புத்தாண்டு தீர்மானம் தோல்வியடையாமல் இருக்க வல்லுநர்கள் கூறும் 5 வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ
கடந்த சில நாட்களாகவே புத்தாண்டு மற்றும் அதனையொட்டிய தீர்மானங்கள் தொடர்பான செய்தி தான் எல்லா இடங்களிலும் பகிரப்படுவதைப் பார்க்க முடிகிறது.
உடற்பயிற்சி கூடம் மற்றும் டயட் திட்டம் தொடர்பான விளம்பரங்கள் சமூக ஊடகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. உரையாடல்கள் அனைத்துமே, ஜனவரி முதல் எதை கைவிடுகிறோம், எந்தப் பழக்கத்தை புதியதாக கையில் எடுக்கிறோம், எதைச் சரியாக செய்ய இருக்கிறோம் என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது.
ஆனால் பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் நிலைப்பதில்லை. நம்மில் பலரும் ஜனவரி மாதம் தாண்டுவதற்குள்ளாகவே நமது இலக்குகளை கைவிட்டிருப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் இது போலவே தொடர்கிறதா? வருகிற புத்தாண்டும் அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை. புத்தாண்டு தீர்மானங்களை வெற்றிகரமாக கடைபிடிப்பதற்கு தேவையான வழிகளை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
1. யதார்த்தமாக இருங்கள்
2026-ஆம் ஆண்டில் நீங்கள் உடல் எடையை குறைக்கப் போகிறீர்களா? வேலையை மாற்றப் போகிறீர்களா? அல்லது வீடு மாறப் போகிறீர்களா?
இத்தகைய செய்தி உங்களுக்கு வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பொது மருத்துவரும் நம்பிக்கை பயிற்சியாளருமான க்ளேர் கேய்.
இவை எதுவுமே செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் இல்லை, மாறாக அழுத்தம் தரும் வசனங்களே என்கிறார் அவர்.
தீர்மானங்கள் தோல்வி அடைவதற்கான காரணம் அவை தெளிவு மற்றும் யதார்த்தம் இல்லாமலும் மிகவும் பரந்துபட்டதாகவும் இருப்பதே என்கிறார் க்ளேர்.
உங்கள் வாழ்க்கையில் எது வேலை செய்கிறது? எது உங்களை சோர்வாக உணர வைக்கிறது? எது உங்களுக்கு இனி பொருந்துவதில்லை? எது உங்களை நிற்காமல் ஓட வைத்துக் கொண்டே இருக்கிறது போன்றவற்றை எழுதி வைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
"உங்களுக்கு எதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, எது அதிகம் தேவைப்படுகிறது என்பது புரிந்தால் மாற்றம் என்பது மேலும் நிலையானதாக இருக்கும்," என்கிறார் க்ளேர்.
உங்களின் இலக்குகளை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி வைக்காமல், நீங்கள் பயணிக்க வேண்டிய திசை மற்றும் பெற வேண்டிய அனுபவம் ஆகியவற்றின் மீது குறிவைத்து அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
"எடை இழக்க வேண்டும்" என்பதை "நான் உடலில் மிகவும் சௌகரியமாகவும் ஆற்றல் நிறைந்தும் உணர வேண்டும், அதோடு நான் அவ்வாறு உணர்வதற்கு எது எனக்கு உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என எழுத வேண்டும் எனக் கூறுகிறார் க்ளேர்.
"வேலையை மாற்று" என்பதை "எந்த வேலை எனக்கு அர்த்தமும் ஊக்கமும் தருகிறது என ஆராய்ந்து அதை நோக்கி ஒரு சிறிய படி எடுத்து வைக்க வேண்டும்," என எழுதலாம் என்கிறார்.
2. இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்

பட மூலாதாரம், Getty Images
நம்முடைய இலக்குகளைக் குறிப்பிடும்போது "எப்போதும்" அல்லது " "எப்போதும் இல்லை" என்பது போன்ற நிலையான மொழியை தவிர்க்க வேண்டும் என்கிறார் உளவியலாளரான கிம்பர்லி வில்சன்.
'அடைந்நால் எல்லாவற்றையும் அடைய வேண்டும் இல்லையென்றால் ஒன்றுமே இல்லை' என்கிற கடைபிடிப்பதற்கு கடினமான அணுகுமுறையை இது உருவாக்குகிறது.
"நான் புதன்கிழமைகளில் எப்போதும் ஓடச் செல்வேன்" அல்லது "நான் இனி எப்போதும் மது அருந்தப் போவதில்லை" என உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்வது தோல்விக்கே வித்திடும்.
பிபிசியின் வாட்ஸ் அப் டாக் என்கிற பாட்காஸ்டில் பேசுகையில், "இதற்கு மிகச் சிறந்த உதாரணம் டயட் அல்லது உடற்பயிற்சி தான். இதை நாம் ஒருநாள் கடைபிடிக்க முடியவில்லை என்றால் ஒட்டுமொத்த பழக்கமுமே அர்த்தமற்றது என மக்கள் நினைக்கின்றனர்." என கிம்பர்லி தெரிவித்தார்.
மக்கள் ஒரு குறுகிய பார்வையை வளர்த்துக் கொள்கின்றனர் எனக் கூறும் அவர், ஒரு தேர்வை தனித்துப் பார்க்கக்கூடாது. ஒரு தருணத்தை பலவற்றுடன் சேர்த்துப் பார்க்கும் பரந்துபட்ட பார்வை தான் தேவை என்கிறார் அவர்.
ஒருவர் தனது இலக்குகளை "நான் இதை பரிசோதித்து பார்க்க வேண்டும்," அல்லது "நான் இதைச் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்" அல்லது "எனக்கு என்ன வேலை செய்யும் என கற்றுக்கொள்கிறேன்," என்பது போன்ற நெகிழ்வான வார்த்தைகளைப் பயன்படுத்தி குறிப்பிட வேண்டும் என கேய் தெரிவிக்கிறார்.

3. மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் இருக்க வேண்டும்
நீங்கள் ஒரு விஷயத்தை பல வாரங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் திடீரென ஒருநாள் செய்ய முடியாமல் போனால் தோற்றதைப் போல உணர்கிறீர்கள்.
சில தீர்மானங்கள் தோல்வி அடைவதற்கான காரணத்தை விளக்கிய வில்சன், "மக்கள் அவர்கள் சிறந்த நிலையில் இருக்கும் சூழலை மனதில் வைத்து திட்டமிடுகிறார்கள். ஆனால் தாமதமான ஒரு நாள், கடினமான ஒரு நாள் போன்றவற்றை மனதில் வைத்து திட்டமிடுவதில்லை." என்றார்.
ஏதாவது காரணத்தால் நம்முடைய தீர்மானத்தை ஒருநாள் செய்ய முடியாமல் போகிறபோது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதை நடைமுறையின் ஒரு அங்கமாக நாம் எடுத்துக் கொள்வது முக்கியமானது என்கிறார் வில்சன்.
இதனால் நாம் தோற்றுவிட்டோம் என நினைக்கக்கூடாது, ஏனென்றால் துல்லியத்தை விட தொடர்ச்சி தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
"மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது இலக்கல்ல, ஒரு மோசமான தருணம் ஒட்டுமொத்த திட்டத்தையும் பாதிப்பதை தவிர்க்க வேண்டும்," என்பது முக்கியமானது என்கிறார் கேய்.
நாம் அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் வரை காத்திருக்காமல் ஒவ்வொரு நாளையும் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.
4. புதிதாக அல்ல கூடுதலாக ஒன்று

பட மூலாதாரம், Getty Images
உங்களின் புத்தாண்டு தீர்மானங்கள் வெற்றியடைய "ஹேபிட் ஸ்டேக்கிங்" என்கிற நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் வேலைவாய்ப்பு ஆலோசகரான எம்மா ஜெஃபரீஸ்.
உங்களின் அன்றாட வழக்கத்தில் உள்ளவற்றுடன் புதிய வழக்கத்தை தொடர்புபடுத்த வேண்டும் என அவர் கூறுகிறார்.
"உதாரணமாக, நான் பல் துலக்கிய பிறகு 10 புஷ்-அப் செய்வேன். நான் வைனை தயார் செய்த பிறகு 10 நிமிடங்கள் எழுதுவேன். என் குழந்தைகளை தூங்க வைத்த பிறகு கை, கால்களை நீட்டி பயிற்சி செய்வேன்," என்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும் என எம்மா தெரிவித்தார்.
"நீங்கள் உங்களுடைய வழக்கத்தில் புதிதாக எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக நீங்கள் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் விஷயங்களில் கூடுதலாக ஒன்றை இணைத்துக் கொள்கிறீர்கள்," என்றார்.
உந்துதலை மட்டும் நம்புவதற்குப் பதிலாக வெற்றி பெறுவதற்கான சூழலை உருவாக்குவதும் பெரிய மாற்றத்தைத் தரலாம் என்கிறார் ஜெஃபரீஸ்
"நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும் என்றால் புத்தகத்தை உங்களின் தலையணை மீது வையுங்கள். இதன் மூலம் உறங்குவதற்கு முன்பாக நீங்கள் அதை நகர்த்த வேண்டியிருக்கும்," எனத் தெரிவித்தார்.
5. நேர்மறையாக வைத்திருங்கள்

பட மூலாதாரம், Getty Images
அதிகம் சேமிக்க வேண்டும் அல்லது செலவுகளை சிறப்பாக திட்டமிட வேண்டும் என்பது தான் உங்களின் புத்தாண்டு தீர்மானமாக இருக்கையில், அதன் பின்னணியில் நேர்மறையான காரணம் இருந்தால் அதை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்டபஸ் மனி நிறுவனத்தில் தனிநபர் நிதி பிரிவின் தலைவரான டாம் ஃப்ரான்சிஸ் பிபிசியிடம் கூறுகையில், "விடுமுறை செல்ல வேண்டும் அல்லது அவசர கால நிதியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது போன்ற தெளிவான மற்றும் சுவாரஸ்யமான இலக்குகள் இருந்தால் சேமிப்பது கட்டுப்பாடு மிக்கதாக இல்லாமல் நோக்கம் கொண்டதாக இருக்கும்." எனத் தெரிவித்தார்.
நிறைய விஷயங்களை மாற்றுவதற்கு முயற்சிக்காமல் இருப்பது முக்கியமானது, ஏனென்றால் அது மிகவும் அரிதாகவே நிலைக்கும் என்கிறார் டாம்.
"இரண்டு அலல்து மூன்று தெளிவான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு விருப்பமான விடுமுறை செல்ல லட்சக்கணக்கில் சேமிக்க வேண்டும் என்பது கடினமாக இருக்கலாம். அதே வேளையில் மாதம் மாதம் சிறிதளவு சேமிக்க வேண்டும் என்பது சாத்தியமான ஒன்று என்கிற உணர்வைத் தரும்," எனத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் தாமதமாக திட்டமிடுவதில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்தார்.
"மாதாந்திர சேமிப்பு குறைந்தாலும் நீங்கள் சேமிப்பை தொடர்கிறீர்கள், அந்த பழக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் அனைத்தையும் விட முக்கியமானது," என்றார் டாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












