இந்தியா கொரோனா வைரஸ்: பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு விரிவடைந்த பெருந்தொற்று

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விகாஸ் பாண்டே, ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி செய்தி, டெல்லி

இந்தியாவை மோசமாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் டெல்லி, மும்பை, லக்னெள, புனே போன்ற பெரிய நகரங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் தகன மைதானங்களில் இடம் கிடைக்காத அளவுக்கு பிரச்னை தீவிரமாகி வருகிறது. பல இடங்களில் இறுதிச்சடங்குகள் கார் நிறுத்துமிடத்தில் நடக்கின்றன.

கடைசியில், இந்த பெருந்தொற்று பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் விரிவடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் ராஜேஷ் சோனி கடந்த செவ்வாய்க்கிழமை தனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்க ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கினார். இதற்காக அவர் சுமார் எட்டு மணி நேரம் செலவிட்டார். அவசர ஊர்தி கிடைக்காததால், ஒரு பழைய ஆட்டோவில் தனது தந்தையுடன் அலைந்தார்.

ஆனால், மாலை 5 மணியளவில் தந்தையின் நிலைமை மோசம் அடைந்ததால், விரக்தியடைந்த அவர், மருத்துவமனை தேடலை முடித்துக் கொண்டு விதியின் போக்குக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு வீடு திரும்பினர் ராஜேஷ் சோனி.

"நான் அவருக்கு வீட்டில் மருந்துகளை தருகிறேன், ஆனால் அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை குறைநது வருகிறது. நாங்கள் வீதிகளிலேயே இறக்கும் அளவுக்கு நிர்கதியாகியிருக்கிறோம்," என்று ராஜேஷ் கூறினார்.

பல தனியார் மருத்துவமனைகள் கூட இவரது நிலையை அறிந்தபோதும், பரிசோதனை செய்கிறோம் என்ற பேரில் பணத்தை கறந்ததாக இவர் கூறுகிறார். ஆனால், கடைசியில் படுக்கைகள் இல்லாததால் தந்தையை அழைத்துச் செல்லுமாறு இவரிடம் அந்த மருத்துவமனைகள் கூறியுள்ளன.

"நான் ஒரு செல்வந்தர் அல்ல. சம்பாதித்த அனைத்தையும் டுக்டுக் ஓட்டுநருக்கும் மருத்துவமனைகளுக்குமே செலழித்தேன். இப்போது வீட்டிலேயே ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து சிகிச்சை அளிக்க மேலும் பணத்தை சிலரிடம் கடனாக வாங்கவுள்ளேன்," என்கிறார் ராஜேஷ்.

மறுபுறம் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நகரங்களில் ஒன்றான டெல்லியில் இதுபோன்ற கதைகள் வழக்கமாகி வருகின்றன.

இதே போன்ற கதைகளை சுமக்கும் ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நிலைமையை பிபிசி பார்வையிட்டது. அந்த மாநிலங்களின் நகரங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கு வைரஸ் எவ்வாறு பரவி வருகிறது என்பதையும் பிபிசி அறிந்தது.

கோட்டா, ராஜஸ்தான் மாநிலம்

இந்த நகரிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் மட்டும் 6,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 264 பேர் இங்கு இறந்துள்ளனர் - ஆனால் அவற்றில் 35% உயிரிழப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டுமே ஏற்பட்டன.

ஏப்ரல் 7ஆம் தேதிவரை, இங்கு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக்க 72 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது அது 27 நாட்களிலேயே இரட்டிபாகிறது.

இங்குள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மாவட்டத்தின் 329 தீவிர சிகிச்சை பிரிவுகளில் இரண்டு மட்டுமே ஏப்ரல் 27ஆம் தேதி காலியாக இருந்தன. நகரத்தின் ஒரு மூத்த பத்திரிகையாளர் பிபிசியிடம் பேசும்போது, "நோயாளிகளை சேர்க்க இடமின்றி இருக்கும் மருத்துவமனைகளின் நிலைமையே, இங்குள்ள நெருக்கடிக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இங்கு பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.

கொரோனா

ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவீர், டோசிலிசுமாப் போன்ற மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. இங்குள்ள பிரபலமான மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இங்குள்ள பயிற்சி மையங்களில் சேர ஆர்வம் காட்டுவார்கள்.

இப்போது அந்த மாணவர்கள் பலரும் இங்கிருந்து வெளியேறிவிட்டனர். அதனால், இந்த மாவட்டம் மீதான பார்வை இப்போது வெகுஜன ஊடகங்களிடம் இருந்து விலகியிருக்கிறது.

இங்குள்ள நிலையை கோவிட் சுனாமி என அழைக்கும் உள்ளூர் பத்திரிகையாளர், இங்குள்ள நிலையை சமாளிக்க மருத்துவமனை தயாராக இல்லை என்கிறார். இங்கு வீதிகளில் மக்கள் செத்து மடிவதற்கு முன்பாக கூடுதல் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும்," என்கிறார் அந்த பத்திரிகையாளர்.

அலகாபாத், உத்தரபிரதேச மாநிலம்

கொரோனா

பிரயாகராஜ் என்றும் அழைக்கப்படும் இந்த நகரில் ஏப்ரல் 20ஆம் தேதிவரை 54,339 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் அது பின்னர் 21% அதிகரித்தது. கடந்த வாரத்தில் இங்கு புதிதாக 11,318 பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

கொரோனா வைரஸால் இங்கு ஏற்பட்ட 614 மரணங்களில் 32% ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நடந்தவை. நகரில் சுகாதார வசதிகள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் பிபிசி பேசிய பலரும், நோய்வாய்ப்பட்ட தங்களது உறவினர்களுக்கு ஒரு படுக்கை வசதியைக் கூட கண்டறிய முடியாத நிலையை விவரித்தனர்.

படுக்கை வசதி பற்றாக்குறை குறித்து நகரின் தலைமை மருத்துவ அதிகாரியை தொடர்பு கொள்ள பல முறை பிபிசி முயன்றது. எழுத்துபூர்வமாக அனுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் தரவில்லை.

நகரின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், தகனம மையங்களும் புதைகுழி தோண்டும் பணிகளும் இரவு பகலாக நடந்தன என்று கூறினார்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் சமீபத்தில் தமது மாநிலத்தில் மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் அல்லது ஆக்ஸிஜன் போன்றவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்று கூறினார், ஆனால் அவரது கருத்துக்கும் களத்தில் உள்ள நிலைமைக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஆக்ஸிஜன், ரெம்டெசிவீர் மருந்து, படுக்கை வசதிகளைக் கேட்டு மக்கள் பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக மன்றாடும் காணொளிகளையும் தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக "பொய்" கூறும் எந்தவொரு தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஒரு சிறிய தனியார் மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்வது கடினமாகிவிட்டது. ஆனால் இது பற்றி வெளியே கூறினால் தனது வேலை பாதிக்கப்படலாம் என்பதால் அது பற்றி வெளியே பேசுவதில்லை," என்று கூறினார்.

"எந்தவொரு மருத்துவமனையும் ஏன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக தெரிவிக்க வேண்டும். அதன் அவசியம் ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று கூறுகிறார் அந்த மருத்துவ ஊழியர்.

உத்தர பிரதேச மாநிலத்தில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மருத்துவமனைகள் கூட படுக்கை வசதிகளை வழங்க முடியாத அளவுக்கு நோயாளிகளால் நிரம்பி உள்ளன.

ஆஷீஷ் யாதவின் தந்தை, கான்பூர் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ளார். தனது தந்தைக்கு ஒரு படுக்கை வசதியையோ பரிசோதனை செய்ய ஒரு மருத்துவரையோ கூட அவரால் பெற முடியவில்லை.

"நான் எல்லா இடங்களிலும் கெஞ்சினேன், வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. விளம்பரம் செய்யப்பட்ட உதவி தொலைபேசி எண்களின் அழைப்பை யாரும் எடுக்கவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

கபீர்தாம், சத்தீஸ்கர் மாநிலம்

கடந்த மார்ச் 1ஆம் தேதி, இங்கு கோவிட் -19 பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. ஆனால் கடந்த ஏழு நாட்களில் இங்கு கிட்டத்தட்ட 3,000 புதிய பாதிப்புகள் பதிவாகின.

கபிர்தாம் மாவட்ட மருத்துவமனையில் ஏழு வென்டிலேட்டர்கள் உள்ளன. ஆனால் உயிர் காக்கும் கருவிகளை இயக்க பயிற்சி பெற்ற மருத்துவர்களோ ஊழியர்களோ இல்லை. அரசாங்க தரவுகளின்படி, மாவட்ட மருத்துவமனையில் 49 சிறப்பு மருத்துவர்கள் இருக்க வேண்டும், ஆனால் ஏழு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். செவிலியர்கள் மற்றும் பரிசோதனை கூட தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் இங்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது.

"உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகையில், மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளால் நோயாளிகளைக் கையாள முடியவில்லை. ஏனெனில் இங்கு மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கு இங்குள்ள மருத்துவ நிர்வாகம் தயாராக இருக்கவில்லை. சரியான சிகிச்சை கிடைக்காமல் பலரும் உயிரிழந்துள்ளனர்," என்று தெரிவித்தனர்.

பாகல்பூர் மற்றும் ஒளரங்காபாத்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு மாநிலமான பிகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் அதன் பாதிப்பு அளவு 26% அதிகமாக இருந்தது. அதே காலகட்டத்தில் இறப்புகளின் எண்ணிக்கை 33% அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள ஜவாஹர் லால் நேரு மருத்துவ கல்லூரியில் (ஜே.என்.எம்.சி) மட்டுமே ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளன. அதன் 36 பிரிவுகளும் ஏப்ரல் 28ஆம் தேதி நிரம்பி வழிந்தன. மருத்துவமனையில் உள்ள 350 ஆக்சிஜன் படுக்கைகளில் 270க்கும் மேற்பட்டவை நோயாளிகளால் நிரம்பியுள்ளது.

மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, 220 மருத்துவர்களில் 40 பேர் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் நான்கு பேர் இறந்ததாகவும் கூறினார். இது மருத்துவமனையின் அழுத்தத்தை அதிகரித்தது.

மாநிலத்தின் மேற்கில் உள்ள ஒளரங்காபாத் மாவட்டமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 முதல் இங்கு 5,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் இருந்தன. அதே காலகட்டத்தில் ஆறு பேர் இறந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் பரிசோதனை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதால் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதை விட அதிகமாக இருப்பதாக மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 பரிசோதனை செய்ய முடியாமல் பலர் இறக்கின்றனர். அத்தகைய மரணங்கள் அலுவல்பூர்வ தரவுகளுக்குள் செல்லாது.

சுமித்ரா தேவி ஒளரங்காபாத்தில் பரிசோதனை செய்ய சிரமப்பட்டார். அவரது நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தபோதும் அவரால் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியவில்லை. பாசிட்டிவ் முடிவுக்கான சான்றிதழ் இல்லாததால் அவரை சேர்த்துக் கொள்ள மருத்துவமனைகள் முன்வரவில்லை.

பிறகு அவரது குடும்பத்தினர் அருகே உள்ள மாவட்டத்தின் சிறிய தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர், அங்கு அவருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. ஆனால் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியில்லை என்று கூறியது. இதனால் அவரை மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் அனுமதிக்கப்படுவதற்கு பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

நைனிடால், உத்தராகண்ட் மாநிலம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இமயமலையில் உள்ள சுற்றுலா மாவட்டமான நைனிடால், அதிகரித்து வரும் பாதிப்புகளை சமாளிக்க போராடி வருகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி இங்குள்ள 142 ஐசியு படுக்கைகளில் குறைந்தது 131 படுக்கைகளில் நோயாளிகள் இருந்தனர். அதன் 771 ஆக்ஸிஜன் படுக்கைகளில் 10 மட்டுமே காலியாக இருந்தன.

இது கடந்த வாரத்தில் 4,000க்கும் மேற்பட்ட பாதிப்புகளாயின. இங்கு 82 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டத்தால் இனி அதிக பாதிப்புகளை கையாளுவது கடினம் என்ற நிலை உள்ளது. காரணம், இங்கு ஏற்கெனவே சிகிச்சை வசதிகள் குறைவாக உள்ள தொலைதூரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு உள்ளூர் மருத்துவர், "நிலைமை மோசமாக இருக்கிறது. பார்க்கே பயமாக உள்ளது, என்று கூறினார்.

"நாங்கள் இந்த சூழ்நிலையில் இருக்க காரணம், தொலைதூர பகுதிகளில் மருத்துவ வசதிகளை பெருக்க அரசு திட்டமிடாததுதான். இங்கே இப்படி என்றால் தொலைதூர இமயமலை பகுதிகளில் பலரும் இறந்து போவார்கள். அவர்களை பற்றி நாம் அறியாமலேயே போய் விடுவோம். அரசின் கொரோனா இறப்பு புள்ளி விவரத்திலும் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்," என்கிறார் அந்த மருத்தவர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :