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார்.

தானே பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங், சில திரைப்படங்களை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
'கடவுளின் தூதர்' என்று பொருளப்படும் தி மெசன்ஜ்ர் ஆஃப் காட் (Messenger of God) திரைப்படத்தின் மூன்று பாகங்களும் அவற்றில் அடக்கம்.
மெசன்ஜ்ர் ஆஃப் காட் என்பதன் ஆங்கிலச் சுருக்கமான 'MSG' என்றும் இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகிறார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.
வழக்கின் பின்னணி என்ன?
ரஞ்சித் ரஞ்சித் சிங் என்பவர் டேரா சச்சா நிறுவனரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தராக இருந்தவர். அவர் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்பிலும் இருந்தார்.
சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்திற்கு வரும் பெண்களை எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார் என்ற விவரங்களை தெரிவிக்கும், அநாமதேயக் கடிதம் ஒன்று அவரது ஆதரவாளர்களிடையே சுற்றி வந்தது.
இந்த கடிதத்தை எழுதியவர் ரஞ்சித் சிங் தான் சுற்றில் விட்டார் என்று சந்தேகித்த குர்மீத் ராம் ரஹீம் சிங் அதன் பின்னர் அவரை கொலை செய்தார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சிங்கின் கொலைக்குப் பின் ராம் ரஹீம் சிங் மற்றும் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.
அதனால் ராம் ரஹீம் சிங் மற்றும் பிற நான்கு பேர் மீது மட்டுமே வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் இவர்கள் ஐவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்தது.
பாலியல் வல்லுறவு வழக்கு மற்றும் முதல் கொலை வழக்கு

பட மூலாதாரம், Getty Images
1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.
இந்த வழக்கு பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குர்மீத் சிங் மீது புகார் தெரிவித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
பாலியல் வல்லுறவு வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று 2017 ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் உள்ள சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் ராம் ரஹீம் சிங்.
இதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரின் கொலை வழக்கிலும் இவர் மீது 2019இல் குற்றம் நிரூபணம் ஆனது. பத்திரிகையாளர் சத்ரபதி, மாலை நாளிதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்தார்.
சாமியார் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதாக செய்தி வெளியிட்டதையடுத்து 2002ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 2019இல் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- கேரள வெள்ளம்: பாதிப்பின் கொடூரத்தைக் காட்டும் புகைப்படங்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
- உலகின் பழைய நட்சத்திர வரைபடம்: காட்சிப்படுத்தப் போகும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
- ஜோதிகா பிறந்தநாள்: 43 வயதில் ஹீரோ ஆனேன்- ஜோதிகா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
- இந்தியாவின் மிகப்பெரிய குப்பை மலைகள்: மோதியின் அறிவிப்பால் கரையுமா நீடிக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












