தமிழ்நாடு பட்ஜெட்: பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு, முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 ரூபாய் குறைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2021 - 2022 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முதல் முறையாக நிதி நிலை அறிக்கை காகிதமில்லாத நிதி நிலை அறிக்கையாக தாக்கல்செய்யப்பட்டது. இதற்கென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது இருக்கையில் கம்யூட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சர் எழுந்தபோது, அ.தி.மு.கவினர் தாங்கள் பேச வேண்டுமென குரல் எழுப்பினர். இதனை பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவது குறித்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரிகுறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதால் ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோலின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரி போன்றவை மாறாத நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 3 ரூபாய் வரி குறைப்பு அதன் விலையில் எதிரொலிக்கும். பிற முக்கிய அறிவிப்புகள்:
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு உரிய சரிபார்த்தலுக்கு பிறகு 2,29,216 குறைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன.
மத்திய - மாநில அரசுகளின் நிதி உறவுகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறையில் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகுமாறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு 10.39 ரூபாயாகக இருந்தது தற்போது 32.90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மீதான வரி 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் 3.57 ரூபாயாக இருந்தது தற்போது 31.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்புடம் மேல்வரிகள், முழுமையாக அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையின்றி தொடர்கின்றன எனவும் இந்தியக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக வருவாய் மற்றும் வரிவிதிப்பு (ஜிஎஸ்டி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
தரவுகளைச் சேகரித்தல்
அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை (e-procurement) கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும்.

பட மூலாதாரம், M.K. Stalin/Facebook
சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், 1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக, உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்புச் செயலகம் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குப் புத்துயிர் அளிக்கப்படும். 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமலிருக்கும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3ஆம் தேதி 10 இலட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.
தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.
தொல்லியல் ஆய்வுகள்
தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, 5 கோடி ரூபாய் நிதி இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படும்.
கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையில் காலியாக உள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் வரைபடங்களின் உதவியுடன் அறிவியல்பூர்வமாக தேர்வு செய்யப்படும்.
நீர் வளங்கள்
அடுத்த 10 ஆண்டுகளில், 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும். மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை போன்ற முக்கிய அணைகளின் நீர்த்தேக்க கொள்ளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த, தேவையான திட்டங்கள் வகுக்கப்படும். 111.24 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
2021-22ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர்ப்பாசனக் குளங்களைத் தரப்படுத்துலுக்கான சிறப்புத் திட்டம் ஒன்று இந்த அரசால் தொடங்கப்படும்.
கல்லணை கால்வாய் புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து 2,639.15 கோடி ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் பங்களிப்புடனும், பலதரப்பட்ட மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடும் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, முதலமைச்சரின் தலைமையின் கீழ், 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.

பட மூலாதாரம், Reuters
ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை அமைப்புகள் (MIS), நவீன ஆயுதங்கள் மற்றும் வன நிலப்பரப்பிற்கேற்ற வாகனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை (Blue Flag Certifcate) பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
'நீலக்கொடி சான்றிதழ்' இந்தியாவின் முதல் "ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.
இந்தியாவின் முதல் "ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்தவும், அதன் இயற்கை சூழலை மீட்டுருவாக்கம் செய்யவும் மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையின் கீழ், "தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்" ஒன்றினை இந்த அரசு ஏற்படுத்தும். இந்த இயக்கம் ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிந்து, அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும். இதற்கென 150 கோடி ரூபாய் நிதி ஐந்தாண்டுகளுக்கு செலவிடப்படும்.
மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புரங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும்.
தற்போது வீட்டிற்கான குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.
கிராமப்புரங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் 2.76 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.
இந்த அரசு, 2021-22 ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.
மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்திய 'நமக்கு நாமே' மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து அந்த ஊர்களின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புரங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும்.
திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் TUFIDCO நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும். 'கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 2021-22ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்.
சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்க சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும். சென்னை நகரில் 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புர ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். 100 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டு காலத்திற்குள், தமிழ்நாடு முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்காக 3,954.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் உட்பட ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களிலிருந்து குடிசையில் வாழும் மக்களை மனிதாபிமானத்துடன் நியாயமான முறையில் மறுகுடியமர்த்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை வகுக்கப்படும்.
நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்கலாம் திட்டத்திற்காக 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்படுகிறது. ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 623.59 கோடி ரூபாய் செலவில் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ இரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
மெட்ரோ திட்டத்தை விமான நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணி விரைவில் துவங்கப்படும். மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்படும்.
"தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல"
ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.
அடுத்த 10 ஆண்டுகளில், சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில் 17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும்.
வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்க 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை
தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.
பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.
2025ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்', 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.
25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.
மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும்.
'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் மகத்தான முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்பட்டு 257.16 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2008ல் துவங்கப்பட்ட 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் திட்டத்தில் உள்ள இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்பட்டு, சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.
265 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை
போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாயில் நிலை நிதி ஏற்படுத்தப்படும். அதிலிருந்து வரும் வட்டியில் பூஜைகள் செய்யப்படும்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலங்கள் முன் தணிக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, அவை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் செலுத்தும் வங்கியாக (Payments Bank) மாற்றப்படும்.
இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
வரும் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட அறிக்கையுடன், எளிய மொழியில் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். இதனால் அரசின் நிதிநிலையை பற்றி ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விவாதங்கள் ஊக்குவிக்கப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி வழங்குவதன் நோக்கத்திற்காக குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. இத்திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி
முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.
பெட்ரோல்
பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவிற்கு குறைக்கபடும். இதனால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வரி வருவாய் 2,18,991.96 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. தற்போது அது 2,02,495.89 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
2021 - 22ஆம் ஆண்டில் இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, இந்தத் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 58,692.68 கோடி ரூபாயாக உயரும்.
2006-07ஆம் ஆண்டில் 8.48 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 2020-21ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பைக் குறிக்கிறது.
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசிற்கு பலனளிக்கக்கூடிய விதமாக "சமாதான் திட்டம்" அறிவிக்கப்படும்.
பிற செய்திகள்:
- சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்
- ஆயிரக்கணக்கான வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கான காரணம் என்ன? – வியக்க வைக்கும் குடும்பம்
- கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் எல். முருகனின் 'ஆசீர்வாத யாத்திரை' - பாஜகவின் திட்டம் என்ன?
- ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கடித்த மேயர்: புது பதக்கம் தருகிறது ஒலிம்பிக் கமிட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












