கொரோனாவால் வேலையிழந்தோருக்கு இஎஸ்ஐ மூலம் 50% சம்பளம் - மத்திய அரசு முடிவு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்து தமிழ் திசை: "கொரோனாவால் வேலையிழந்தோருக்கு இஎஸ்ஐ மூலம் 50% சம்பளம் - மத்திய அரசு முடிவு"
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இஎஸ்ஐ) மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்கும் வகையில் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். மார்ச் 24 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான காலத்துக்காக இந்த அலவன்ஸை பெறலாம்.
ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அவர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர் பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
இந்த நடவடிக்கை மூலம் 30 லட்சம் முதல் 35 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய செயல் உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை அவர்களது முந்தைய இஎஸ்ஐ பங்களிப்பில் நான்கு தவணைகளின் அடிப்படையில் பெற முடியும். பணிக்காலத்தில் ஒரு முறை இத்தகைய வேலையின்மை கால அலவன்ஸை 90 நாட்களுக்குப் பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவானது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "கோவாக்சின் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்"

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான 'கோவாக்சின்' 2020 இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியாவின் முதல் சுதேசமாக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான, கோவாக்சின், இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். இந்தியா தயாரித்த தடுப்பு மருந்துகளின் செயல்திறன், சோதனைகள் முடிந்ததும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்தை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான நேரத்தைக் குறைக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலாவைச் சேர்ந்த மற்ற இரு தடுப்பு மருந்துகள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் கூடுதல் ஒரு மாதமாவது தேவைப்படும் மற்றும் சந்தையில் ஒரே கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். சோதனைகள் வெற்றிபெற்றால் 2021 முதல் காலாண்டில் தடுப்பு மருந்துகள் பயன்படுத்த தயாராகும்.
ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தடுப்பு மருந்தை மலிவு மற்றும் மானிய விலையில் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "ஐபிஎல் போட்டிகள்: துபாய் புறப்பட்டது சிஎஸ்கே அணி"

பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐ.பி.எல். போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10-ஆம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெள்ளிக்கிழமை பிற்பகலில் துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது. இதில் பங்கேற்கவுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். தற்போது இரண்டு கட்ட கொரோனா பரிசோதனைக்குப் பிறகு, அணிவீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட 51 பேர் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












