இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என்று அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
அப்படித் திரும்பி வருகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். "தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவில் கோவிட் 19 நோய் தொற்றிக்கொண்டவர்கள் விகிதத்தை அடிப்படையாக கொண்டு" இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா. இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 600 பேர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


இந்த நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியன் டிவியிடம் பேசிய ஒரு மருத்துவர், இந்தியாவில் இருந்து திரும்பி வருகிறவர்களால் ஏற்படும் ஆபத்தின் அளவைக் காட்டிலும் அதிதீவிரமான நடவடிக்கை இது என்று கூறியுள்ளார்.
"மீட்கப்படுவதற்கு வழி இல்லாமல் இந்தியாவில் நமது குடும்பங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன. இது கைவிடும் செயலாகும்" என்று சுகாதார விமர்சகர் டாக்டர் வியோம் ஷார்மர் கூறியுள்ளார்.
திங்கட்கிழமையில் இருந்து 14 நாள்களுக்குள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பவேண்டிய நிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் நுழைவது தடை செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த புதிய விதியை மதிக்கத் தவறுகிறவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையோ, சுமார் ரூ.38 லட்சத்துக்கு இணையான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மே 15ம் தேதி இந்த தடை மறுபரிசீலனை செய்யப்படும் என்கிறது சுகாதார அமைச்சகம்.
இந்த முடிவை எளிதாக எடுத்துவிடவில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், ஆனால், "ஆஸ்திரேலிய பொது சுகாதார அமைப்பு மற்றும் தனிமைப்படுத்தல் முறையின் மீதான நம்பகத் தன்மை பாதுகாக்கப்படுவது அவசியம். தனிமைப்படுத்தல் மையத்தில் கோவிட் நோயாளிகள் எண்ணிக்கையை சமாளிக்கக் கூடிய அளவில் குறைவாக வைத்திருப்பதும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
மறுக்கப்படும் உரிமைகள்
ஃப்ரான்செஸ் மா, பிபிசி செய்திகள் சிட்னி
ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட் அட்டைப் பக்கத்தின் பின் புறத்தில் ஒரு வாக்கியம் இருக்கும். அது வெளிநாடுகளில் ஆஸ்திரேலிய மக்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உதவி வழங்குவது தொடர்பான வாக்கியம் அது.
"ஆஸ்திரேலிய காமன்வெல்த்... இந்த பாஸ்போர்டைக் கொண்டு வருபவர் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன். அவருக்கு எந்த வித தடைகளுமின்றி அவரை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும், அவருக்குத் தேவையானபோது உதவியும் பாதுகாப்பும் வழங்கும்படியும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவரைக் கேட்டுக் கொள்கிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு "சுதந்திரமாக" செல்ல சிரமப்படுவார்கள் என யார் நினைத்திருப்பார்கள்? தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவது, தங்கள் சொந்த நாட்டில் வாழ்வது என்பது குடியுரிமையின் அடிப்படை உரிமை. சொந்த நாட்டுக்குத் திரும்புவது ஒரு உரிமை என சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது, அது சர்வதேச மனித உரிமைகள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் ஒரு சர்வதேச உடன்படிக்கையைக் காட்டி வாதிடுவது தான் வெளிநாடுகளில் தவிக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. குடியுரிமை தொடர்பான உரிமைகள் மற்றும் பல சுதந்திரம் தொடர்பான உரிமைகள் ஆஸ்திரேலிய சட்டப்படி உறுதி செய்யப்படவில்லை. மனித உரிமைகளுக்கான சாசனங்கள் அல்லது தங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி வெளிப்படையாக பாதுகாப்பளிக்காத ஒரு சில மேற்கத்திய நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

பட மூலாதாரம், MANDEEP SHARMA
எனவே, ஒரு அவசர காலத்தில் அரசு எந்த ஒரு செயல்பாட்டையும் இரவோடு இரவாக குற்றமாக அறிவிக்க முடியும். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது, சுகாதார அமைச்சருக்கு நாடாளுமன்றத்தைக் கடந்து உத்தரவிடும் அதிகாரத்தை வழங்க ஆஸ்திரேலியா தன் பயோ பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்தியது.
அதனால் தான் தற்போது ஆஸ்திரேலிய குடிமக்கள் ஆபத்தான பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு வர முயன்றால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வார கால தடையை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவது என்பது அதிக கால அவகாசத்தை கோரும். அதோடு செலவும் அதிகமாக இருக்கும். பொதுமக்களின் கோபம் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் அழுத்தம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கலாம்.
இந்தியாவுக்கு வென்டிலேட்டர், பாதுகாப்புக் கருவிகள் உட்பட அவசரகால மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சகம். "இந்திய மக்கள் மற்றும் இந்திய ஆஸ்திரேலிய சமூகத்துக்கு எங்கள் அனுதாபங்கள்" என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியைக் கடந்துவிட்டது. அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் முழுக்க இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கபட்டார்கள்.
கடந்த பிப்ரவரி 2020-ல், கொரோனாவைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, தங்கள் நாட்டில் கொரோனா அதிகம் பரவிவிடக் கூடாது என்கிற நோக்கில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த அளவிலேயே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருக்கும் போதும், மற்ற நாடுகளை விட மிகக் குறைந்த அளவிலேயே உயிரிழப்புகள் இருக்கிற போதும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் தடை விதித்தது பிரச்சனையை வேறு தளத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. முதல் முறையாக ஆஸ்திரேலியா தன் நாட்டிலிருந்து வெளியேறுவதையும், தன் குடிமக்கள் நாடு திரும்புவதையும் ஒன்றாக நிறுத்தி இருக்கிறது. ஆஸ்திரேயர்கள் நாட்டுக்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












