அமிர்தசரஸ் ரயில் விபத்து: ராவணன் உருவம் எரிந்த அதே நேரத்தில் ராவணனாக நடித்தவரும் இறந்தார்

- எழுதியவர், சர்ப்ஜித் சிங் தாலிவால்
- பதவி, பிபிசி பஞ்சாபி
ராவணனின் இறப்பை மேடையில் நடித்த தல்பிர் சிங், ராவணன் சிலை தீயில் எரிந்துகொண்டிருக்கும்போது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் நிகழ்ந்துள்ளது.
வழக்கமாக, ராமனாக நடித்த தல்பிர் சிங், அவரது நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் இந்த ஆண்டு ராவணன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
அதிகாலையில் சம்பவ இடத்திலிருந்து கிடைத்த அனுபவத்தை விளக்குகிறார் பிபிசி பஞ்சாபி செய்திளார் சர்ப்ஜித் சிங் தாலிவால்.
செல்பேசி டார்ச் விளக்குகளைக் கொண்டு ரயில் தண்டவாளங்களிலும், அதன் அருகிலும் மக்கள் உடல்களைத் தேடினர். சிலர் அருகிலுள்ள புதர்களில் உறவினர்களின் உடல்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.
நடுத்தர வயதுடைய உஷா, தசரா கூட்டத்தில் காணாமல்போய்விட்ட தனது உறவினர் ஆஷிஷை தேடிக்கொண்டிருந்தார்.

மருத்துவமனைகளில் எல்லாம் தேடிய பின்னர், அவர் ரயில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள புதர்களுக்கு இடையில் உறவினரின் உடலை தேடிக்கொண்டிருந்தார்.
தனது மாமனார் அஜித் சிங்கை இழந்துவிட்ட மன்ஜித் சிங், இந்த விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். ராவணனின் உருவம் பட்டாசு வெடித்து சிதறி தீயில் எரிந்து கொண்டிருந்தபோது அவர்கள் ரயில் தண்டவாளத்தை தாண்டிக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
விரைவாக வந்த ரயிலை கண்டு மன்ஜித் உடனடியாகக் குதித்துவிட்டார். ஆனால், அஜித் சிங்கால் அவ்வாறு குதிக்க முடியவில்லை.

நண்பரான மன்ஜித் சிங்கின் உதவியோடு இருசக்கர சாகனத்தில் குருநாணக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஜித் சிங், இறந்த பின்னர் அங்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் உறவினர்களை தேடியோரில் ஒருவரான தல்பிர் சிங்கின் சகோதரர் பல்பிர் சிங் இன்று சனிக்கிழமை காலை பிபிசி செய்தியாளரை சந்தித்தார்.


தொழில்முறையாக பட்டம் தயாரித்து வரும் தனது சகோதரர் நடிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால், ராம்லீலாவில் பங்கேற்பது வழக்கம் என்று பல்பிர் சிங் தெரிவித்தார்.
வழக்கமாக ராமனாக நடிக்கின்ற தல்பிர் சிங் முதல் முறையாக இந்த ஆண்டு ராவணனாக நடித்தாக அவர் கூறினார்.

நடித்து முடித்த பின்னர், மக்களை நோக்கி குனிந்து வணங்கிய அவர், ராணவனின் உருவம் தீயில் எரிவதை பார்ப்பதற்கு தண்டவாளத்திற்கு அருகிலுள்ள கூட்டத்தோடு வந்து சேர்ந்துள்ளார்.
மேடைக்கும், ரயில் தண்டவாளத்திற்கும் இடையில் சுமார் 25 மீட்டர் இடைவெளியே இருந்துள்ளது.
தனது மனைவியையும், ஒரு மகளையும் வீட்டில் விட்டு வந்துள்ள தல்பிர், ராவணன் இறப்பதோடு தான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்துவிடும் என்ற மனைவிடம் சொல்லிவிட்டு வந்துள்ளார்.


ஆனால், அவர் நடித்த கதாபாத்திரம் கொல்லப்படுவதும் அதனை நடித்த அவர் ரயில் விபத்தில் இறந்துபோனதும் ஒரேநேரத்தில் நடந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
அவரை சூழ்ந்து நின்ற யாராலும் பல்பிர் சிங்கை தேற்ற முடியவில்லை.
அந்த மயான அமைதியில் தங்களது செல்பேசி விளக்கு வெளிச்சம் மங்கியதை போன்று அவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், தளராமல் உடலை தேடி கொண்டிருந்தனர்.

அமிர்தசரசிலுள்ள ஹால் பஜாரில் கடை வைத்திருக்கும் தன்னை, தசரா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாமனார் அழைத்ததாக மன்ஜித் கூறினார்.
வெல்டர் தொழிலாளியான மாமாவும், தானும் தசரா கொண்டாட்ட வளாகத்திற்கு வந்து, ராவணன் எரிக்கப்படுவதை பார்ப்பதற்காக நன்றாக தெரியும் வகையில் உயரமாக இருந்த ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"பட்டாசு சத்தம் மற்றும் மக்களின் கொண்டாட்ட இரைச்சலால் வேறு எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை. ரயிலை பார்த்த நான் விரைவாக செயல்பட்டதால் தப்பிவிட்டேன்" என்கிறார் மன்ஜித்.

இத்தகைய விரைவாக செயல்படும் வாய்ப்பு கிடைத்த அளவுக்கு, பலருக்கும் அதிஷ்டம் இருந்திருக்கவில்லை.
"சற்றுநேரத்தில் கொண்டாட்ட இடம் எல்லாம் ரத்தமாக, சடலங்களோடு கொடூர காட்சியளிப்பதாக மாறிவிட்டது" என்று மன்ஜித் மேலும் கூறினார்.
மீட்பு பணிகள் மற்றும் பிற விடயங்களை ஒருங்கிணைக்க தலைமை போலீஸ் இயக்குநர் சுரேஷ் அரோரா சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தசரா கொண்டாட்டம் முறையாக அனுமதி வாங்கப்பட்டு நடத்தப்பட்டதா என்று அவருக்கு தெளிவாக தெரியவில்லை.

விபத்து பற்றிய 5 புதிர்கள்
- இந்த தசரா கொண்டாட்ட வளாகத்தில் இரண்டு வாயில்கள் இருந்தன. தற்காலிக மேடையால் ஒன்று மூடப்பட்டிருந்த நிலையில், ரயில் தண்டவாளத்தை நோக்கி செல்லும் குறுகிய வாயில் மட்டும் திறந்திருந்தது.
- ரயில் தண்டவாளத்தை நோக்கி எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்புறம் இந்த தண்டவாளம் உள்ளது. எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்டிருந்த்துதான் கொண்டாட்டங்களை பார்க்கும் வசதியான இடமாக ரயில்தண்டவாளத்தை மாற்றியிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
- இதனை ஏற்பாடு செய்தோர் மற்றும் நிர்வாகம் செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
- இந்த இடம் முழுவதும் சரியாக விளக்க வெளிச்சம் இருக்கவில்லை. விபத்திற்கு பின்னர்தான் ஒளி ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக உள்ளூர் மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
- இந்த தசரா கொண்டாட்டம் பற்றி ரயில்வே துறைக்கு தெரிந்திருந்ததா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












