கொரொனா வைரஸ்: 'நான் ஒரு பிராமணன், தப்லிக் ஜமாதை சேர்ந்தவர்களுடன் எனக்கு என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆலோக் பிரகாஷ் புதுல்
- பதவி, பிபிசிக்காக, ராய்ப்பூரில் இருந்து
டெல்லியின் நிஜாமுதீனைச் சேர்ந்த தப்லிக் ஜமாத் மார்க்கஸிலிருந்து திரும்பி வந்த 52 பேரைக் கண்டுபிடிப்பதற்கான 'தீவிர தேடலை' மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிஜாமுதீனின் தப்லிக் ஜமாத் மார்க்கஸிடமிருந்து சத்தீஸ்கருக்குத் திரும்பியவர்களின் பட்டியலில் 159 பேரில், 108 பேர் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்று ஒரு மனுதாரர் கூறுகிறார்.
கோவிட் -19 தொடர்பான வழக்குகளை ஒரே நேரத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி கெளதம் பாதுடி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மறுபுறம், இந்த மனுவானது மத்திய அரசின் பட்டியலின் அடிப்படையில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பட்டியலுக்கும் தபலி ஜமாத்துக்கும், எந்த மதத்துடனும் தொடர்பு இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் கூறுகிறார்.
"நிஜாமுதீனின் மொபைல் கோபுரத்தின் இருப்பிடத்தில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் அந்த தேதிகளில் அந்த இடத்திலிருந்தனர், கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பலரும், அந்தப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, மொபைல் கோபுரத்தின் வரம்புக்குள் வந்திருக்கலாம். இது அரசாங்கத்தின் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. இதை அனைவரும் வரவேற்க வேண்டும்" என்று சிங்தேவ் கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கோவிட் -19 தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது, நிஜாமுதீனின் தப்லிக் ஜமாத் மார்க்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்திற்குத் திரும்பியவர்களைப் பற்றி விசாரிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
சத்தீஸ்கருக்கு திரும்பிய 159 தப்லிக் ஜமாத் உறுப்பினர்களில் 107 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அதில் 87 பேரின் பரிசோதனை அறிக்கைகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படாத 23 பேர் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத 42 பேரும், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோவிட் -19 பரவுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதே மனுதாரரின் வாதம்.
இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், தப்லிக் ஜமாத்திலிருந்து திரும்பி, காணாமல் போன 42 பேரையும் 'தீவிரமாகத் தேட வேண்டும்' என்று உத்தரவிட்டதுடன், 23 பேரின் பரிசோதனை அறிக்கையின் நிலை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, காணாமல்போன 52 பேரைத் தேடி ஏராளமானோர் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தைச் சுற்றி வளைக்கத் தொடங்கினார்கள். இதுபோன்ற செய்திகள் வன்முறையைத் தூண்டுவதாக இருக்கின்றன.
159 பேர் கொண்ட பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள்
நிஜாமுதீனின் தப்லிக் ஜமாத் மார்க்கஸிலிருந்து சத்தீஸ்கரிலிருந்து திரும்பிய 159 பேரின் பட்டியலை பிபிசிக்கு கொடுத்தார் மனுதாரரின் வழக்கறிஞர் கெளதம் க்ஷேத்ரபால். அதில் 108 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள். அனைவரின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவர்களில் சிலரிடம் பேசினோம். இவர்களில் பெரும்பாலோர் தப்லிக் ஜமாத்துடனும் இஸ்லாமிய மதத்துடனும் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் . இருப்பினும், இவர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் டெல்லிக்கு வந்திருந்தனர், டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர், உள்துறை அமைக்கத்தின் சுகாதாரத் துறையின் உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட பிலாஸ்பூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் பிபிசி பேசியது. "நான் ஒரு பிராமணன். தப்லிக் ஜமாதை சேர்ந்தவர்களுடன் எனக்கு என்னத் தொடர்பு? மார்ச் மாதத்தில் நான் டெல்லிக்குச் சென்றேன், ஆனால் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸ் உள்ளே செல்லவேயில்லை. நான் பிலாஸ்பூருக்கு செல்வதற்காக நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் என்னிடம் விசாரணை செய்த பிறகு, என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கச் சொன்னார்கள்" என்று ஸ்ரீகுமார் பாண்டே தெரிவித்தார்.
ராய்ப்பூரைச் சேர்ந்த ஜெய்தீப் கவுரும்தப்லிக் ஜமாத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.
"நான் சமீபத்தில் தொலைக்காட்சியில் தான் முதல் முறையாக தப்லீகி ஜமாத் என்ற பெயரைக் கேட்டேன். நான் மார்ச் 16ஆம் தேதியன்று டெல்லியிலிருந்து வீடு திரும்பினேன். பிறகு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் வந்து என்னிடம் விசாரணை செய்தார்கள். பரிசோதனை செய்த பின்னர், 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னர்கள். அதன் பின்னர் நான் வீட்டிலேயே இருக்கிறேன்" என்று கூறுகிறார்.
துர்க் என்ற ஊரைச் சேர்ந்த முகமது ஜுபைர் இவ்வாறு கூறுகிறார். "எனக்கு தப்லிக் ஜமாத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை, இந்த ஆண்டு தப்லிக் ஜமாத்தின் எந்தவொரு நிகழ்விலும் ஒருபோதும் கலந்துகொள்ளவில்லை".
நிஜாமுதீனில் உள்ள மார்க்கஸில் அந்த கூட்டம் நடைபெற்ற நாளின்போது அந்தப் பகுதிக்கு வந்தவர்களின் மொபைல் எண், மொபைல் போன் கோபுரங்களில் பதிவாகியிருக்கும் என்று என்று மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் கூறுகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு வந்து சென்றவர்களின் உடல்நலம் சரிபார்க்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நிஜாமுதீன் பகுதிக்கு சென்றவர்கள் அல்லது நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றவர்கள் என்று அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் இந்த 159 பேரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரேம் குமார் சாஹுவின் கவலை வேறு கோணத்தைச் சொல்கிறது. இந்தப் பட்டியல் தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக அவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார்.
"சுகாதாரத் துறையும் காவல்துறையும் எங்கள் ஆரோக்கியத்திற்காக, எங்கள் நன்மைக்காக மட்டுமே தகவல்களைச் சேகரித்தன. வீட்டிலேயே தனிமையாக இருக்கவேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் இந்த விசாரணையால் எங்கள் சுற்றுவட்டாரத்தில் எங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது."

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

சத்தீஸ்கர் மற்றும் தப்லிக்
நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே, டெல்லியிலும் மார்ச் கடைசி வாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது, நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்தின் தலைமையகத்திலிருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தொடர்பான செய்திகள் வெளியானபோது, சத்தீஸ்கர் அரசு தப்லீகி ஜமாத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியது.
மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மார்ச் 31 மாலையன்று பகிர்ந்த ஒரு ட்வீட்டில் எழுதினார், "சத்தீஸ்கரில் திரும்பிய தப்லிகி ஜமாத்தின் 32 உறுப்பினர்கள் க்வாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர், அதோடு 69 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சுகாதாரத் துறை நெருக்கமாகக் கவனிக்கப்படுகிறது."
சத்தீஸ்கரில் கொரோனா தொற்றுநோயின் முதல் பாதிப்பு மார்ச் 18ஆம் தேதியன்று பதிவாகியுள்ளது, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு வெவ்வேறு தேதிகளில் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டனர். நோய்த்தொற்றுக்குள்ளான 16 வயது சிறுவன் ஒருவரும் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கோர்பாவின் கட்கோரா பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்களுடன் தங்கியிருந்த இந்த சிறுவனைத் தவிர, அவருடன் இருந்த 16 பேருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
ஏப்ரல் 6ஆம் தேதியன்று மாநிலத்தில் தப்லிக் ஜமாத்தினரின் பட்டியலை ட்வீட் செய்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், "விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை. # COVID-19 தொடர்பாக உரிய நேரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் முடக்கநிலை அறிவித்தது மற்றும் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, தொற்றுநோய் பரவல் குறைந்துவருகிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த நெருக்கடியை ஒன்றாகச் சமாளிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
ட்வீட் மூலம் வெளியிடப்பட்ட பட்டியலில், மாநிலம் முழுவதும் இருந்து தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்த 107 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 83 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. 23 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கவில்லை.
இந்த பட்டியலின்படி, கோர்பா மாவட்டத்திலிருந்து ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. அங்கு மொத்தம் 47 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு கொரொனா நெகடிவ் என்றும், 16 வயது சிறுவனுக்கு மட்டும் கொரோனா பாஸிடிவ் என்றும் கண்டறியப்பட்டது.
இதன் பின்னர், இளைஞன் தங்கியிருந்த கோர்பாவின் பகுதியில் மக்களுக்குப் பரிசோதனை தொடங்கப்பட்டது. புதன்கிழமையன்று ஒருவருக்கும், வியாழக்கிழமையன்று ஏழு பேருக்கு கொரோனா பாஸிடிவ் என்பது தெரியவந்தது.
தொற்றுநோயைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால், இந்தியா ஒரு மாதம் பின்னால் இருப்பதாக, நிபுணர்களை மேற்கோள் காட்டி மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் கூறுகிறார். இந்த நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் மற்றும் மே முதல் வாரத்தில், கொரொனா தொற்று வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் தப்லிக் ஜமாத் என்ற அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
"158 பேரின் பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்தது, அதைத் தொடர்ந்து 194 பேரின் பட்டியல் கிடைத்தது. அதில் நிஜாமுதீனைச் சுற்றியுள்ள மொபைல் கோபுரங்களில் வரம்பில் வந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் பலரின் பெயர் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் ஏழு பேர் சத்தீஸ்கருக்கு வரவேயில்லை. மீதமுள்ள அனைவரையும் நாங்கள் விசாரித்தோம்" என்று சிங்தேவ் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












