KKR vs PBKS: கே எல் ராகுல் அதிரடி, கோட்டைவிட்ட கேட்ச்களால் மூழ்கிய கொல்கத்தா கப்பல் - சிக்கலாகும் ப்ளே ஆஃப் கணக்குகள்

பட மூலாதாரம், BCCI/IPL
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (அக்டோபர் 01, வெள்ளிக்கிழமை) துபாய் மைதானத்தில் மோதின.
பஞ்சாப் அணி சார்பாக க்றிஸ் கெயில், மந்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் விளையாடவில்லை. ஃபேபியன் ஆலன், மயங்க் அகர்வால், ஷாரூ கான் ஆகியோர் களம் கண்டனர். இந்த மாற்றம் பஞ்சாபுக்கு சாதகமாகவே அமைந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடிய கொல்கத்தாவின் வெற்றி அணியில் இருந்த லோகி ஃபெர்குசன் மற்றும் சந்தீப் வாரியருக்கு பதிலாக சிவம் மவி மற்றும் டிம் சைஃபர்ட் களமிறங்கினர்.
டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது.
சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணை நிலைபெறத் தொடங்குவதற்குள் 2.2ஆவது பந்தில் அர்ஷ்தீப் சுப்மனை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 34 ரன்களுக்கு ரவி பிஷ்னோயால் வெளியேற்றப்பட்டார்.
கொல்கத்தா தரப்பில் ராகுல் திரிபாதி - வெங்கடேஷ் ஜோடி 55 பந்துகளுக்கு 72 ரன்களைக் குவித்தனர். அவரைத் டொடர்ந்து வெங்கடேஷும் ரவியால் வெளியேற்றப்பட்டார். அப்போது கொல்கத்த ஆணில் 14.4 ஓவரில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
அடுத்து வந்த நிதிஷ் ரானா 31 ரன்களைக் குவித்தார், அவரைத் தொடர்ந்து வந்த பேட்டர்களை பஞ்சாபின் பந்துவீச்சுப் படை அதிரடியாக வெளியேற்றி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்தது.
கடந்த சில முக்கிய போட்டிகளில் அதகளப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியிலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து சுப்மன் கில், நிதிஷ் ரானா உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து வெங்கடேஷ் மற்றும் ராகுல் திரிபாதியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.
அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து இயான் மார்கனின் விக்கெட்டை வீழ்த்தினார்.
20 ஓவர் முடிவில் 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. 166 ரன்களைக் குவித்தால் வெற்றி என களமிறங்கியது பஞ்சாப்.
பொறுப்போடு ஆடிய ராகுல்
கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணை பஞ்சாப் அணிக்கு பிரமாதமான தொடக்கத்தைக் கொடுத்தது.
முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் கொடுத்த கேட்சை இயான் மார்கன் தவறவிட்டார்.
27 பந்தில் 40 ரன்களைக் குவித்திருந்த அதிரடி வீரர் மயங்க் அகர்வாலை ஒருவழியாக வீழ்த்தியது கொல்கத்தா.
அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12 ரன்களில் வெளியேற, ஏய்டன் மக்ரம் கே எல் ராகுலுக்கு ஜோடியாக களமிறங்கினார். அவரும் 18 ரன்களில் வெளியேற தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேறினார்.
16.4ஆவது ஓவரில் ஷாரூ கான் களமிறங்கி ராகுலுக்கு பக்க பலமாக நின்றார். ஒரு பக்கம் பேட்டர்கள் நிலைபெறாத போதும் கே எல் ராகுல் தலைவராக தன் விக்கெட்டை இழக்காமல் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
18 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இரு பேட்டர்களும் லாவகமாக பேட்டைச் சுழற்றத் தொடங்கினர்.
18.3ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி பிடித்த ஒரு கேட்ச், மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட, ஆட்டம் பஞ்சாபின் பக்கம் சாய்ந்தது.
கடைசி ஓவரை வெங்கடேஷ் வீச, 19.2ஆவது பந்தில் கே எல் ராகுலின் விக்கெட் வீழ்ந்தது, ஆனால் ஷாரூ கான் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து பஞ்சாபின் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்தார்.
சொதப்பிய கொல்கத்தா

பட மூலாதாரம், BCCI/IPL
தொடக்கத்தில், பஞ்சாபை கட்டுப்படுத்தி வந்த கொல்கத்தா கடைசி ஐந்து ஓவர்களில் கோட்டை விட்டது. 30 பந்தில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்த போட்டி சுனில் நரேன் வீசிய 16ஆவது ஓவரில் இருந்து மாறத் தொடங்கியது
ஏகப்பட்ட முக்கிய கேட்ச்களை கொல்கத்தா கொட்டை விட்டது, போட்டி பஞ்சாபுக்கு சாதகமானதற்கு முக்கிய காரணம்.
"தொடக்கத்திலேயே நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. பல கேட்ச்களை கோட்டைவிடோம். நான் கூட கேட்சை தவறவிட்டேன். அது எங்களுக்கு பேரிழப்பாகிவிட்டது" என போட்டி நிறைவடைந்த பிறகு கொல்கத்தாவின் கேப்டன் மார்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ப்ளே ஆஃப் கணக்கு

பட மூலாதாரம், BCCI/IPL
இந்த வெற்றியால், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவும் 10 புள்ளிகளோடு ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் நாளை பெங்களூரு உடனும், அக்டோபர் 7ஆம் தேதி சென்னையோடும் மோதவிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு நாளை ஹைதராபாத்தோடும், அக்டோபர் 7ஆம் தேதி ராஜஸ்தானோடும் விளையாட உள்ளது.
இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் ராஜஸ்தான் வென்றால், புள்ளிகள் பட்டியலில் நான்கு அணிகள் 10 புள்ளிகளோடு இருக்கும் என்பதால் இனி ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டில் தாக்குதல்: மனம் நொந்த ப.சிதம்பரம், தலைவர்கள் கண்டனம்
- அஜய் சோன்கர்: முத்து வளர்ப்பில் ஜப்பானிய ஆதிக்கத்திற்கு சவால் விட்ட இந்தியரின் கதை
- பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்
- குச்சி ஐஸ் போல இட்லி: சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது ஏன்?
- ஆன்லைன் விற்பனை தளங்கள்: இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












