இந்திய பிரதமர் நரேந்திர மோதி: மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு -Narendra Modi Full Speech on Coronavirus Lockdown

பட மூலாதாரம், ANII
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டிப்பு செய்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "உங்களுடைய ஒத்துழைப்பு கொரோனைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி இருக்கிறது," என்றார்.
ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு வருகிறீர்கள் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது என்றார் மோதி.
கண்டனம்
''நாட்டுக்காக கோவிட்-19 நோய்த்தொற்றுடனான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் இதுவரை இந்தியா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீதும் மற்றும் இன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு, நிச்சயம் இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த நரேந்திர மோதி, இது போன்றவை நிச்சயம் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவை என்றும் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பொருளாதாரமா... மக்கள் உயிரா?
''பொருளாதாரத்தை விட இந்திய மக்களின் உயிர் மிகவும் முக்கியமானது மற்றும் விலைமதிப்பற்றது. மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
"ராணுவ வீரர்கள் போல இந்திய மக்கள் ஊரடங்கு காலத்தில் மிகவும் பொறுப்பாகவும், கணியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது," என்றார்.
"ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் மக்களுக்கு ஏற்படும் எண்ணற்ற சிரமங்களை நான் நன்கு அறிந்துள்ளேன்," என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்ற நாடுகள் பலவற்றை காட்டிலும் இந்தியாவில் கட்டுக்குள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதிக்கப்பட்டனர் என கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
"பிரச்னை தீவிரமடையும் வரை இந்தியா காத்திருக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை தொடங்கியவுடனே இந்தியா விரைந்து நடவடிக்கைகள் எடுத்தது.இம்மாதிரியான துரித நடவடிக்கைளை நாம் எடுத்திருக்காவிட்டால் நாட்டில் தற்போது என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்யமுடியவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பணிநீக்கம் செய்யவேண்டாம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ எட்டும் முன்பே,வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நிலையை இந்தியா மேற்கொண்டது.
மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 550-ஐ எட்டிய சமயத்தில் நாடெங்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று நரேந்திர மோதி மேலும் நினைவுகூர்ந்தார்.
''நாட்டில் போதுமான அளவில் உணவுப்பொருட்களின் கையிருப்பு உள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்தியாவில் 220க்கும் மேற்பட்ட லேப்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெறுகிறது. உலக நாடுகள் பலவற்றின் அனுபவத்தில் இருந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டிய சமயத்தில், கிட்டத்தட்ட 1500-1600 கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா கிகிச்சை படுக்கைகள் உள்ளன," என்றார்.
"கொரோனா எதிர்ப்பு போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நீங்கள் மரியாதையை அளித்திட வேண்டும் என்று நான் மக்களை கேட்டுக் கொள்கிறேன்," என்றார் மோதி.
"உங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்களிடம் மிகவும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். உங்களை பணியார்களை வேலைநீக்கம் செய்யாதீர்கள்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாளை வெளியீடு
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்தார்.
"ஏப்ரல் 20 வரை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். எந்தளவுக்கு அங்கு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பன கண்காணிக்கப்படும்.கொரோனா தொற்று ஹாட்ஸ்பாட்கள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் இடங்களில், மாநிலங்களில் சில முக்கிய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அதிகம் பாதிக்கப்படாத பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்," என்றும் பிரதமர் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டார்.
தற்போது ராபி பயிர் அறுவடை காலம். விவசாயிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்கள் மிக குறைந்த அளவில் மட்டுமே சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன என்றும் மோதி கூறினார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி , அறிவித்துள்ள நிலையில், பயணிகள் ரயில் சேவையும் மே 3-ஆம் தேதி வரை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதுவரை
கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அண்மையில் அதிகரித்த வண்ணமுள்ளது.
நேற்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9,352-ஆக உயர்ந்த நிலையில், உயிரிழப்பு 308-ஆக அதிகரித்தது.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை வைத்து பச்சை, மஞ்சள், சிவப்பு என பிரிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் பாதிப்படைந்தவர்கள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு பிரிவில் வகைபடுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று நாட்டு மக்களுடன் உரையாடவுள்ள பிரதமர் மோதி, ஊரடங்கு நீட்டிப்பு விவரங்கள் மற்றும் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று மிகவும் குறைவான அல்லது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லாத மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
முன்னதாக, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கடந்த வாரத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி நடத்திய வீடியோ கான்பிரசன்சிங் கூட்டத்தில், பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கை குறைந்தது 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே கோரிக்கையை மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல நிபுணர்களும் வலியுறுத்தி வந்தனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை தங்கள் மாநிலத்தில் நீட்டிப்பதாக ஒடிஷா மாநில அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தன.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதே போன்ற அறிவிப்பை புதுவை மாநில அரசும் வெளியிட்டது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: 308 பேர் பலி, 9152 பேர் பாதிப்பு - அண்மைய இந்திய நிலவரம் இதுதான்
- நிலவில் சுரங்கம் தோண்ட விரும்பும் டிரம்ப் - என்ன காரணம் தெரியுமா?
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சந்தித்து வரும் சவால்கள் என்ன?
- கொரோனா வைரஸ்: “உங்கள் ஊரில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா?” - இந்தக் கட்டுரையைப் படியுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












