அமிர்தசரஸ் விபத்து: கடைசி உரையாடலும், 58 பேர் மரணமும் - முழுமையான தொகுப்பு

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், NARINDER NANU

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் 58 பேர் பலியாகி உள்ளதாக அமிர்தசரஸ் காவல்துறை துணை ஆணையர் கமல்தீப் சிங் சங்கா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற தண்டவாளம்

முன்னதாக இந்த விபத்தில் 62 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் 59 என்று கூறப்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை 58 ஆக குறைந்துள்ளது.

விபத்து எப்படி நடந்தது?

தோபி காட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்த போது, எதிர்பாராத விதமாக அது கீழே விழந்தது. அந்த இடத்திற்கு அருகில் ரயில்வே கேட் இருந்தது. நெருப்பில் இருந்து தப்பிக்க ரயில்வே கேட் பக்கமாக மக்கள் ஓடியபோது, அங்கு ரயில் வந்ததில் அதில் அடிபட்டு பலரும் உயிரிழந்ததாக பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் தெரிவிக்கிறார். ரயில் தடத்தில் பலரின் உடல்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ராவணனாக நடித்தவரும் இறந்தார்

ராவணன் உருவம் எரிந்த அதே நேரத்தில் ராவணனாக நடித்தவரும் இறந்துள்ளார்.

ராவணனாக நடித்த தல்பிர் சிங்

வழக்கமாக, ராமனாக நடித்த தல்பிர் சிங், அவரது நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் இந்த ஆண்டு ராவணன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

நடித்து முடித்த பின்னர், மக்களை நோக்கி குனிந்து வணங்கிய அவர், ராணவனின் உருவம் தீயில் எரிவதை பார்ப்பதற்கு தண்டவாளத்திற்கு அருகிலுள்ள கூட்டத்தோடு வந்து சேர்ந்துள்ளார்.

அனுமதி பெற்று நடந்ததா தசரா விழா?

அமிர்தசரஸ் விபத்து ஏற்பட்டதையடுத்து, தோபி காட் பகுதியில் தசரா நிகழ்ச்சி கொண்டாட அந்த ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறை மற்றும் நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவம் நடைபெற்றவுடன், தோபி காட்டில் தசரா நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து அமிர்தசரஸ் காவல்துறையினர் தெளிவான பதில் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

எனினும், அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க தனது அலுவலகம் அனுமதி வழங்கியதாக இணை ஆணையர் அம்ரிக் சிங் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறாத பட்சத்தில் காவல்துறையின் அனுமதி செல்லாமல் போய்விடும்.

"தசரா குறித்து உரையாடியதே நான் என் அக்காவுடன் பேசிய கடைசி பேச்சு"

அமிர்தசரஸில் 58 உயிர்களை பலிவாங்கிய சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் ராகுல் டோக்ரா அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

சம்பவம் நடந்த இடமான ஜோரா ரயில் தண்டவாள பாதையில் தசரா விழாவை காணச் சென்ற தனது அக்கா மற்றும் அவரது குடும்பத்தினரை இரவு முழுவதும் தேடியுள்ளார் ராகுல். இன்று காலை சிவில் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தனது மாமா, 7 வயதுடைய தனது அக்கா மகள் மற்றும் 12 வயதுடைய அக்கா மகன் ஆகியோரின் உடலை அடையாளம் கண்டுள்ளார். இருப்பினும் அவரது அக்காவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"வெள்ளிக்கிழமை மாலை, நான் எனது சகோதரியின் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் தசரா விழாவை காண தயாராகிக் கொண்டிருந்தனர். அதுகுறித்த எனது பேச்சுதான் அவர்களுடன் நான் கடைசியாக பேசப்போவது என்பது எனக்கு தெரியாது" என மருத்துவமனையில் உடல்களை அடையாளம் கண்ட ராகுல் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :