காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டில் தாக்குதல்: மனம் நொந்த ப.சிதம்பரம், ஜி23 தலைவர்கள் கண்டனம்

கபில் சிபல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கபில் சிபல் - கோப்புப் படம்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், புகழ்பெற்ற வழக்குரைஞருமான கபில் சிபல் வீட்டின் மீது காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறப்படும் ஒரு கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

அவர் வீட்டின் மீது தக்காளி வீசப்பட்டது, கார் உடைக்கப்பட்டது.

பஞ்சாப் காங்கிரசில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் காங்கிரசை நிலைகுலைய வைத்துள்ளன. ஒரு புறம், முதல்வர் பதவியில் இருந்து விலக நிர்பந்திக்கப்பட்ட கேப்டர் அமரிந்தர் சிங் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அமீத் ஷாவை சந்தித்தார். அதே நேரம், அவர் பதவி விலகுவதற்கு காரணம் என்று கூறப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்த குழப்பம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவரும் ஜி23 குழு என்று அறியப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குழுவை சேர்ந்தவருமான கபில் சிபல், "எங்கள் கட்சியில் தலைவர் இல்லை. இந்நிலையில் இது போன்ற முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை," என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி சாந்தினி சௌக் பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் என்று சந்தேகிக்கப்படுவோர் வியாழக்கிழமை இரவு கபில் சிபல் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்தனர்.

காங்கிரஸ் அமைப்பில் சீர்திருத்தம் தேவை என்று தலைமைக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் குழுவை சேர்ந்த பலர், இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து கருத்துத் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மணீஷ் திவாரி இளைஞர் காங்கிரசார் நடத்திய இந்தப் போராட்டத்தை 'கமாண்ட் பெர்ஃபாமன்ஸ்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாடகத்தையோ, கலை நிகழ்ச்சியையையோ அரசர் போன்ற பெரிய மனிதர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நிகழ்த்திக் காட்டுவதே கமாண்ட் பெர்ஃபார்மன்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.

அதைத் தவிர, காங்கிரசில் தலைமையை 'ஹை கமாண்ட்' என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.

எனவே சிலேடையாக ஆனால், கடுமையாக அவர் காங்கிரஸ் தலைமையே இந்த வன்முறையை ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டியதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

மற்றொரு மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் இந்த தாக்குதலை 'திட்டமிட்ட பொறுக்கித்தனம்' என்று வருணித்தார்.

"நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கட்சிக்கு கேடயமாக வாதிடுகிற உண்மையான காங்கிரஸ்காரர் கபில் சிபல். எந்தப் பக்கத்தில் இருந்து வருகிற எந்த யோசனையாக இருந்தாலும் அது வரவேற்கப்படவேண்டும். கருத்துகளை ஒடுக்குவதோ, பொறுக்கித்தனமோ கூடாது" என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், வேறொரு ட்விட்டர் செய்தியில், காங்கிரஸ் கட்சி தளங்களில் பொருள் பொதிந்த உரையாடலை நடத்த முடியாத நிலையில் தான் செய்வதறியாது தவிப்பதாக கூறியுள்ளார்.

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப.சிதம்பரம்

சக காங்கிரஸ்காரரும் எம்.பி.யுமான ஒருவர் வீட்டின் முன்பு காங்கிரசார் முழக்கமிடுவதைப் பார்க்கும்போதும் தான் செய்வதறியாது தவிப்பதாகவும் அவர் அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஒருவருக்கு பாதுகாப்பான புகலிடம், அமைதி என்றே தோன்றுவதாக அவர் தனது ட்வீட்டை முடித்திருந்தார்.

கபில் சிபல் வீட்டின் மீதான தாக்குதலில் அவர் மனம் நொந்திருப்பதையே இந்த ட்வீட் காட்டுகிறது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் ஹரியாணா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா போன்றவர்களும் கபில் சிபல் வீட்டின் முன் நிகழ்ந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், EPA

இதனிடையே விரைவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி கூறியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது தி ஹிந்து நாளிதழ்.

காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் கோரும் ஜி23 தலைவர்களுக்கும், சோனியா - ராகுல் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கும் இடையிலான பிளவினை இந்த சம்பவம் தெளிவாக காட்டிவிட்டது.

இந்த தாக்குதல் குறித்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ, தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியோ கருத்து எதையும் கூறவில்லை.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் போன்றவர்கள் சோனியா, ராகுல் முகாமுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :