இரான் போராட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவை கூட்டுவதா? அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா

பட மூலாதாரம், Reuters
இரானில் நடந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழுவை அமெரிக்கா கூட்டியிருப்பதை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
உள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்புக் குழுவை ஈடுபடுத்தியிருப்பது ஐ.நா. அமைப்பின் மாண்மை சிதைத்திருப்பதாக இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாசிலி நெபென்சியா கூறினார்.
வீரம்செறிந்த மக்களின் பலமான வெளிப்பாடு என்று அந்தப் போராட்டத்தை சில நிமிடங்களுக்கு முன்புதான் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி புகழ்ந்திருந்தார்.
பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்ற தமது நிலையை அமெரிக்கா தவறாகப் பயன்படுத்திவருவதாக இரானுக்கான ரஷியத் தூதர் தெரிவித்தார்.
டிசம்பர் இறுதி வாக்கில், இரானில் தொடங்கிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் பல நகரங்களுக்குப் பரவி அரசெதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது.
இப்போராட்டங்களில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அரசுக்கு ஆதரவான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவமான புரட்சிகரக் காவல்படை அறிவித்தது.
உள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்புக் கவுன்சிலை கூட்டியதற்காக பல நாடுகள் அமெரிக்காவை விமர்சித்தன.

பட மூலாதாரம், Reuters
உலகின் பார்வையில் அமெரிக்கா தார்மீக, சட்டபூர்வ, அரசியல் உரிமையை இழந்து நிற்பதாக ஐ.நா.வுக்கான இரான் தூதர் கோலமலி கொஷ்ரூ அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இரானின் உள்நாட்டு விவகாரத்தில் செய்யப்படும் எந்த தலையீடும் நேரெதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். அங்கு நடக்கும் போராட்டங்கள் கவலை அளித்தாலும் அது உள்நாட்டு அமைதிக்கோ, பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலாக இல்லை என்று பிரான்ஸ் தூதர் ஃப்ரான்சே டெலாட்ரீ தெரிவித்தார்.
இரானோடு செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பொறுப்பை சர்வதேச சமூகம் ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குத் தரவேண்டிய அனுமதியை டிரம்ப் நிர்வாகம் தரவில்லை.
பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டுவதற்கு நிக்கி ஹேலி விடுத்த அழைப்பு பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இரான் விவாகாரத்தை விவாதிப்பதற்காக கூட்டம் கூட்டப்படுவதை முறியடிக்க ரஷியா முயற்சித்தது. பலத்த முயற்சிகளுக்குப் பிறகே அமெரிக்காவால் கூட்டத்தை கூட்ட முடிந்தது என்கிறார் ஐ.நா.வுக்கான பிபிசி செய்தியாளர் பிளெட் உஷெர்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












