தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர்.
கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் கடற் கொள்ளையர்களால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து வெள்ளிக்கிழமை பகலில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் சிவா, சின்னத்தம்பி, சிவக்குமார் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரு ஃபைபர் படகுகளில் அவ்வழியாக வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மீனவர்களை வழி மறித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த படகில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களின் படகில் கத்தியுடன் ஏறிய அடையாளம் தெரியாத நபர் தமிழக மீனவர் படகில் இருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சிவக்குமாரை அந்த சந்தேக நபர்கள் கத்தியால் தாக்கியதாகவும் அதில் சிவக்குமார் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் படகிலிருந்த சிவா மற்றும் சின்னத்தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
படகில் இருந்த 400 கிலோ வலை, திசைகாட்டும் ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்த மர்ப நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய மீனவர்கள் இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாக கரை திரும்பிய மீனவர் சிவக்குமார் தெரிவித்தார்.
காயமடைந்த மீனவர்களை, சக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடரும் தாக்குதல்கள்

இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரிய குழுக்கள், நடுக்கடலில் இதுபோன்ற தாக்குதலை அடிக்கடி நடத்துகிறார்கள் என்று கூறி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 500க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிபிசி தமிழிடம் பேசிய ஆறுகாட்டுத்துறை மீனவர் ரஞ்சித், "தமிழக கடல் பகுதியில் மீன் வளம் இல்லாததால் மீன் பிடிப்பதற்காக இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்படுகிறார்கள்," என்றார்.
அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சென்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் இலங்கை கடல் வளம் அழிக்கப்படுவதாக ஏற்கெனவே கூறப்படுகிறது.
"இந்த விவகாரத்தில் விசைப்படகு மீனவர்களால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்கள் அவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாததால் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வேளாங்கண்ணி, புஷ்பவனம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஃபைபர் படகுகளில் செல்லும்போது, அந்த மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் திட்டமிட்டே தாக்குதல் நடத்துகின்றனர்," என்றார் அவர்.
"தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், படகில் உள்ள மீனவர்களின் கைக்கடிகாரம், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிப்பதுடன் தமிழக மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே நடுக்கடலில் பிரச்னை ஏற்பட்டு அது வன்முறையாக மாறுகிறது. யாரோ சில மீன்பிடி விசைப்படகுகள் செய்யும் தவறுக்கு எங்களைப்போன்ற ஃபைபர் படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்."
இதற்கு தீர்வாக இலங்கை-இந்திய சர்வதேச கடல் எல்லையில் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை நிறுத்தினால் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வருவதை தடுக்க முடியும். அதே போல் இலங்கை கடற்பகுதிக்குள் செல்லும் தமிழக மீனவர்களும் தடுக்கப்படுவார்கள்.
இது குறித்து பலமுறை கடலோர காவல் படையிடம் மீனவர்கள் தரப்பில் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அப்படியே இந்திய கடலோர காவல்படை கப்பல் வந்தாலும் சர்வதேச கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி விடுகின்றனர். ரோந்து செல்வதில்லை இதனால் நடுக்கடலில் ஃபைபர் படகு மீனவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் மீன்பிடி தொழில் செய்ய நேரிடுகிறது.
காரைக்கால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கும் தமிழக மீன்பிடி விசைப்படகுளை தடுத்து எல்லை தாண்டாமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண முடியும். இல்லையேல் இரு நாட்டு மீனவர் இடையேயான பிரச்னை தொடர்ந்து நடைபெற்று வன்முறைகளில் முடியும் சூழ்நிலை ஏற்படும் என்கிறார் மீனவர் ரஞ்சித்.
வன்முறைக்கு யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இது குறித்து இலங்கை வடமாகாண மீனவ சங்க தலைவர் அன்னராசா பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்,
கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடித்ததுடன், அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, படகில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தினர்.
அதேபோல் தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பது மட்டுமல்லாமல் கடல் வளத்தையும் அழித்து, மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் கடலில் இரு நாட்டு மீனவர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையேயான பிரச்சனை அபாய கட்டத்தை நெருங்கி உள்ளது. எனவே இலங்கை மீன்பிடி அமைச்சர், இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மீனவர் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க தலைவர் அன்னராசா கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
வாழ்வாதாரத்தை இழந்த இலங்கை மீனவர்கள்
மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய யாழ்பாணம் மீனவ சங்கதலைவர் வர்ணகுலசிங்கம், தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதால் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறையில் இருந்து கட்டைக்காடு வரையிலான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
"கடந்த இரண்டு மாதங்களாக தமிழக மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கை மீனவர்கள் தங்களது பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கரையோரங்களுக்கு வரக்கூடிய காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்."
இதனை கண்டித்து சில இலங்கை மீனவர்கள் கற்களை வீசி நடுக்கடலில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழக மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்திருக்கலாம் என்கிறார் வர்ணகுலசிங்கம்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் தொடரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள்
- சீனா மீண்டும் சோஷியலிசத்தை நோக்கித் திரும்புவதாக தோன்றுவது ஏன்?
- உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி?
- 'நினைத்ததைவிட மோசம்' - காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை
- ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உரை - முக்கிய விவரங்கள் இதோ
- DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








