கொரோனா: எச்சில் துப்புவதற்கு எதிரான இந்தியாவின் 'வெல்ல முடியாத போர்'

பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு எதிரான விழிப்புணர்வு ஓவியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு எதிரான விழிப்புணர்வு ஓவியம்
    • எழுதியவர், அபர்ணா அல்லூரி
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

பொது இடங்களில் எச்சில் உமிழாதீர்கள்: இந்த ஒற்றை வரியை தங்களுடைய செய்தியாகக் கொண்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஜா மற்றும் ப்ரீத்தி நரசிம்மன் இருவரும், இந்தியா முழுவதும் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டனர். எச்சில் துப்புவதற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற காரில் ஒலிபெருக்கியை பொருத்திக் கொண்டு அவர்கள் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.

நீங்கள் இந்தியாவில் நேரத்தை செலவழித்திருந்தால், ராஜாவும் ப்ரீத்தியும் எதை எதிர்க்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். பல இடங்களில் உமிழ்நீர் சாலைகளில் துப்பப்பட்டிருப்பதை காணலாம். சில சமயங்களில் அவை தெளிவாகவும், சளியுடனும், சில சமயங்களில் புகையிலை கலந்த வெற்றிலை அல்லது பான் மசாலாவை மென்று துப்புவதால் ரத்தச் சிவப்பு நிறத்திலோ அது தென்படும். அவை சாதாரணமான சுவர்களிலும், வலிமையான கட்டடங்களிலும் எச்சில் உமிழப்பட்டிருக்கும். கொல்கத்தா நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெளரா பாலத்தை அச்சுறுத்தும் வகையிலும் இந்த எச்சில் உமிழ்வை காணலாம்.

எனவே, ராஜாவும் ப்ரீத்தி நரசிம்மனும் நாடு முழுவதும் பயணம் செய்தனர். எச்சில் உமிழ்பவர்களிடம் இருந்து சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்களை பாதுகாப்பதை இலக்காக அவர்கள் கொண்டுள்ளனர்.

புணேவில் வாழ்ந்து வரும் இவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் பொதுவெளியில் எச்சில் துப்புவதற்கு எதிரான முன்கள ஆர்வலர்களாக சுயமாக தங்களை நியமித்துக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். இதற்காக, பயிற்சிப் பட்டறைகள், இணைய மற்றும் நேரடி பிரசாரங்கள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுத்தம் செய்தல் என அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு சமயம், புணே ரயில் நிலையத்தில் உள்ள சுவற்றில் இருந்த பான் கரையை நீக்க அதில் வண்ணம் தீட்டியுள்ளனர், ஆனால், மூன்று நாட்களிலேயே மக்கள் அதன் மீது எச்சில் உமிழ தொடங்கியிருந்தனர் என நரசிம்மன் தெரிவித்தார்.

"சுவற்றின் மீது எச்சில் உமிழ்வதற்கு எந்த காரணமும் இல்லை" என்கிறார் அவர்.

அவர்களின் உபதேசத்திற்கு விளைவாக, அவர்களை வித்தியாசமாக அணுகுவது முதல் கோபத்தை வெளிப்படுத்துவது வரை பல அனுபவங்களை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

"உனக்கு என்ன பிரச்னை? இது உன் அப்பன் வீட்டு சொத்தா?" என ஒருவர் தன்னைப் பார்த்துக் கேட்டதை நரசிம்மன் நினைவுகூர்கிறார்.

ஆனால், இந்தியா முழுதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா அலை, சில விஷயங்களை மாற்றியுள்ளது என்கிறார் ப்ரீத்தி நரசிம்மன். எச்சில் உமிழ்ந்த சிலர் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

"பெருந்தொற்று குறித்த அச்சம் அவர்களை யோசிக்க வைத்துள்ளது," என்றார் அவர்.

'எச்சில் உமிழும் நாடு'

சாலைகளில் எச்சில் துப்புவதற்கு எதிரான போராட்டம் எப்போதுமே அரை மனதுடனே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மும்பை நகரம் இதனை கடினமான முறையில் அணுக முயற்சித்துள்ளது. பொது இடங்களை அசுத்தப்படுத்துவோரையும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்போரையும் தன்னார்வ ஆய்வாளர்கள் பொது இடங்களில் அப்படி செய்யக்கூடாது என்று கண்டிக்கிறார்கள்.

ஆனால், எச்சில் துப்புதல் குற்றம் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் எச்சில்லை துடைக்கும் நபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில நகரங்கள் தெருக்களில் எச்சில் துப்பும் ஆண்களைக் கொண்டே அதனை துடைக்க முயற்சித்தன

அதன்பின் கொரோனா வந்தது. காற்றில் பரவும் அதன் ஆபத்து, இந்திய ஆண்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் எச்சில் துப்புவதுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், எச்சில் துப்புவோருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கும் செல்ல நேர்ந்தது.

பிரதமர் நரேந்திர மோதியும், "பொது இடங்களில் எச்சில் துப்ப வேண்டாம். அது தவறு என நமக்குத் தெரியும்" என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

இது கடந்த 2016ஆம் ஆண்டில் பொது இடத்தில் எச்சில் துப்புவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துடன் முரண்பாடானதாக இருந்தது.

"இந்தியா எச்சில் துப்பும் வழக்கத்தைக் கொண்டவர்களின் நாடு. நாம் சலிப்பாக இருக்கும்போது எச்சில் துப்புகிறோம்; நாம் சோர்ந்திருக்கும் போது எச்சில் துப்புகிறோம்; நாம் கோபமாக இருக்கும்போது எச்சில் துப்புகிறோம் அல்லது வெறுமனே கூட எச்சில் துப்புகிறோம். நாம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அனைத்து நேரங்களிலும் எச்சில் துப்புகிறோம்," என அந்த அமைச்சர் பேசினார்.

அவர் கூறியது சரியானதும் கூட என தோன்றுகிறது. எச்சில் துப்புவதற்காக இந்தியாவின் சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சாலையோரங்களில் ஆண்கள், சாதாரணமாக தலையை சில அங்குலம் நகர்த்தி எளிதாக எச்சில் துப்புகிறார்கள்; கார், இரு சக்கர வாகனம், ஆட்டோக்களை ஓட்டும் ஆண்கள், டிராஃபிக் சிக்னல்கள் என எங்கு செல்லும்போதும் அவர்கள் உமிழத் தயங்குவதில்லை.

இந்த செயல் அடிக்கடி ஒரு எச்சரிக்கையுடன் வருகிறது. தங்கள் தொண்டையிலிருந்து ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பி அவர்கள் எச்சிலை உமிழ்கின்றனர்.

மேலும், இந்த பழக்கம் ஆண்களிடமே அதிகம் காணப்படுகிறது. இந்திய ஆண்கள் தங்கள் உடல் அமைப்புடன் வசதியாக உள்ளனர் என்கிறார், கட்டுரையாளர் சந்தோஷ் தேசாய், "தங்கள் உடலிலிருந்து எதையும் வெளியேற்றும்போதும் அவர்கள் வசதியாகவே உணருகின்றனர்."

"பொதுவெளியில் தன்னை அறியாமல் தமது உடல் அயற்சியை விடுவித்துக் கொள்வதை எளிதாக அவர்கள் செய்கிறார்கள்," என்கிறார் அவர்.

"நான் அசௌகரியமாக இருந்தால், உடனடியாக அதற்கு எதிராக செயலாற்றுவேன். சுயமாக கட்டுப்படுத்திக்கொள்வது என்பது உண்மையில் இல்லை."

"நச்சுத்தன்மை வாய்ந்த புஜபலத்துக்கு ஊக்கமளிக்கும் செயலே எச்சில் துப்புதல்," என்கிறார் இந்திய செய்தித்தாளான தி டெலகிராஃப் துணை ஆசிரியர் உத்தாலக் முகர்ஜி.

பொதுவெளியில் எச்சில் துப்பும் நபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஆனால், ஏன் பொது இடத்திலேயே எச்சில் துப்புகின்றனர்?

கோபத்தின் வெளிப்பாடு முதல் 'பொழுதுபோக்கு' (அதை தவிர செய்வதற்கு அவர்களிடம் சிறந்த செயல்கள் இல்லை) அல்லது "எச்சில் துப்புவதை தங்களது உரிமையாக அவர்கள் கருதலாம்" உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம் என்கிறார், நரசிம்மன்.

வரலாற்றாசிரியர் முகுல் கேசவனின் கூற்றுப்படி, இது "மாசுபாட்டின் மீதான இந்தியர்களின் வெறுப்புணர்வு மற்றும் அதை எவ்வாறு வெளிப்படுத்துவது" என்பதிலிருந்தும் உருவாகிறது.

சில வரலாற்றாசிரியர்கள் இந்த வெறுப்புணர்வு இந்து மற்றும் உயர்சாதி சிந்தனையான, வீட்டிற்கு வெளியே அழுக்குகள் எதையும் வெளியேற்றுவதன் மூலம் உடல் தூய்மையைப் பேணுவதுடன் தொடர்புடையதாக இருக்கலாம், என நம்புகின்றனர்.

"எச்சில் துப்புவதற்கான அணுகுமுறைகள் சுகாதாரம் பற்றிய கேள்விகளை மீறுகின்றன," என்கிறார் முகர்ஜி. "ஒரு டாக்சி டிரைவர் ஒருமுறை என்னிடம் கூறினார், 'எனக்கு மோசமான ஒரு நாள் அமைந்தது, எனவே, அந்த அனுபவத்தை வெளியேற்ற விரும்பினேன். அதை எச்சிலாக வெளிப்படுத்தினேன்," என்றார் அவர்.

எச்சில் துப்புவதற்கு எதிரான போர்

மக்கள் எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிய ஒரு காலம் இருந்தது. இந்தியாவில் மன்னராட்சி காலங்களில் அரசவைகளில் எச்சில் துப்புவது ஒரு வழக்கமாக இருந்தது. மேலும், பல வீடுகளில் அழகிய எச்சில் குவளைகள் ஒரு மையப் பொருளாக இருந்தன.

ஐரோப்பாவில் இடைக்காலத்தில், உணவு உண்ணும் போது, ​​மேஜைக்கு அடியில் எச்சில் துப்பலாம். "உமிழ்நீரை மீண்டும் உறிஞ்சுவது" "பண்பற்றது" என எராஸ்மஸ் எழுதினார்.

1903ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மருத்துவ இதழ் அமெரிக்காவை "உலகின் எதிர்பார்ப்பு மிக்க சூறாவளி மையங்களில்" ஒன்று என்று பெயரிட்டது. ஒரு மசாசூசெட்ஸ் சுகாதார ஆய்வாளர், 1908 ஆம் ஆண்டு அவர் சென்ற ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தையல்காரர்கள் ஏன் தரையில் எச்சில் துப்புகிறார்கள் என்று கேட்டதற்கு, "நிச்சயமாக அவர்கள் தரையில் தான் துப்புவார்கள்; அவர்கள் வேறு எங்கே துப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், தங்கள் பாக்கெட்டுகளிலா?" என்ற பதிலைப் பெற்றதாகக் கூறினார்.

இந்த விஷயங்கள் பிரிட்டனில் சிறந்ததாக இல்லை, எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் டிராம் கார்களிலும் மக்கள் எச்சில் துப்பினார்கள். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என மருத்துவச் சமூகம் வலியுறுத்தியது.

1880-களில் பொதுவெளியில் எச்சில் துப்புவதை தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக நியூயார்க் மாறியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1880-களில் பொதுவெளியில் எச்சில் துப்புவதை தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக நியூயார்க் மாறியது.

காசநோய் பரவியபோது, மேற்கத்திய நாடுகளில் இப்பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு பேரடியாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிருமி கோட்பாடு பற்றிய வளர்ந்து வரும் விழிப்புணர்வு அவர்கள் அந்த பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கியது என விரைவில் வெளிவரவிருக்கும் பாண்டம் பிளேக்: ஹௌ டியூபர்குளோசிஸ் ஷேப்ட் ஹிஸ்டரி (Phantom Plague: How Tuberculosis Shaped History) என்ற புத்தகத்தின் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான வித்யா கிருஷ்ணன் கூறுகிறார்.

"கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வு புதிய சமூகப் பழக்கவழக்கங்களுக்கு வழிவகுத்தது. மக்கள் தங்கள் தும்மல் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தவும், கைகுலுக்குவதையும் குழந்தையை முத்தமிடுவதை நிராகரிக்கவும் கற்றுக்கொண்டனர். சுகாதாரம் பற்றிய உள்நாட்டு விழிப்புணர்வு வெளியிலும் பரவியது."

வித்யா கிருஷ்ணன் கூறுகையில், "காசநோய் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமான அளவில் பொதுவெளியில் எச்சில் துப்புவதில் ஈடுபட்ட ஆண்களிடம் "நடத்தை மாற்றத்திற்கு" இந்த விழிப்புணர்வு வழிவகுத்தது.

ஆனால், இந்தியா இந்த பழக்கத்தைக் கடக்க பல தடைகள் உள்ளன என்கிறார் வித்யா கிருஷ்ணன்.

இந்தியாவின் மாநிலங்கள் இந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக முயற்சி செய்ததில்லை. எச்சில் துப்புவது இன்னும் சமூகத்தால் காணப்படுகிறது - அது புகையிலை மெல்லுவது, விளையாட்டு வீரர்கள் கேமிரா முன்பு எச்சில் துப்புவது அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது ஆண்கள் துப்புவது போன்ற பாலிவுட் சித்தரிப்புகள் உள்ளிட்டவை என நீளுகிறது.

நவீன எச்சில் குவளைகளின் பற்றாக்குறை குறித்துப் பேசிய நரசிம்மன், "எனக்கு எச்சில் துப்ப வேண்டுமென்றால், நான் எங்கே துப்புவது?" என்கிறார்.

"கொல்கத்தாவில் சிறுவயதில், மணல் நிரப்பப்பட்ட விளக்குக் கம்பங்களில் எச்சில் துப்புவது எனக்கு நினைவிருக்கிறது. அப்படி செய்தால் எச்சில் விரைவாக மறைந்து விட்டது. பிறகு மக்கள் எல்லா இடங்களிலும் துப்புகிறார்கள்."

பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு எதிரான விழிப்புணர்வு ஓவியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த விஷயத்தில் மேலும் பெரிய சவால்கள் இருக்கின்றன. "பெரிய அளவிலான நடத்தை மாற்றம் அல்லது பொது சுகாதார தலையீட்டால் சாதி, வர்க்கம் மற்றும் பாலினத்தவர்களை கட்டுப்படுத்தி விட முடியாது," என்கிறார் வித்யா கிருஷ்ணன்.

"இந்தியாவில், குளியலறை அணுகல், ஓடை போன்ற நீர் வசதி மற்றும் நல்ல குழாய்கள் அனைத்தும் சிறப்புரிமைக்கான விஷயங்கள்."

மனிதர்கள் ஏன் எச்சில் துப்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் வெறுமனே அவர்களை தண்டிப்பதால், இப்பழக்கத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுநோய் பரவி இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட பழக்கத்தை குணப்படுத்தும் ஆர்வம் குறைந்து வருகிறது.

ஆனால், ராஜாவும் ப்ரீத்தி நரசிம்மனும் தெருக்களில் எச்சில் துப்புவதற்கு எதிரான பிரசாரத்தில் சளைக்காமல் செயல்படுகின்றனர். கொரோனா பரவலுக்கு எச்சில் உமிழ்வது பங்களிப்பைத் தரும் என்று பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை, இதனை முழுதும் சரிசெய்ய முடியாவிட்டாலும், சிறிது மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

"நாங்கள் நேரத்தை வீணடிக்கிறோம் என்றாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் நாங்கள் முயற்சிக்கிறோம்," என்கிறார் நரசிம்மன்.

"எங்களுடைய முயற்சியால் 2% மக்களிடம் எச்சில் துப்பும் அவர்களின் மனப்பான்மை மாறினால் கூட, நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என கருதுவோம்," என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: