தமிழகத்தைச் சேர்ந்த அழகு நிலைய பெண்கள் பிரதமர் மோதிக்கு அனுப்பிய காணொளி

தமிழகத்தைச் சேர்ந்த அழகு நிலைய பெண்கள் பிரதமர் மோதிக்கு அனுப்பிய காணொளி
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் இழப்பை எதிர்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தும் பெண்கள், இழப்பீடு மற்றும் உதவித்தொகை கோரி பிரதமர் மோதிக்கு காணொளி அனுப்பியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடுத்தர குடும்பங்களை நம்பி அழகு நிலையம் நடத்தும் பெண்கள் பலரும், சுயதொழில் செய்பவர்கள். சிலர் தங்களது வீட்டில் ஒரு பகுதியை அழகு நிலைய அறையாக மாற்றி, அந்த வருமானத்தை நம்பியே வாழ்கின்றனர்.

தற்போது ஊரடங்கு அல்லது கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நிலவும் காலத்தில், திருமணங்களுக்கு அழகுபடுத்த கிடைத்த ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதால், அழகு நிலைய தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பெண் தொழில் முனைவோர், வருமானமின்றி தவிப்பதாக பிரதமருக்கு காணொளி அனுப்பியுள்ளனர்.

மேடவாக்கம் பகுதியில் அழகு நிலையம் நடத்திவரும் டெய்சி, அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.30,000 வரை சம்பாதித்த காலம் இருந்தது என்று நினைவுகூர்கிறார். தற்போது ஒரு நாளில் ரூ.200 கிடைப்பது கூட சவாலாக இருப்பதாக கூறுகிறார் அவர்.

Banner image reading 'more about coronavirus'

''திருமண ஆர்டர்கள் மூலமாகதான் கணிசமான வருமானம் எங்களுக்கு கிடைக்கும். தனியாக பார்லருக்கு வருபவர்களுக்கு முடிதிருத்தம், பேசியல் போன்ற முகபொலிவு அலங்காரம், மசாஜ் போன்ற சேவைகளில் எங்களுக்கு கிடைக்கும் தொகை குறைவு. ஊரடங்கு காலத்தில் வருமானம் முற்றிலுமாக இல்லை. நாங்கள் தற்போது பார்லர் திறந்தாலும், கொரோனா அச்சம் காரணாமாக முன்பை போல வாடிக்கையாளர்கள் வருவதில்லை,''என்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்திவரும் கோமளா, ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்ததால், கடையை காலி செய்துவிட்டதாக கூறுகிறார். மாத வாடகை கொடுக்க முடியாததால், தற்போது வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று சேவை அளிப்பதாக கூறுகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த அழகு நிலைய பெண்கள் பிரதமர் மோதிக்கு அனுப்பிய காணொளி

''ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை எந்த வருமானமும் இல்லை. என் கணவர் விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். அவருடைய தொழிலும் வருமானம் இல்லை. எங்களுடைய கடன் சுமை தற்போது ரூபாய் மூன்று லட்சமாக உயர்ந்துள்ளது. என் இரண்டு மகள்களுக்கும் நடப்பு ஆண்டிற்கான பள்ளிகட்டணம் செலுத்துவதற்கு என்ன செய்வது என்ற யோசனையில் நாட்கள் கழிகின்றன,''என்கிறார் கோமளா.

கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டாலும், அழகு நிலையங்கள் பழையபடி செயல்படுவதற்கு மேலும் ஒரு வருடம் ஆகும் என்கிறார் கோமளா.

''ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே முக கவசம் அணிந்துகொண்டு அவர்களின் வீட்டுக்கு வந்து சேவை அளிப்பதை விரும்புகிறார்கள். கொரோனா பரவல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலரும் எங்களை தவிர்க்கிறார்கள். அழகு நிலையத்தை மூடிவிட்டேன். பெரிய பார்லர்களில் வேலை தேடி வருகிறேன். எங்களுக்கு உதவித்தொகை தர அரசு முன்வரவேண்டும் என காணொளி பதிவு செய்து சுயதொழில் பெண்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர். பதிலுக்காக காத்திருக்கிறோம்,''என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: