`மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்

மகேந்திரன்

பட மூலாதாரம், Dr Mahendran R/Twitter

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள விவகாரம், அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் 3 சதவிகித வாக்குகளைப் பெற்ற ம.நீ.ம, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதிலும், கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கமல் தோற்றார். இதனால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு ம.நீ.ம துணைத் தலைவர் மகேந்திரன், மவுரியா, சி.கே.குமரவேல், முருகானந்தம், உமாதேவி உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக டாக்டர் மகேந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, ம.நீ.மவுக்காக தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்ட சங்கையா சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்தின் மீது சில குற்றச்சாட்டுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மகேந்திரன்

பட மூலாதாரம், Dr Mahendran R/Twitter

கேள்வி : `இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?' என மகேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

பதில்: கடந்த ஓரிரு வருடங்களாக கட்சியின் போக்கு சரியில்லாமல் இருந்தது. கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை தலைமைக்கு இல்லாமல் போய்விட்டது. தேர்தல் தோல்விக்கு ’சங்கையா சொல்யூசன்ஸ்’ நிறுவனம்தான் காரணம் எனத் தெரிந்த பிறகும் அவர்களையே ஆலோசகர்களாக தொடர்ந்து வைத்துள்ளனர். இதுதவிர, அவரது அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. 2018, 19 ஆகிய ஆண்டுகளில் அவர் எப்படிப்பட்ட தலைவராக இருந்தாரோ, அதை தற்போது காண முடியவில்லை".

கேள்வி: அப்படியென்ன மாற்றம் எனச் சொல்ல முடியுமா?

பதில்: அவரது செயல்பாடுகள்தான். சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு, `இந்த ஒரு மாதத்தில் அவர் மாறுவார்' என நினைத்தேன். ஒரு நூல் அளவுகூட அவர் மாறவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது அணுகுமுறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவே, இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்னர் நான் விலகியிருந்தால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவர்கள் எந்த தவறுகளையும் செய்யவில்லை. அப்படித் தவறு செய்யாதவர்களுக்கு என்னால் பாதிப்பு வரக் கூடாது என நினைத்து அமைதியாக இருந்தேன்."

கேள்வி: கூட்டணியில் குழப்பம், தேர்தல் அறிக்கையில் குழப்பம் எனத் தொடர்ந்து சங்கையா நிறுவனத்தினர் குழப்பத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறீர்கள். இப்படிப்பட்டவர்களை ஏன் கமல் வைத்துக் கொள்ள வேண்டும்?"

பதில்: உண்மையாகவே எனக்கும் தெரியவில்லை. `தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் வெளியேறிவிடுவார்கள்' என என்னிடம் மட்டுமல்ல, நான்கைந்து நிர்வாகிகளிடமும் கமல் சொன்னார். என்னுடைய கடிதத்திலும், `கோவை தெற்குத் தொகுதியைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறினேன். இவரது ஆலோசகர்கள் ஒருநாள்கூட அந்தத் தொகுதியில் ஒரு வார்டுக்குகூட செல்லவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் மட்டும் 26,000 வாக்குகளை வாங்கினேன். எனக்கு அந்தத் தொகுதியில் இருந்துதான் அதிக வாக்குகள் கிடைத்தன. அப்போது நான் நான்கு மாத அரசியல்வாதி. அப்படியிருக்கும்போது அந்தத் தொகுதியைப் பற்றி என்னைவிட வேறு யார் அறிந்திருக்க முடியும்? ஆனால், என்னுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.

மகேந்ின்

பட மூலாதாரம், Dr Mahendran R/Twitter

கேள்வி: அதனால்தான், கோவை தெற்குத் தொகுதியில் இருந்து உங்களை சிங்காநல்லூருக்கு மாற்றினார்களா?

பதில்: ஆமாம். ஆனால் அதில் ஒன்றும் பிரச்னையில்லை. அவர் கோவையில் நிற்பதாகக் கூறியபோது, `வேளச்சேரியில் நிற்பதுதான் உங்களுக்குச் சரியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். மாநில செயலாளர்கள் ஆறு பேர் களமிறங்கியுள்ளனர். மற்றவர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் 2 தொகுதிகளில் நிற்பதாக இருந்தால் அவசியம் கோவைக்கு வாருங்கள்' என்றேன். ஆனால், கோவை தெற்கு தொகுதி என அவர் முடிவெடுத்த பிறகு அவரை சந்தித்துப் பேசினேன். தொடர்ந்து, ` எங்கள் ஊருக்கு வருகிறீர்கள். பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். தலையை விற்றாவது உங்களை ஜெயிக்க வைத்துவிடுவேன். இந்த நபர்களை (சங்கையா சொல்யூசன்ஸ்) அங்கே விட்டுவிடாதீர்கள். இருப்பதே இருபதே நாள். இதில் குளறுபடி ஏற்பட்டால் உங்கள் வெற்றியில் பாதிப்பு ஏற்படும்' என வலியுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை.

அறிக்கை

கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியாக ம.நீ.ம இருந்தது. இப்படியொரு பின்னடைவு வரும் என எதிர்பார்த்தீர்களா?

பதில்: கூட்டணி குறித்த முடிவுகள்தான் காரணம். சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகியவற்றுடன் கூட்டணி வைப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் யாருக்குமே தெரியாது. காலையில் செய்தித்தாளை பார்த்து பிறகுதான் எங்களுக்கே தெரியும். பின்னர், சமத்துவ மக்கள் கட்சிக்கு 10 அல்லது 15 தொகுதிகளை ஒதுக்கப்பட உள்ளதாகப் பேசி வந்தார்கள். காலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு 80 தொகுதிகள் கொடுக்க உள்ளதாக ஒருவர் கூறியபோது, `80 அல்ல 18' என்றேன். அந்த நபர் சிரித்தபடியே, `80 இடங்கள்' என்றார். இதில் இன்னொரு கட்சிக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்படி 90 இடங்களை ஒதுக்கிவிட்டார். இதுவே தோல்வியின் முதல் படியாக அமைந்துவிட்டது.

மக்கள் நீதி மய்யம் ஒரு எதிர்க்கட்சியாக அமரும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். 100 இடங்களை மற்றவர்களுக்கு ஒதுக்குகியதே மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது. இது கட்சி நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்திவிட்டது. கோவை தெற்கில் அவரது பாப்புலாரிட்டி உள்ளிட்ட காரணங்களால் அதிக வாக்குகளைப் பெற முடிந்தது. எனக்கும் சிங்காநல்லூரில் 20 சதவிகித வாக்குகள் கிடைத்தன. ஆனால், மற்ற தொகுதிகளில் கடந்தமுறை வாங்கிய வாக்குகளைக்கூட பெற முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் ஒரு கூட்டத்தைக்கூட்டி ஆராயாமல், `கட்சியில் நேர்மையாக இல்லாதவர்கள் வெளியே போகலாம், திறமையில்லாதவர்கள் வெளியே போகலாம்' என்கிறார். அவரது இந்த அணுகுமுறையைக் கேள்வியெழுப்பினால், `திறமையில்லை' என்கிறார்.

கேள்வி: கமீலா நாசர் வெளியேறியதற்கும் இதுதான் காரணமா?

பதில்: ஆமாம். இதுதான் காரணம். அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு சிலர் தயங்கலாம்.

கேள்வி: உங்கள் முடிவுக்கு கமல் அளித்த பதில் என்ன?

பதில்: நான் இந்தக் கடிதத்தை தபால் மூலமாக அல்லாமல் நேரில் கொடுக்க விரும்பினேன். `கட்சியை சீரமைக்க வேண்டும், நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என நிர்வாகக் குழுவில் உள்ள 8 பேரிடம் கேட்டார். அப்போது, 3 பேர் என்னுடைய கருத்தையே சொன்னார்கள். மற்றவர்கள் கூறியவற்றை இங்கே தெரிவிப்பது சரியல்ல. என்னுடைய கடிதத்துக்கு கமல் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. `சரிங்க' எனக் கூறி வாங்கிக் கொண்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுவேன் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பது என்னுடைய கருத்து".

கேள்வி: நீங்கள் அரசியலுக்கு மிகவும் புதியவர். இந்தப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: கமலின் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அவரை மிஞ்சிய நடிகர்கள் யாருமில்லை. அவரை நான் முதன்முதலாக சந்தித்ததே 2017 ஆம் ஆண்டில்தான். அவர் கட்சியைத் தொடங்கும்போது அதில் இணையும் எண்ணத்திலும் நான் இல்லை. அரசியலில் ஜனநாயக முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேலையை இவர் செய்வார் என நம்பி வந்தேன். 2019 இறுதிவரையில் அவர் மனநிலையில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இவருக்கு ஆலோசகராக 2, 3 பேரை கொண்டு வந்தனர். அதில்தான் கோளாறு ஏற்பட்டது. உதாரணமாக, ஒரு வாகனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனத்துக்கான ஓட்டுநர் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நானும் அந்த வாகனத்தில் இருக்கிறேன். அப்படியொரு வாகனத்தில் இருந்து நான் இறங்கித்தானே ஆக வேண்டும்.

கேள்வி: உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்: கடந்த 3 வருடங்களாக குழந்தையை வளர்த்தது போல இந்தக் கட்சிக்குப் பணி செய்திருக்கிறேன். அரசியலில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் துளிகூட குறையவில்லை. ஆனால், மிகவும் யோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் அவை. சில வாரங்கள் கழித்து அறிவிப்பேன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :