கேரளாவை உலுக்கும் கனமழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கியத் தகவல்கள்; சபரிமலை யாத்திரை ரத்து

இடுக்கி மாவட்டம் கொக்கையாறு எனுமிடத்தில் வெள்ளத்தால் கவிழ்ந்த வாகனத்தை திருப்பும் மீட்புப் பணியாளர்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இடுக்கி மாவட்டம் கொக்கையாறு எனுமிடத்தில் வெள்ளத்தால் கவிழ்ந்த வாகனத்தை திருப்பும் மீட்புப் பணியாளர்கள்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் இன்று, அக்டோபர் 18, தொடங்கி அக்டோபர் 22 வரையிலான ஐந்து நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் ஒரு மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்ட வாரியான வானிலை முன்னறிவிப்பில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு கேரளாவில் 14 மாவட்டங்களிலும் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தேவைத் இல்லை (பச்சை நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

  • நாளை மறுநாள், அக்டோபர் 20-ஆம் தேதி, காசர்கோடு, கண்ணூர் மற்றும் ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர 11 மாவட்டங்களில் மழை காரணமாக எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் (மஞ்சள் நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 21 ஆம் தேதி காசர்கோடு மற்றும் கண்ணூர் தவிர்த்த பிற 12 மாவட்டங்களுக்கும், அக்டோபர் 22-ஆம் தேதி காசர்கோடு மாவட்டம் தவிர்த்த பிற 13 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இன்று வெளியிடப்பட்டுள்ள ஐந்து நாட்களுக்கான மழை அறிவிப்பில் எந்த ஒரு மாவட்டத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் (ஆரஞ்சு நிறக் குறியீடு) என்றோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் (சிவப்பு நிறக் குறியீடு) என்றோ தெரிவிக்கப்படவில்லை.
  • எனினும் ஏற்கனவே மழை காரணமாக உண்டான பாதிப்புகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் மீட்பு பணிகளும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
  • இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களிலும் பரவலாக, லேசானது (2.5 - 15.5 மில்லி மீட்டர் மழைப்பொழிவு) முதல் மிதமானது (15.6 - 64.4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு) வரையிலான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அக்டோபர் 20ஆம் தேதி லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சில இடங்களில் கனமழை (64.5 - 115.5 மில்லி மீட்டர் மழைப்பொழிவு) அல்லது மிகவும் கனமழை (115.6 - 204.4) மில்லி மீட்டர் மழைப்பொழிவு) பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பக்தர்களை மீட்க அறிவுறுத்தல்

மழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மிகவும் விரைவாக நிரம்பி வரும் சூழலில் ஒவ்வொரு அணையின் நீர் மட்டத்தையும் கண்காணித்து அவற்றிலிருந்து நீரைத் திறப்பது குறித்து முடிவு எடுக்குமாறு உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றுக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் நிலைச்சரிக்கு பின் நடக்கும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்.

பட மூலாதாரம், NDRF

படக்குறிப்பு, இடுக்கி மாவட்டத்தில் நிலைச்சரிக்கு பின் நடக்கும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்.

அணையில் இருந்து நீரைத் திறப்பதற்கு முன்பு கரையோரம் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தத் தேவையான நேரத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள மாநில வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஆகியவை உள்ளூரில் உள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 184 நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சபரிமலையில் துலா மலையாள மாதத்திற்கான யாத்திரை மற்றும் பூஜை கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சபரிமலையை அண்மித்துள்ள சில பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை நேற்று (ஞாயிறு) பதிவானது.

ஏற்கனவே சபரிமலை சென்றுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்துக்கு கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரி இறுதியாண்டு படிப்பதற்கான மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இறுதியாண்டு தவிர்த்த பிற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் மழை காரணமாக அக்டோபர் 25ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :