கொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் திங்கள் முதல் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்`

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 64 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

42,296 பயணிகள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் 2,559 பேருக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிகிறது; 17 வெளிநாட்டவர்கள் உட்பட 522 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இத்தாலியின் மில்லன் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் அனுப்பப்படும்; நாளை மதியம் கிளம்பி செல்லும் அந்த விமானம், ஞாயிறன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும்," என உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் இணை செயலர் ரூபின அலி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் துவக்க நிலை பள்ளிகளுக்கு விடுமுறை

கெரோனா நோயின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் துவக்க நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்புவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஏற்கனவே கொரோனா நோய் தாக்கியுள்ள கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்புவரை விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மாநிலத்தில் செயல்படும் அனைத்துவகைப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்துமெனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்கு மாஸ்க்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்கதர்களுக்கு காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால், கோயில் பணியாளர்கள், அவர்களுக்கு மாஸ்க் தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தினமும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

கூட்ட நெரிசலான இடங்களில் சளி, எச்சில் போன்றவற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அதனை தவிர்க்க மாஸ்க் அணியவேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திவருகிறது.

மதுரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரேனும் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் தென்பட்டால் அவர்கள் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்கவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும், கோயில் பணியாளர்கள் அறிவுறுத்தவேண்டும் என கோயிலின் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கோயிலுக்கு வருபவர்களிடம் காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் பிற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு கூட்டிவந்து மாஸ்க் பெற்றுத்தரவேண்டும் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கான அறிவுரைகள் வழங்கவேண்டும் என்றும் பணியாளர்களிடம் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் மதுரை கோயிலுக்கு வரக்கூடாது என கோயில் நிர்வாகம் தெரிவித்ததாக போலி செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை தெளிவுபடுத்துவதற்காக கோயில் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

ரத்தான கிரிக்கெட் போட்டிகள்

லக்னெள மற்றும் கொல்கத்தாவில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகளை ரத்து செய்வதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்ச்சிகளுக்கும் தடை

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கர்நாடகாவில் அனைத்து சினிமா அரங்கங்கள், வணிக வளாகங்கள், திருமண நிகழ்ச்சிகள், என பொது மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் எடியூரப்பா மாநில அமைச்சர்களுடன் இன்று அவசர சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே பெங்களுரூ நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் பெங்களுரூ கிளையை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்களை அவரவர் இல்லத்தில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வழிமுறைகள்

கொரோனா தொற்று உள்ள ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக அவர்களையே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூகுள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இந்த நபர் சில நாட்களுக்கு முன்பு சீனா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நொய்டாவில் பணிபுரியும் இவர் டெல்லியில் வசிக்கிறார்.

டெல்லியில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களும் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது. நீச்சல் குளங்களில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.

டெல்லியில் ஐ.பி.எல் உட்பட எந்தவொரு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும் மார்ச் 30ஆம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மவுண்ட் எவரெஸ்ட்டை ஏப்ரல் 30 வரை மூட நேபாள அரசு முடிவு செய்துள்ளது. இதனால் எவெரெஸ்ட் சிகரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் மில்லியன் கணக்கிலான டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே சீனாவின் வுஹான் நகரில் இருந்து இந்திய திரும்பிய நூற்றுக்கணக்கானோர் டெல்லியின் சாவ்லா நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள 112 இந்தியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு சாவ்லா பகுதியில் இருந்து வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Banner image reading 'more about coronavirus'

யாரிடமும் கை குலுக்க வேண்டாம், மனிதருடன் மனிதருக்கு ஏற்படும் தொடர்பால் மட்டுமே கொரோனா பரவுகிறது, விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் தொடர்பு இல்லை. அனைவரும் நமஸ்தே சொல்லுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பெனர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

விடுதிகளில் வெளிநாட்டு பயணிகளை தங்கவைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திலும் மார்ச் 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது வரை உத்தரகாண்டில் கொரோனா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு?

மார்ச் 31 வரை ஒடிஷாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது, திரை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்படும் என ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சட்ட பேரவையில் அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: