திமுகவில் இருந்து விலகியிருப்பது ஏன்? மனம் திறக்கிறார் கு.க. செல்வம்

பட மூலாதாரம், Facebook
ஆயிரம் விளக்குத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம், சமீபத்தில் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு அக்கட்சியின் மாநிலத் தலைமையகத்துக்கும் சென்றார். இருந்தபோதும் தான் இன்னும் பா.ஜ.கவில் இணையவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், திமுக மீதான அதிருப்தி குறித்தும், தன் நடவடிக்கைகளின் பின்னணி குறித்தும் பிபிசியிடம் விரிவாகப் பேசினார் கு.க. செல்வம். பேட்டியிலிருந்து:
கே. சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரைசந்தித்திருக்கிறீர்கள். திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?
ப. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இரண்டு மின் தூக்கிகளைக் கேட்டிருந்தேன். அதற்காக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்திக்க தில்லி சென்றேன். அங்கே பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல். முருகனைச் சந்தித்தேன். ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படவிருப்பதால் பிரதமருடன் பியூஷ்கோயல் போன்ற தலைவர்கள் அங்கே சென்றுவிட்டார்கள்; தலைவர் ஜே.பி. நட்டா மட்டும்தான் இருக்கிறார் எனத் தெரிந்தது. அப்படியானால், அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினேன்.
நான் ஏற்கனவே 1992, 2014ல் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறேன். அதனால், ராமர் கோவில் தொடர்பாக வாழ்த்துத் தெரிவித்தால் சந்தோஷமாக இருக்கும் என்று கூறினேன். அதனால், மரியாதை நிமித்தமாக அந்த சந்திப்பு நடந்தது.
கே. திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் முற்றிலும் எதிரான சித்தாந்தமுள்ள கட்சியின் தலைவரைச் சந்திக்கப்போவது குறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்தீர்களா?
ப. நான் ஒரு சாதாரண பயணமாகத்தான் தில்லிக்கு சென்றேன். அதனால் தெரியப்படுத்த வேண்டுமென நினைக்கவில்லை. நான் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தில்லிக்குச் சென்று வருகிறேன். இங்குள்ள தலைவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் பழகுகிறார்கள்.
கே. பா.ஜ.கவின் தேசிய தலைவரை சந்தித்திருக்கிறீர்கள், மாநில தலைமையகத்திற்கு சென்றிருக்கிறீர்கள். அக்கட்சியில் இணைந்துவிட்டீர்களா?
ப. இல்லை. இணையவில்லை. மாநிலத் தலைமையகத்தில் ராமர் சிலைக்கு பூ போட்டுவிட்டு போகலாமா எனக் கேட்டார்கள். மறுக்க முடியுமா?
கே. அப்படியானால், தி.மு.கவிலேயே தொடர்வதற்கு முடிவுசெய்துவிட்டீர்களா?
ப. அவர்கள் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கட்டும். அனுப்பினால் அனுப்பிவிடட்டும்.
கே. திமுக அனுப்பிய நோட்டீஸிற்கு என்ன விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்?
ப. இப்போதுதான் நோட்டீஸ் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தலைமைச் செயற் குழு உறுப்பினர் பதவி, தலைமை நிலையச் செயலர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நான் ஏற்கனவே பத்து நாட்களுக்கு முன்பாக ஆலந்தூர் பாரதியைச் சந்தித்து இந்த இரு பொறுப்புகளிலும் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் அதில் நடவடிக்கை ஏதும் அப்போது எடுக்கவில்லை. இப்போது நீக்கியிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், M.K.STALIN/Facebook
கே. ஊடகங்களிடம் பேசும்போது கட்சித் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தீர்கள். தி.மு.கவில் உங்களுக்கு என்ன அதிருப்தி?
ப. உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க வேண்டுமென விரும்பினால் நிற்கலாம். நானே அதைச் சொல்லியிருக்கிறேன். என்னிடம் சொல்லியிருந்தால் நானே கூட இருந்து வேலை செய்திருப்பேன். ஏற்கனவே மு. கருணாநிதி இருக்கும்போது 2014ல் என்னைப் பார்க்க வேண்டுமென மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மாலை ஆறு மணி அளவில் கோபாலபுரத்திலிருந்து அறிவாலயத்திற்கு வந்தார் மு. கருணாநிதி. டி.கே.எஸ். என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர், "கு.க. நான் சொன்னால் கேட்பாயா?" என்று கேட்டார். "நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன்" என்று சொன்னேன். "அப்படியானால், இந்த முறை மாவட்டச் செயலர் பதவியை அன்பழகனுக்கு விட்டுக்கொடுத்துவிடு" என்றார்.
நான் அன்பழகனுக்கு எதிராக போட்டிக்கு நின்றதே, மு.க. ஸ்டாலின் சொல்லித்தான் நின்றேன். அவர்தான் அதற்கு தூண்டுகோலாகவே இருந்தார். ஆனால், அன்பழகனுக்கு ஆதரவு பெருகியதும், என்னிடம் தலைவர் இப்படிக் கேட்டார். அதற்குப் பிறகு அவர் மாவட்டச் செயலாளராக ஐந்து வருடமாக இருந்தார்.
இப்போது எனக்கு உடல் நிலை சரியில்லை. பணமும் இல்லை. இந்தச் சூழலில் எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை தந்திருக்கலாம்.
கே. தி.மு.கவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு உங்களுக்குத் தரப்படவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த அதிருப்திக்குக் காரணமா?
ப. முதலில் தலைவரும் தளபதியும் சேர்ந்துதானே வாக்குக் கொடுத்தார்கள்? என்னுடைய செயல்பாடுகளில் என்ன சரியில்லை. அவர்கள் அழைத்த இடத்திற்குச் செல்லாமல் இருந்திருக்கிறேனா? ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை போனில் சொன்னார்கள். நீங்கள் எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்று கடிதமும் எழுதிக் கொடுத்தேன். ஆனாலும் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

கே. தி.மு.கவில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?
ப. இனி இளைஞரணியை முன்னிலைப்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். செய்துகொள்ளட்டும். இனிமேல் 55 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்போவதில்லை. சமீபத்தில் மகேஷுக்குக் கொடுத்தார்கள். தொடர்ச்சியாக அப்படித்தான் பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். இனி மாவட்டத்தையே கலைத்துவிட்டு இளைஞரணிக்கே கொடுத்துவிட்டுப் போய்விடலாம்.
கே. தற்போது தி.மு.கவின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் நேரெதிரான நிலையில் உள்ள கட்சியோடு இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு ஏற்புடையதுதானா?
ப. 1992, 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறேன். சாதாரண தி.மு.க. தொண்டனாக அதில் கலந்துகொண்டேன். பா.ஜ.கவினரும் இந்தியர்கள்தானே.
கே. தி.மு.கவிலிருந்து விலகிநிற்பதற்கு உட்கட்சி விவகாரம்தான் காரணமா இல்லை வேறு விவகாரங்கள் காரணமா?
ப. நான் இன்னும் கட்சியைவிட்டுச் செல்லவில்லை. விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன். பிரதமருக்கு நன்றி சொல்லியிருக்கிறேன். பிரதமரைப் பார்க்கச் சென்றதற்காக நடவடிக்கை என்றால் அது எனக்கு சரியாகப்படவில்லை.
கே. உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன, சட்டமன்றத்தில் எந்த கட்சியின் உறுப்பினராக செயல்படுவீர்கள்?
ப. இன்னும் முடிவெடுக்கவில்லை. கழகத் தோழர்களோடு சேர்ந்து பேசி முடிவெடுப்பேன்.
கே. சட்டமன்றத்தில் எந்தக் கட்சி உறுப்பினராக செயல்படுவீர்கள்?
ப. அவர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லையே..நானும் முடிவெடுக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












