மீன்வள மசோதா 2021: பாதிப்பு தரும் 3 விஷயங்கள் - முழு விவரம்

மீனவள மசோதா
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவுக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. `இந்த சட்டத்தால் ஏற்படப் போகும் பாதகங்களை மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். அவரும் திருத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்கின்றனர் தமிழ்நாடு மீனவர்கள்.

அரசின் மீன்வள சட்ட மசோதாவால் என்ன நடக்கும்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சட்டத்திருத்த மசோதாக்கள் உள்பட சில அவசர சட்டங்களை இயற்றுகிறது இந்திய அரசு. அதில் மிக முக்கியமான ஒன்றாக, இந்திய கடல்சார் மீன்வள சட்டம் (The Marine Fisheries bill 2021) பார்க்கப்படுகிறது. `இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படும்' எனக் கூறி நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

`இந்த சட்டத்தின் மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம் உள்பட அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்' என்பதால் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, `இந்தச் சட்டத்தில் யார் மீனவர்கள் என்பதும் வரையறை செய்யப்படவில்லை' என்ற காரணமும் முன்வைக்கப்படுகிறது.

இந்திய அரசின் இந்தச் சட்டத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு விதமான போராட்டங்களை மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, புதன்கிழமையன்று மீனவர்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் 50 பேர் டெல்லி சென்றனர்.

இதை அறிந்த போலீசார், அவர்களை ரயில் நிலையத்திலேயே கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், மாலை விடுவிக்கப்பட்டனர்.

இதன்பிறகு மாலை 5.30 மணியளவில் இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை சந்திப்பதற்கு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தச் சந்திப்பில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சே.சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் கனிஷ்டன், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த அன்பு, ராயப்பன், செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாதிப்பை ஏற்படுத்தும் 3 விஷயங்கள்

மீனவர்கள் மசோதா

பட மூலாதாரம், Getty Images

``அமைச்சர் உடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது?" என மீனவர் சின்னத்தம்பியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

`` இந்திய கடல்சார் மீன்வள சட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகளில் முக்கியமான 3 விஷயங்களைப் பட்டியலிட்டோம். இந்த சந்திப்பின்போது, ` நீங்கள் கொண்டு வரப் போகும் சட்டத்தில் இன்ஜின் பொருத்தப்படாத படகுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு கொடுத்திருக்கிறீர்கள். இன்ஜின் பொருத்தப்படாத படகுகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. அதன் எண்ணிக்கைகள் மிக மிகக் குறைவு. பாரம்பரிய மீனவர்களை எல்லாம் விசைப்படகுக்குப் பழக்கி 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது' என்றோம்.

`இன்ஜின் பொருத்தப்படாத படகுகளை எங்கள் பகுதிகளில் பார்த்திருக்கிறேனே?' என அமைச்சர் தெரிவித்தார். ` அவையெல்லாம் அரிதிலும் அரிதானவையாக உள்ளன. சில ஆயிரம் பேர்தான் இன்ஜின் இல்லாத படகுகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, படகின் நீளம், இன்ஜினின் குதிரைத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து விதிவிலக்கு கொடுத்தால் சரியாக இருக்கும்.

குறிப்பாக, பாரம்பரிய மீனவர்களின் படகுகளில் 110 குதிரைத் திறன் வரையில் விதிவிலக்கு கொடுக்க வேண்டும். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள்தான் அதிகப்படியான குதிரைத் திறனை பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு வரையறையைக் கொண்டு வர வேண்டும்' என்றோம். `இது சரியான விஷயம்தான். இதைப் பற்றி அறிந்து கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது. படகின் நீளம், இன்ஜினுக்கான திறனில் எவ்வளவு கொடுப்பது என்பதைத் தீர்மானித்துவிட்டு மசோதா திருத்தத்தில் இதை எடுத்துக் கொள்கிறோம்' என உறுதியளித்தார்.

நாங்கள் செய்தால் 'தவறு' என்கிறார்கள்

மீன்வள மசோதா

பட மூலாதாரம், Getty Images

அடுத்ததாக, `கடல் மீன்வள சட்டத்தில் மீனவர்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான கமிட்டியில் மீனவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்' எனக் கூறிவிட்டு சில கோரிக்கைகளை முன்வைத்தோம்.

முதலாவதாக, பாரம்பரிய மீனவர்களுக்கான உரிமைப் பாதுகாப்பு என்பது சட்டமாக இயற்றப்பட வேண்டும். மற்ற பழங்குடி மக்களுக்கு என உரிமைகள் உள்ளன. கடல் பழங்குடிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். காரணம், நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு சட்டங்களாகப் போட்டுக் கொண்டே வருகிறீர்கள். கடல்சார் மீன்வள சட்டத்தால் பாரம்பரிய மீனவர்கள் என்ற இனமே இல்லாமல் போய்விடும்' என்றோம்.

இதனை எதிர்பார்க்காத அமைச்சர், ` நாங்கள் சட்டத்தில் சேர்த்துக் கொண்டால் மாநில அரசுகளிடம் இருந்து எதிர்ப்பு வருகிறது. அதனால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். பாரம்பரிய மீனவர்களுக்கான உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை மாநிலத்தில் நிறைவேற்றிவிட்டுக் கொண்டு வாருங்கள். மத்தியில் நாங்கள் அதனை நிறைவேற்றுகிறோம். அதேபோல், மீனவர்களை பழங்குடிகளாக அறிவிப்பதை மாநிலத்தில் நிறைவேற்றிவிட்டுக் கொண்டு வாருங்கள். நாங்கள் நிறைவேற்றினால், மாநிலத்தில் இருந்து தவறு தவறு எனக் குரல் கொடுக்கிறீர்கள். அதனால் மாநில அரசிடம் பேசுங்கள்' என்றார்.

எதற்காக இப்படியொரு சட்டம்?

அப்போது இடைமறித்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, `கடல்சார் மீன்வள சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிபோகிறதே?' என்றார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ` நாங்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம். ஆனால், இதை அமல்படுத்த வேண்டிய இடத்தில் மாநில அரசுகள்தான் உள்ளன. இதனால் யாருடைய உரிமையும் பறிபோகப் போவதில்லை' என்றார்.

நாங்கள் உடனே, `இதில் நோடல் அதிகாரி உள்பட அனைவரையும் மத்திய அரசுதானே நியமிக்கிறது' என்றோம். `இல்லையில்லை. தற்போது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தில் மாநில அரசு எந்தளவுக்கு செயல்படுகிறதோ, அதே அளவுக்குத்தான் நாங்கள் செயல்படுத்துவோம். இலங்கை, பர்மா, இந்தோனீஷியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இப்படியொரு சட்டம் இல்லை. மாநிலங்களில் மட்டும் சட்டம் உள்ளது. இதனை ஆராய்ந்த பிறகுதான் அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்துதான் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருகிறோம்' என்றார்.

மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா?

மீன்வள மசோதா

பட மூலாதாரம், Getty Images

முடிவில், `சட்டம் இயற்றுவதில் எங்களுக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை, இந்திய நாட்டுக்கு என மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் வரட்டும். அதேநேரம், பாரம்பரிய மீனவர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் ஒரு சட்டம் கொண்டு வாருங்கள்' எனத் தெரிவித்தோம். கூடவே, ஆழ்கடல் மீன்பிடிப்பதில் உள்ள சிரமங்களையும் எடுத்துக் கூறினோம். `இதுகுறித்து பிறகு பேசுவோம்' என அமைச்சர் கூறிவிட்டார்" என்றார்.

இதையடுத்து, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மத்திய அரசின் புதிய சட்டம் தொடர்பாக எங்களிடம் பேசிய அமைச்சர், `இதில் மாநில அரசுகளுக்குத்தான் அதிக அதிகாரங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்கள் மீனவர்களை பாதிக்காத அளவுக்குத் தீர்மானம் நிறைவேற்றி பார்த்துக் கொள்ளலாம். எந்த அதிகாரத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை' என்றார். இதில் உள்ள பாதகங்களை நீக்குமாறு கூறியுள்ளோம்.

குறிப்பாக, `பாரம்பரிய மீனவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும்' என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்தால் பாதிப்பு வரும் எனக் கூறி போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களையே நேரில் அழைத்துச் சென்று பேச வைத்தேன். மீனவர்களும், தங்களுக்கு எழும் சந்தேகங்களை விரிவாக எடுத்துக் கூறினார்கள். மொத்தத்தில் நல்ல சந்திப்பாக அமைந்தது" என்றார்.

காணொளிக் குறிப்பு, துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :