சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கான சேமிப்பு - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பெண்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வியாபாரத்தின் மூலமாக லாபத்தை பெருக்கிக் கொள்வர். ஆனால் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் முதலீடு செய்வதன் மூலம் தான் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.

இப்போது இருக்கும் பொருளாதார சூழலில், பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வது அத்தனை நல்ல யோசனை அல்ல என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களில் முதலீடு செய்தால் விலை ஏறுமா என்கிற பயம் நம்மை வாட்டுகிறது. 5 - 10 ஆண்டு கால வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் கூட 5.4 சதவீதம் தான் எஸ்பிஐ வங்கி வட்டி கொடுக்கிறது.

பெண் குழந்தைகளின் எதிர் கால வாழ்கைக்குத் தேவையான சேமிப்பாக இருக்க வேண்டும், உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்பாக இருக்க வேண்டும், அதற்கு நல்ல வட்டி வருமானம் வேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்பவர்களுக்கே வடிவமைக்கப்பட்டது தான் அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.

Sukanya Samriddhi Yojanaவில் யார் இணையலாம்?

1. ஒரு பெண் குழந்தை 10 வயது அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.

2. ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

3. பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.

4. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.

கணக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருமானக் கணக்கு

எங்கு தொடங்கலாம்

இந்தியாவில் இருக்கும் அஞ்சலக அலுவலகங்கள், பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இத்திட்டத்துக்கான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் இந்த கணக்கை மாற்றம் செய்து கொள்ளலாம்.

வட்டி எவ்வளவு

இந்தியாவில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது. 2014 - 15 காலகட்டத்தில் 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.6 சதவீதமாக குறைந்திருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியே 7.4 சதவிகிதம் தான். அதை விட இத்திட்டத்துக்கு 0.2% வட்டி கூடுதலாக வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இத்திட்டத்துக்கான வட்டி, முதலீட்டு கணக்கில் செலுத்தப்படும்.

Sukanya Samriddhi Yojana முதலீட்டு வரம்பு

குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்யலாம்.

250 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுத் தொகை 300, 350, 400... என 50 ரூபாய் கூட்டலில் குறைந்தபட்ச தொகையைச் நிர்ணயித்து செலுத்தலாம் என்கிறது நேஷனல் சேவிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வலைதளம்.

வருமான வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருமான வரித் துறை

Sukanya Samriddhi Yojana வரிச் சலுகை

இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பணத்துக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.

இதில் மிகவும் கவனிக்க வேண்டிய மற்றும் ஈர்ப்பான விஷயம் என்னவென்றால், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

கணக்கு செயலிழப்பு

ஒருவேளை குறிப்பிட்ட முதலீட்டுத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால், கணக்கு செயலிழந்துவிடும்.

அப்படி செயலிழக்கும் கணக்கை, ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் + ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்கிறது நேஷனல் சேவிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வலைதளம்.

Sukanya Samriddhi Yojana கணக்கை யார் இயக்குவது

18 வயது பூர்த்தி ஆகும் வரை பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இயக்க வேண்டும். 18 வயதுக்குப் பிறகு யார் பெயரில் கணக்கு இருக்கிறதோ, அவர் தான் கணக்கை இயக்க வேண்டும்.

மருத்துவ செலவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவ செலவுகள்

முன் கூட்டியே கணக்கை மூடலாமா?

ஒருவேளை, யார் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதோ அவர் இறந்துவிட்டால் கணக்கை மூடி பணம் எடுக்கலாம்.

அதே போல கணக்குதாரருக்கு மோசமான உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, பெண்ணின் பாதுகாவலர் இறந்து கணக்கில் பணம் செலுத்துவது சிரமமாக இருந்தாலோ தகுந்த ஆதாரங்களை கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் சமர்பித்து கணக்கை முன் கூட்டியே மூடி பணத்தை எடுக்கலாம். ஆனால், கணக்கை தொடங்கி ஐந்து ஆண்டுகாலம் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sukanya Samriddhi Yojana கணக்கிலிருந்து நடுவில் பணம் எடுக்கலாமா?

இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பெண் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த பிறகு அல்லது 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக, கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தை எடுக்கலாம்.

முதிர்வு எப்போது?

சுகன்யா சம்ரிதி திட்டம் முதலீடு செய்யத் தொடங்கி 21 ஆண்டுகளில் நிறைவடையும் என்கிறது நேஷனல் சேவிங்ஸ் இன்ஸ்டிட்யூட்.

ஆனால் 18 வயது நிறைவடைந்த பெண், தன் திருமணத்தை முன்னிட்டு கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கிறது என்.எஸ்.ஐ வலைதளம்.

மேற்கொண்டு விதிமுறைகளை விரிவாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்: http://www.nsiindia.gov.in/InternalPage.aspx?Id_Pk=171

இந்திய ரூபாய் கரன்சிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ரூபாய் கரன்சிகள்

இது குறித்து நிதி ஆலோசகர்கள் என்ன கூறுகிறார்கள்?

"இந்தியாவிலேயே வெகு சில திட்டங்களுக்கு மட்டும் தான் முதலீடு செய்யும் போதும், முதிர்வடைந்து பணத்தை எடுக்கும் போதும் வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதே போல இப்போது நிலவும் பொருளாதார சூழலில் கூட 7.6 சதவீதம் வட்டி கொடுக்கும் நிலையான, அரசு சேமிப்புத் திட்டம் என்றால் அது செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தான்.

இந்தியாவில் அஞ்சலகம் தொடங்கி வங்கிகள் வரை எங்கு வேண்டுமானாலும் கணக்கை இயக்க முடியும், பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவது எல்லாம் இத்திட்டத்தின் சிறப்பம்சம்.

அரசுத் திட்டம் என்பதால் முதலீடு செய்யும் பணத்தை எண்ணி பயப்படத் தேவை இல்லை. 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் என்பதெல்லாம் இத்திட்டத்தின் மிகப் பெரிய சாதக அம்சம். எனவே நம்பி முதலீடு செய்யலாம். மாத சம்பளதாரர்கள், ஏழை எளிய மக்களுக்கு பொருந்தும் நல்ல திட்டம் இது" என்கிறார் முதலீட்டு ஆலோசகர் ராஜசேகரன்.

காணொளிக் குறிப்பு, “இந்த ஆபத்தான வேலைதான் எனக்கு பிடிச்சிருக்கு,” - மரண கிணற்றில் சாகசம் செய்யும் குஜராத் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :