`கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்

மக்கள் நீதி மய்யம் கமல்

பட மூலாதாரம், MAHENDRAN

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அவருக்கு 36,855 வாக்குகள் கிடைத்தன.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மகேந்திரன், `எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் நேர்மையானவை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை நமது அரசியல். மக்கள் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவது தொடர்பாக இன்று மாலை அக்கட்சியின் தலைவர் கமலிடம் மகேந்திரன் நேரில் கடிதம் கொடுத்துள்ளார். அவரது விலகல் கடிதம் ஏற்கப்பட்டது தொடர்பாக ம.நீ.ம தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு புதன்கிழமை மாலை வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சி அமைப்பு, நிர்வாக ரீதியான மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், எம். முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே. குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களின் ராஜிநாமா கடிதங்கள் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொள்வதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் தலைவரே முடிவு செய்யட்டும் என்று தெரியப்படுத்தினர். அவர்களின் ராஜிநாமா கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலிப்பார்," என்று கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் விளக்கம்

இதற்கிடையே, மகேந்திரனின் விலகல் மற்றும் ராஜினாமா தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சில சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தார்.

கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேற மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையையும் நேர்மையின்மையையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டு தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர, சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின் போது கூடாரத்தைப் பீய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை," என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மகேந்திரன் சொன்னது என்ன?

மகேந்திரன் தமது ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் அறிக்கையில், `மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.

கமல்ஹாசன்

பட மூலாதாரம், MAKKAL NEETHI MAIYAM

இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்திருக்கிறேன்.

கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறி விடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை.

எனக்குத் தெரிந்த தலைவர் கமல்ஹாசன், கொள்கைக்காகவும் எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அனைத்து நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்.

தலைவர் கமல்ஹாசனால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும் உத்வேகமும்தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்' என தெரிவித்துள்ளார்.

காரணங்களை பட்டியலிட்ட மகேந்திரன்

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம்

பட மூலாதாரம், MAKKAL NEETHI MAIYAM

இதே கடிதத்தின் இணைப்பில், விலகுவதற்கான காரணங்களை வகைப்படுத்தியுள்ளார். அதில், ` 2021 சட்டமன்ற தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்கின்ற பெரிய கனவுடன் பயணிக்கத் தொடங்கினோம். நமது அக்கனவிற்கு துணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஐபேக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் 2019 ஏப்ரலில் கையொப்பமாகி 2019 செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு `சங்கையா சொல்யூசன்ஸ்' என்ற நிறுவனத்தை தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர். அவர்கள் கட்சியின் பிரசாரத்துக்கு பயனுள்ள வகையில் எந்தப் பணிகளையும் சரிவர செய்யாமல் கட்சிக்குப் பெரும் செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டிருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது.

இது குறித்து தலைவரிடம் தெரிவித்தபோது, `சட்டமன்ற தேர்தல் வரையில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு இருக்கும்' என்றார்.

அந்நிறுவனம் கட்சிக்காக முன்னெடுத்த எந்தவிதச் செயல்பாடும் கட்சியினரின் பிரசார ரீதியான வளர்ச்சிக்கு உதவவில்லை. கூட்டணியில் குழப்பம், தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் கையில் தலைவர் தொகுதி மற்றும் இதர தேர்தல் பணிகளை ஒப்படைத்தால் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும் என்பதை தலைவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், என் கருத்து கேட்கப்படவில்லை.

கட்சியின் இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. நேர்மையும் திறமையும் விசுவாசமும் நிறைந்த பலர் இந்தக் கட்சியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனாக நான் இந்தக் கட்சியில் இந்தக் கட்சியில் இருந்து நேர்மையுடன் வெளியே செல்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மகேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` விலகல் கடிதத்தை தலைவரிடம் நேரில் கொடுத்துவிட்டேன். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நான் விலகிவிட்டேன்" என்றார்.

இதையடுத்து, சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனம் மீது மகேந்திரன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார். அதற்கான காரணமாக சங்கையா சொல்யூசன்ஸ் மீது புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் விவாதித்து விட்டு உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்" என்றார்.

காணொளிக் குறிப்பு, ஊழல் கறைபடிந்த கட்சிகளை வெறுப்பவர்களை வரவேற்போம் என்கிறார் மநீம வேட்பாளர் மகேந்திரன்

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: