ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் : அறிவாலய சந்திப்பில் ஸ்டாலின் அளித்த பதில் என்ன?

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி (கோப்புப்படம்)
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்" - என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

'சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களை ஒதுக்க வேண்டும்' என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனை மறுத்துள்ள தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'இடப்பங்கீடு தொடர்பாக ராகுல்காந்தியும் ஸ்டாலினும் மட்டுமே முடிவெடுப்பார்கள்' என்கிறார். காங்கிரஸின் கோரிக்கையை தி.மு.க ஏற்பதற்கு வாய்ப்புள்ளதா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது. இதுதவிர, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் தி.மு.க நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டிசம்பர் 22 அன்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெற வேண்டியது அவசியம்" எனக் கூறியுள்ளார்.

'ஆட்சியில் பங்கு' - கிரிஸ் சோடங்கர் பேட்டி

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், TNCC

படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக நவம்பர் 22-ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்தார்.

"கட்சியில் விருப்ப மனுக்களை வாங்குவதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடம் பணம் கேட்பதில்லை" எனக் கூறியுள்ள கிரிஸ் சோடங்கர், "எதையும் எதிர்பார்க்காமல் இரவு பகலாக தொண்டர்கள் உழைக்கின்றனர். ஒவ்வொரு தொண்டரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால் விருப்ப மனுக்களுக்கு பணம் பெறுவதில்லை," எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், "தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை காங்கிரஸ் நியமித்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக எங்கள் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வாக்குறுதிகளை அளிப்பார்கள். அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற வேண்டியது அவசியம்," என்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக நவம்பர் 22-ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்தார்.

கிரிஷ் சோடங்கர் தலைமையிலான இந்தக் குழுவில் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சூரஜ் எம்.என்.ஹேக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள கிரிஷ் சோடங்கர், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை ஐவர் குழு சந்தித்துப் பேசியது. விரைவில் கூட்டணியை இறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டோம்" என்கிறார்.

"வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.கவின் கைகளில் முடிவுகள் உள்ளன. அதற்காக காத்திருக்கிறோம்" என்கிறார், கிரிஸ் சோடங்கர்.

இதன்மூலம், 'ஆட்சியில் பங்கு' என்பதைக் கூட்டணிக்கான நிபந்தனையாக காங்கிரஸ் முன்வைக்கிறதா?' என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

முதலமைச்சரிடம் பேசியது என்ன?

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், Facebook/Selva Perunthagai

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலினை டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு சந்தித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு சந்தித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமாரும் இடம்பெற்றிருந்தார். "அப்போது என்ன பேசப்பட்டது?" என அவரிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

"கூட்டணியில் 70 இடங்களை ஒதுக்குமாறு முதலமைச்சரிடம் கூறினோம். வெளியில் கூட்டணி தொடர்பாக பல்வேறு செய்திகள் வலம் வருவதால் விரைவில் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினோம்." என்கிறார்.

அதைக் குறிப்பிட்டு கிரிஸ் சோடங்கர் பேட்டியளித்துள்ளதாகக் கூறும் ராஜேஷ்குமார், "ஐவர் குழுவுக்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், 'தேர்தல் பேச்சுவார்த்தைக்குக் குழு ஒன்றை அமைக்க உள்ளோம். அதன்பிறகு பேசலாம்' என்று மட்டும் பதில் அளித்தார்" எனக் கூறினார்.

'எதுவும் பேசப்படவில்லை' - ஆர்.எஸ்.பாரதி

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், X/RS Bharathi

படக்குறிப்பு, தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி. (கோப்புப்படம்)

"ஆனால், முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக மட்டுமே கிரிஸ் சோடங்கர் தலைமையிலான குழு சந்தித்துப் பேசியது" எனக் கூறுகிறார், தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி.

"இந்தச் சந்திப்பில் வேறு எந்த விவகாரங்களும் பேசப்படவில்லை. தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை" எனவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐவர் குழு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது, தி.மு.க தரப்பில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

70 இடங்களை ஒதுக்குவது சாத்தியமா?

தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை தி.மு.க ஒதுக்கியது. இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கியது. அப்போது எட்டு இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அதுவே 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்றது.

"அந்தவகையில், 70 இடங்களை தி.மு.க கொடுப்பது சாத்தியமா?" என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏவிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. அந்தளவுக்கு கிராம அளவிலும் வாக்குச்சாவடி அளவிலும் கட்சியை பலப்படுத்தியுள்ளோம். முன்பிருந்த நிலை தற்போது இல்லை," என்கிறார்.

"எங்களுக்கு தமிழ்நாட்டில் 70 இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். தி.மு.க தரப்பில் இருந்து நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்," எனவும் அவர் பதில் அளித்தார்.

"அதிக இடங்கள் வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுவதன் மூலம் எந்த விவாதமும் ஏற்படப் போவதில்லை. அதுகுறித்து தி.மு.கவுக்கு எந்தவித கவலையும் இல்லை," எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"மேலிடப் பொறுப்பாளர் பதவி என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. அவர் கூட்டணிக்கு பொறுப்பாளர் அல்ல. தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகியவை உள்ளன. இதில் பெரிய கட்சியாக காங்கிரஸைப் பார்க்க முடியாது," எனவும் அவர் குறிப்பிட்டார்.

'காங்கிரஸை நம்பி தி.மு.க இல்லை'

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், TNCC

படக்குறிப்பு, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார்

2011 தேர்தலில் 63 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கியது குறித்துப் பேசும் ஷ்யாம், "அப்போது மத்திய அரசில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தது. அதனால் 63 இடங்களைப் பெற முடிந்தது" என்கிறார்.

"தேசிய அளவிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.கவை நம்பியே காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை நம்பி தி.மு.க இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக இடங்களைக் கேட்பது குறித்துப் பேசும் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், "கொள்கை அளவில் பா.ஜ.கவை தி.மு.க எதிர்க்கிறது. அந்தவகையில் தி.மு.க உடன் காங்கிரஸ் நிற்கிறது. கூட்டணியில் நீண்டகாலமாக பயணிக்கிறோம். அதிக இடங்களைக் கேட்பது நியாயமான ஒன்று தான்." எனக் கூறினார்.

"ஒவ்வொரு தேர்தலின்போதும் அதிக இடங்களைக் கேட்பது கட்சிகளின் வழக்கமான கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக, இரு கட்சிகளின் தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள்," எனக் கூறுகிறார், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

'ஆட்சியில் பங்கு' - தி.மு.கவின் பதில் என்ன?

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், Shyam

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கு தி.மு.கவில் இடமில்லை. தேர்தல் முடிந்த பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் வரும்போது மட்டுமே இதுபோன்ற பேச்சுகள் எடுபடும்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"மாநில அரசியலில் கோலோச்சும் கட்சிகள், வேறு யாருக்கும் பங்கு தருவதற்கு வாய்ப்பில்லை. விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறுமாறு கூறுவதற்கும் வாய்ப்பில்லை. மாறாக, கூட்டணியை விட்டு வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் இழப்பு ஏற்படும்," என்கிறார் அவர்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "ஆட்சியில் பங்கு என அவர்கள் கூறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தியும் ஸ்டாலினும் பேசி முடிவெடுப்பார்கள் என்று பல ஊடகப் பேட்டிகளில் கூறிவிட்டோம்." என்கிறார்.

"அந்தவகையில், தி.மு.க தரப்பில் இருந்தோ காங்கிரஸ் தரப்பில் இருந்தோ இடையில் வேறு யார் எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் அது எடுபடாது," எனவும் அவர் தெரிவித்தார்.

"2019-ஆம் ஆண்டு முதலே கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் பேசி முடிவு செய்கின்றனர். தொடர் வெற்றியைத் தரக்கூடிய கூட்டணியாகவும் இந்த அணி உள்ளது. இறுதியில் நல்ல முடிவு எட்டப்படும்," என்கிறார், ஆர்.எஸ்.பாரதி.

"தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை நியமித்துள்ளது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளரிடம் இப்பணியை ஒப்படைத்துள்ளது. அவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்ற விஷயங்கள் குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை" என்கிறார், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

மாற்றுவழி த.வெ.கவா?

காங்கிரஸ், திமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு

பட மூலாதாரம், Facebook/Jothimani

படக்குறிப்பு, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

இந்தநிலையில், டிசம்பர் 5-ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் (All India Professionals' Congress & Data Analytics) பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் சந்திப்பில் கூட்டணி தொடர்பாக பேசியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாயின. இந்த தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி, "விஜயை நான் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை" எனக் கூறியிருந்தார். "இதனால் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை" எனவும் பேட்டியளித்திருந்தார்.

இதைப் பற்றிப் பேசும் ஷ்யாம், "காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் மாற்று யோசனையாக த.வெ.கவை முன்வைக்கின்றனர். அதைப் பற்றி தி.மு.க கவலைப்படப் போவதில்லை. கூட்டணியை விட்டு வெளியேறினாலும் தி.மு.கவுக்கு எந்த இழப்பும் இல்லை." என்கிறார்.

இதற்குப் பதில் அளிக்கும் ஜோதிமணி எம்.பி, "த.வெ.க நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதை பிரதான விஷயமாக பார்க்க வேண்டியதில்லை. சில நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது இயல்பானது. இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.

"கூட்டணியில் கட்சியின் பலத்தை வைத்து தான் அதிக இடங்களைக் கேட்கிறோம். தேர்தல் காலத்தில் கட்சித் தலைமை உரிய முடிவை எடுக்கும்" எனக் கூறும் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், "குறைவான இடங்களை தி.மு.க ஒதுக்கினால் நல்ல முடிவை காங்கிரஸ் தலைமை எடுக்கும்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு