'விமானங்களில் இந்திய இசை' - விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடிதம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் கடந்த 23-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தது.
இதனைத்தொடா்ந்து, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
''அமெரிக்க நிறுவனங்களின் விமானத்தில் அந்நாட்டின் ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரியா நிறுவனங்களின் விமானத்தில் அந்நாட்டின் மொஸாா்ட் இசையும், மத்திய கிழக்கு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானத்தில் அரபு இசையும் ஒலிக்கப்படுகிறது. ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் எப்போதாவதுதான் இந்திய இசை ஒலிக்கப்படுகிறது," என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தியை அவதூறு செய்ததாக இந்து சாமியார் மீது வழக்கு

பட மூலாதாரம், @omkaliputra twitter
மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து சாமியார் காளிச்சரண் மகாராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்க முடியாது, மரணதண்டனை என்றாலும் எதிர்கொள்ளத் தயார் என்ற தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
காந்தியை அவதூறாக பேசிய இந்து சாமியார் மீது மகாராஷ்டிராவின் கோட்வாலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராய்பூரில் 'தர்ம சன்சத்' (மதக் கூட்டம்) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இந்து சாமியார் அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மகாராஜ் கலந்துகொண்டார்.
தர்ம சன்சத் நிகழ்வில் கலந்துகொண்ட காளிச்சரண், மகாராஜ், ''உண்மையான அர்த்தத்தில் பார்த்தால் கோட்சேதான் மகாத்மா. இந்து மதத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தீவிர இந்துத் தலைவரை அரசுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தின் மொத பாதிப்பு எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
இந்த 11 பேரில் அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வந்தவர்கள் நான்கு பேர், அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் நான்கு பேர் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் ஆறு பேர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற செய்திகள்:
- மத்திய கிழக்கை 2021இல் உலுக்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள்
- கொரோனா: எச்சில் துப்புவதற்கு எதிரான இந்தியாவின் 'வெல்ல முடியாத போர்' எந்த நிலையில் உள்ளது?
- நரேந்திர மோதிக்கு புதிய மெர்செடீஸ் மேபேக்: ரூ. 12 கோடி கார் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- வயாகரா முதல் 24,000 ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழுந்த உயிரினம் வரை - 2021இன் சுவாரசிய அறிவியல் நிகழ்வுகள்
- கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ்: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












