நரேந்திர மோதி ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஏன்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் ஊடக சுதந்திரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ள எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களான அமைப்பு (ஆர்எஸ்எஃப்) ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் ஒருவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பட்டியலிட்டுள்ளது.
Reporters Without Borders (RSF) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தைக் கடுமையாக ஒடுக்கும் நாட்டுத் தலைவர்களின் சித்திரத்தை gallery of grim portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. 37 நாட்டுத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சித்திரமும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முந்தைய இது போன்ற பட்டியல் 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஐந்தாண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில் 17 பேர் புதுமுகங்கள். இந்தத் தலைவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளில் ஊடங்களுக்கு தணிக்கையை அறிமுகப்படுத்துவது, பத்திரிகையாளர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பது, பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை ஏவுவது போன்றவற்றில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான நாடுகள் பத்திரிகையாளர்கள் இயங்குவதற்கு மோசமான நாடுகள் என்றும் பல நாடுகள் மிக மோசமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 13 நாடுகள் ஆசியா - பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.
"ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கையாளுகின்றனர். சிலர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஆணைகளை இடுவதன் மூலம் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். சிலர், கடுமையான சட்டங்களின் மூலம் இந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்பது போன்ற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்" என ஆர்.எஸ்.எஃப்.வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளார். சௌதியில் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்படுவதோடு, கடத்தி கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்படுவதும் உண்டு. ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.
பிரேசிலின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். விக்டர் ஆர்பனைப் பொறுத்தவரை 2010லிருந்தே ஊடக சுதந்திரத்தையும் பன்முகத் தன்மையையும் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறார்.

பட மூலாதாரம், EPA
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை எக்ஸிக்யூட்டிவான காரி லாம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர், ஊடகங்களை ஒடுக்குவதை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார். வங்க தேச அதிபர் ஷேக் ஹசீனாவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வங்கதேசத்தில் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின்படி 70க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறைபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களின் பட்டியலை 2001லிருந்து ஆர்எஸ்எஃப் அமைப்பு வெளியிட்டு வருகிறது. தற்போதுவரை ஐந்து பட்டியல்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், 7 பேர் தொடர்ச்சியாக இந்த ஐந்து பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் ஊடக சுதந்திரம் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது?
2001ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஊடகங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை தனது மாநிலத்தில் செய்துபார்த்துவிட்டு, 2014ல் இருந்து அதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியதாக ஆர்எஸ்எஃப் குற்றம்சாட்டுகிறது. மிகப் பெரிய ஊடகங்களை நடத்தும் பணக்காரர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
உரிமையாளர்களுடன் பிரதமர் நெருக்கமாக இருக்கும்போது, அந்த ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் அரசை விமர்சித்து எழுத பயப்படுவார்கள். மற்றொரு பக்கம், சமூகத்தை பிளபுபடுத்தக்கூடிய, தவறான தகவல்கள் நிறைத்த அவரது பேச்சுகளுக்கு ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் தரச் செய்வது. இதற்குப் பிறகும் அவரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களையும் ஊடகங்களையும் கவனித்தால் போதுமானது.
பத்திரிகையாளர்கள் எப்படி அச்சுறுத்தி கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதை விரிவாக விளக்குகிறது ஆர்எஸ்எஃப்.

பட மூலாதாரம், AFP
"இதற்காக, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக, தேசத் துரோகச் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்படும் பத்திரிகையாளர்கள், ஆயுள் தண்டனை வரையிலான தண்டனை கிடைக்கக்கூடிய அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். இதற்குப் பிறகு, மோதியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் கொல்லப்பட வேண்டுமென்றும் இந்தத் தாக்குதல்களின்போது கூறப்படும்.
இந்துத்துவத்தை விமர்சித்துவந்த கௌரி லங்கே என்ற பத்திரிகையாளர் 2017 செப்டம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மோதியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் "sickular" என்ற வார்த்தையால் அடையாளப்படுத்தப்படுவார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும். அவர்கள் பிரதான ஊடகங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள்.
பெண் பத்திரிகையாளர்கள் presstitutes என்ற வார்த்தைகளால் அவமானப்படுத்தப்படுவார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் பொது வெளியில் பகிரங்கப்படுத்தப்படும்" என்கிறது ஆர்எஸ்எஃபின் அறிக்கை.
"இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது. இரு விதங்களில் ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒன்று, பத்திரிகையாளர்களை நேரடியாக கைதுசெய்து சிறையில் வைப்பது. பெரும் எண்ணிக்கையில் வழக்குகளைத் தொடர்ந்து செயல்பட விடாமல் செய்வது. மற்றொன்று, மிக நவீனமான முறையில் முழு ஊடகத் துறையையும் கட்டுப்படுத்துவது. இப்போது அதைத்தான் செய்கிறார்கள். அதனால்தான் அதிக பயத்தைத் தருகிறது" என்கிறார் தி இந்து நாளிதழின் வாசகர் தரப்பு ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
கடந்த சில ஆண்டுகளில் அச்சுப் பத்திரிகைகள் தொடர்பான எல்லாவற்றிலும் வரி அதிகரிக்கப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதை பன்னீர்செல்வன் சுட்டிக்காட்டுகிறார். "அதனால்தான் பயம் அதிகரித்திருக்கிறது. பத்திரிகை துறைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு இது தெரியாது. அச்சு இதழ்கள் மட்டுமல்ல இணைய இதழ்களும் முடக்கப்படுகின்றன. உதாரணமாக, காஷ்மீர் மக்கள் சந்தித்த அவலங்கள் பற்றி மற்றவர்கள்தான் படித்தோம். அவர்களால் படிக்க முடியவில்லை. ஏனென்றால், அந்தப் பிராந்தியம் முழுவதும் இணையம் துண்டிக்கப்பட்டது. இது போன்ற அழுத்தங்கள் தரும் அச்சம் மிக மிக அதிகம். இதனால்தான் யாருமே, கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் எந்த ஊடகமுமே விரிவாக்கத்தில் ஈடுபடவில்லை. எல்லோருமே தங்கள் செயல்பாட்டை சுருக்கியிருக்கிறார்கள். இந்த மிக நுணுக்கமான அழுத்தம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
இதேபோல இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 142வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலே உலக அளவில் ஊடக சுதந்திரத்திற்கான முக்கியக் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 136வது இடத்திலும் 2018ல் 138வது இடத்திலும் 2019ல் 140 இடத்திலும் கடந்த ஆண்டு 142வது இடத்திலும் இந்தியா இடம்பெற்றிருந்தது.
நார்வே, ஃபின்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து போன்ற நாடுகள் முதல் சில இடங்களையும் ஜனநாயக அரசுகள் இல்லாத கினியா, எரித்ரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் கடைசி இடங்களையும் இந்தப் பட்டியலில் பிடிக்கின்றன.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு சிவப்பு நிறம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் நிலைமை "மோசமாக" இருக்கிறது என்பதாகும். இரான், சவூதி போன்ற நாடுகளுக்கு கறுப்பு நிறம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதாகும்.
ஆனால், இதை ஏற்க முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மாலன். "இந்தியாவில் ஊடக கலாசாரம் மிக வலுவானது. அதன் சுதந்தரத்தை அவ்வளவு எளிதில் முடக்கிவிட முடியாது. பல வருடங்களாக ஒரு விதமான முறைக்கு பழகிவிட்டோம். இந்த அரசு புதிதாக விதிக்கின்ற விதிமுறைகள், நமக்குக் கட்டுப்பாடுகளைப் போலத் தோன்றுகின்றன. ஊடக சுதந்திரம் இல்லையென்று, டிவி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில்தானே சொல்கிறார்கள். பிறகு எப்படி சுதந்திரம் இல்லையென சொல்ல முடியும்? அந்தப் பட்டியலில் பிரதமரின் பெயர் இடம்பெற்றது சரியானதல்ல" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மாலன்.
பாரீசிலிருந்து செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான Reporters Without Borders (RSF) உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மீதும் ஊடகத் துறை மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை பதிவுசெய்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












