இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறும் எல்ஏசி கண்காணிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி நிருபர்
கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து எல் ஏ சி, (அசல் கட்டுப்பாட்டுக் கோடு)-யில் பதற்றம் நிலவியது.
இந்தப் பதற்றம் காரணமாக, எல்லைப்பகுதியில் சீனாவைப் போல் இந்தியாவும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும் என்று மூலோபாய வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள்.
இன்னும் சில வல்லுநர்கள், சீனா இந்தியாவின் எல்லையில் திடீரென்று எல்லாவற்றையும் உருவாக்கவில்லை; கடந்த இரண்டு தசாப்தங்களில், அது படிப்படியாக உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறார்கள்.
அண்மையில், ப்ளூம்பெர்க்கில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், சீன எல்லையில் இந்தியா, தனது துருப்புக்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
"இந்தியா 50 ஆயிரம் கூடுதல் துருப்புக்களை 'அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு' (எல்ஏசி) பகுதியில் நிறுத்தியுள்ளது." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பிலிருந்தும் இவ்வளவு பெரிய அளவில் துருப்புகளை நிறுத்துவது கவலை அளிக்கிறது என்று இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடாவை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், எல்லையின் இருபுறமும் உள்ள ராணுவ வீரர்கள் தங்களின் ஆதிக்கத்தைக் காட்ட முயற்சிப்பார்கள் என்றும், இந்த நிலையில், ஒரு சிறிய சம்பவம் கூட நிலைமையைக் கட்டுக்கடங்காமல் செய்து விடலாம் என்றும் ஹூடா கூறியுள்ளார்.
200 கி.மீட்டருக்கு ஒரு ஏர் ஸ்ட்ரிப்

பட மூலாதாரம், Getty Images
மூலோபாய விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் அபிஜித் மித்ரா ஐயர் பிபிசியிடம், "தாமதமாகவே இருந்தாலும், இந்தியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுடனான எல்லையில் நிறைய வேலைகளைத் தொடங்கியுள்ளது. என்றாலும் சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது," என்று கூறினார்.
"சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சாலைகளின் வலையமைப்பை அமைத்தது மட்டுமல்லாமல், எல்லைப் பகுதி முழுவதையும் வான்வழிப் பாதைகளுடன் இணைக்கும் பணிகளையும் செய்துள்ளது," என்கிறார் அபிஜித்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மூலோபாய விவகாரங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறார் ஐயர்.
போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் புறப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் ஒவ்வொரு 200 கிலோமீட்டருக்கும் ஒரு வான்வழிப் பாதையை சீனா உருவாக்கியுள்ளது என்று அவர் கூறுகிறார்.
"இந்த உயரத்தில், இத்தனை கட்டமைப்புகளை உருவாக்குவது சீனாவின் ராணுவ பலத்தை நிச்சயம் அதிகரிக்கும். திபெத்திய பீடபூமி பகுதிகளில் மட்டுமே, சீனா ஒவ்வொரு 250 முதல் 300 கிலோ மீட்டருக்கும் ஒவ்வொரு வான்வழிப் பாதையை நிறுவியுள்ளது, ஆனால், அருணாசலுடனான எல்ஏசி பகுதியில், தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், 100 முதல் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு வான் வழிப் பாதையை அந்நாடு உருவாக்கியுள்ளது..
இந்திய எல்லையில் சீன தரப்பில் எத்தனை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் தனது வீரர்களின் இருப்பை பன்மடங்கு சீனா அதிகரித்துள்ளது என்ற தகவல் இந்திய ராணுவ வட்டாரத்திற்கு நிச்சயம் வந்துள்ளது.
"பீடபூமியின் அணுக முடியாத பகுதிகளில் போர் விமானங்களை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் வெடிகுண்டு-தடுப்பு பதுங்கு குழிகள் தயாரிக்கப்படுகின்றன. இது தாக்குதல் நடந்தால் வீரர்களைக் காக்க உதவும். இது தவிர, டேங்கர்கள் மற்றும் ஏவுகணைகளை எடுத்துச் செல்ல பயன்படும் பல சுரங்கப்பாதைகளையும் எல்ஏசி பகுதியில் சீனா அமைத்துள்ளது என்ற தகவலும் இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு வந்துள்ளது," என்கிறார் ஐயர்.
சீனாவின் அதிகாரபூர்வச் நாளிதழான குளோபல் டைம்ஸ், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெங் வென்பிங்கை மேற்கோள் காட்டி, "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலைமை இயல்பாக இருக்கிறது, எல்லையில் நிலைமையை இன்னும் இயல்பாக்குவதற்கு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகள் மேம்படுமா?

பட மூலாதாரம், Getty Images
எல்லை பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளும் 12 வது சுற்று தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு நன்கு தயாராக வேண்டும் என்று ஷாங்காயை தளமாகக் கொண்ட சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குநர் ஜாவோ கென்செங் குளோபல் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான வழிகள் மூடப்படாமல் இருப்பது ஒரு நல்ல விஷயம் என்றும், இரு நாடுகளும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் மூலோபாய விவகார நிபுணரான ஹர்ஷ் வி பந்த், "பேச்சுவார்த்தைகள் என்பது உண்மையில் சீனா செய்த மிகப்பெரிய மோசடி," என்று கருதுகிறார்.
'ஹிந்தி-சீனி பாய்-பாய்' என்ற முழக்கத்தை எழுப்பிக்கொண்டே 1962-வில் ஒரு போரை நடத்தியது சீனா. கடந்த ஐந்து தசாப்தங்களாக, பாகிஸ்தானுடனான எல்லை தான் மிகவும் பதற்றம் நிறைந்தது என்று இந்தியா கருதி வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்தியா தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது.
சீனா இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணும் அதே சமயத்தில், எல்லையில் தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில். இரண்டு தசாப்தங்களாக இந்தியா ராஜீய உறவுகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டிருந்த காலத்தில், சீனா எல்லையில் தனது செயல்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. சீனாவால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் இரு நாடுகளுக்கிடையே சுமுகமான உறவுகள் நிலவுகிறது என்றும் இந்தியா தொடர்ந்து நம்பியது தவறாகிப்போனது. சீனா தொடர்ந்து இந்திய எல்லையில் அத்துமீறி வந்துள்ளது," என்று பந்த் கூறுகிறார்.
சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
1959 ஆம் ஆண்டில் சீனா இந்தியா விஷயத்தில் கைகொண்ட உத்தியையும் கொள்கையையும் இன்றளவும் மாற்றாமல் வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இராணுவத் தளபதிகளின் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அதனால் தீர்வொன்றும் எட்டப்படப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது, இந்தியா தனது ராணுவ துருப்புகளை சீன எல்லையில் தொடர்ந்து அதிகரித்து வந்தால், நிலைமை வேறு விதமாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய ராணுவ தளபதி லடாக் பகுதிகளுக்குச் சென்று இந்திய ராணுவத்தின் நிலைமையை அறிந்து கொண்டனர்.
சீனாவை கையாள அவர்களின் வழியையே நாமும் கடைபிடிக்க வேண்டும் என்பது இப்போது தான் இந்தியாவிற்குப் புரியத் தொடங்கியுள்ளது என்று ஐயர் கூறுகிறார்.
சீன படையினர் மீண்டும் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றால், இந்திய ராணுவமும் 'எல்.ஏ.சி' யைத் தாண்டி, புதிய பகுதிகளைக் கைப்பற்றுவது என்ற உத்தியைக் கைகொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ) 'ஷின்ஜியாங் ராணுவ கட்டளை பிரிவு', 15 இலகு டாங்கர்கள், ஹோவிட்சர்கள், தொலைதூர ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியாவின் எல்லைக்கு அருகே நிறுத்தத் தொடங்கியது என்று குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது.
இந்தப் பின்னணியை மனதில் கொண்டுள்ள ஹர்ஷ் பந்த், "இந்தியா இப்போது எல்ஏசி-ஐ பாகிஸ்தானின் எல்லையாக இருக்கும் 'எல்.ஓ.சி' போல பாவிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கேற்ப இந்தியா ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் 'எல்.ஏ.சி' இப்போது புதிய 'எல்.ஓ.சி' ஆகிவிட்டது," என்று எச்சரிக்கிறார்.
பிற செய்திகள்:
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- யூட்யூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?
- யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பைக் கவனிக்கும் தமிழக மாணவர்கள்
- கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












