திமுகவுக்கு 12 கோடி? அதிமுகவுக்கு 2.20 கோடியா? - முதல்வர் கேள்வி

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

திமுக ஆட்சியில் சாலை அமைக்க கிலோமீட்டருக்கு 12 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 2.20 கோடி போதும் என்று திமுக வழக்கு தொடர்ந்து இருப்பது நியாயமா? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக நிலவிவரும் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு, "உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை, தமிழகத்தில் பிரச்சனைகள் ஏதும் இல்லை. பிரச்சனைக்கு வாய்ப்புகள் உருவாகாமல் இருக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது" என்று தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியின்போது, 2006ஆம் ஆண்டு சாலை அமைக்க கிலோமீட்டருக்கு 12 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 2.20 கோடி போதும் என்று திமுக வழக்கு தொடர்ந்து இருப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தற்போது விடப்பட்டுள்ள ஆன்லைன் டெண்டரில் 10 ஆண்டுகால சாலை பராமரிப்புக்கும் சேர்த்து டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

தமிழக அரசை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் ஆட்சியை கவிழ்க்கவும் கட்சியை உடைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்க ஸ்டாலின் தகுதியற்றவராக திகழ்வதாகவும், திமுக ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெண்டர் விடுவது தொடர்பாக திமுக ஆட்சியில் வகுக்கப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ரத்த உறவுகள் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு தற்போது டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் ஆன்லைன் டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற சாலை அமைக்கும் பணிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 77% கூடுதலாக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அது குறித்து பல்வேறு முறைகேடுகள் தெரிய வந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: