அன்று ராப் பாடகர் இன்று பிரதமர் வேட்பாளர்; நேபாள அரசியலில் பாலன் ஷா 3 ஆண்டுகளில் வளர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், KP Khanal
பாலன் ஷா என்று அழைக்கப்படும் காத்மாண்டு மாநகர மேயர் பாலேந்திர ஷா, ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நேபாளத் தேர்தலில் இணைந்து போட்டியிட பாலன் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பிபிசி நேபாளி மொழி சேவையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு தரப்புக்கும் இடையே ஏழு அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, வரவிருக்கும் தேர்தல்களில் பாலன் ஷா நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். ரவி லாமிச்சானே ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் மத்தியத் தலைவராக இருப்பார்.
இரு கட்சிகளின் இணைப்பிற்குப் பிறகு உருவாகும் கட்சியின் பெயர் 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' என்றே நீடிக்கும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
பாலன் ஷா முன்னதாக ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காத்மாண்டு மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இதுவரை தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக ஏதும் கூறாமல் இருக்கிறார்.
இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தத்தின் கீழ், 35 வயதான பாலன் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், பிரதமர் முகமாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நான்காவது பெரிய கட்சியாக இருந்த ஆர்எஸ்பி-யின் தலைவர் ரவி லாமிச்சானே தனது பதவியில் நீடிப்பார்.
ஒப்பந்தத்தின்படி, பாலன் மற்றும் அவரது அமைப்பினர் தேர்தல் ஆணையத்தால் ஆர்எஸ்பி-க்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
பாலன் தனது அமைப்பை ஆர்எஸ்பி-யுடன் இணைக்க ஒப்புக்கொண்ட போதிலும், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் மாறாது.
யார் இந்த பாலன் ஷா?

பட மூலாதாரம், KATHMANDU MAHANAGARPALIKA
பாலன் ஷா மே 2022-இல் முதல் முறையாக நேபாள தலைநகர் காத்மாண்டுவின் மேயரான போது, அது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸின் ஸ்ருஜனா சிங்கை பாலன் ஷா தோற்கடித்தார். ஷாவுக்கு 61,767 வாக்குகளும், ஸ்ருஜனா சிங்கிற்கு 38,341 வாக்குகளும் கிடைத்தன.
மூன்றாவது இடத்தில் ஒலி கட்சியின் வேட்பாளர் கேசவ் ஸ்தாபித் இருந்தார்.
சுயேச்சையாகப் போட்டியிட்ட பாலன் ஷா, நேபாளத்தின் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளைத் தோற்கடித்து தன்னை நிரூபித்தார்.
பாலன் ஷா ஒரு பிரபலமான ராப் பாடகர். அவர் காத்மாண்டு மேயர் தேர்தலில் குதித்தபோது பலவிதமான பேச்சுகள் எழுந்தன. அப்போது அவருக்கு வெறும் 32 வயதுதான்.
பாலன் ஷாவின் புகழ் இளைஞர்களிடையே மட்டுமல்லாது, நேபாளத்திற்கு வெளியே வசிப்பவர்களிடமும் பரவியிருந்தது.
டெல்லியில் பணிபுரியும் நேபாள மக்களும் பாலன் ஷாவின் பெயரை வெளிப்படையாகப் பேசினர்.
2017 நேபாள உள்ளாட்சித் தேர்தலின் போது பாலன் ஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நான் இன்று வாக்களிக்க மாட்டேன். நான் வேட்பாளர் அல்ல. நான் சிவில் இன்ஜினியரிங்கில் பட்டதாரி மற்றும் ஸ்ட்ரக்சரல் இன்ஜினியரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வருகிறேன். ஒரு நாட்டை எப்படிச் சீரமைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் எனக்கே நான் வாக்களிப்பேன். எனது நாட்டின் முன்னேற்றத்தை நான் விரும்புகிறேன், இதற்காக நான் மற்றவர்களைச் சார்ந்திருக்க முடியாது." என்று எழுதியிருந்தார்.
பாலனின் பின்னணி

பட மூலாதாரம், @ShahBalen
பாலன் ஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருக்கவில்லை. அவரிடம் எந்த அமைப்பும், அரசியல் அனுபவமும் இல்லை.
நேபாளத்தில் 'ஜென் ஸி' போராட்டம் தொடங்கியபோது, அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமை தாங்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாலன் ஷா அந்தப் போராட்டத்தை ஆதரித்த போதிலும், நேரடியாக வீதியில் இறங்கவில்லை.
பாலன் ஷா 1990-இல் காத்மாண்டுவின் கைர் கவுனில் பிறந்தார். இவரது தந்தை ராம் நாராயண் ஷா ஒரு ஆயுர்வேத மருத்துவர், தாயார் த்ருவதேவி ஷா.
பாலன் ஷா காத்மாண்டுவின் ஒயிட் ஹவுஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் படித்தார் மற்றும் கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஸ்ட்ரக்சரல் இன்ஜினியரிங்கில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். ஆனால், அவரது தேர்தல் அரசியல் 2022 உள்ளாட்சித் தேர்தலில்தான் தொடங்கியது.
காத்மாண்டுவில் வாக்கு சேகரிக்கும்போது, "நான் உங்களிடம் அதிகம் சொல்ல மாட்டேன். தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்." என்று மட்டுமே அவர் கூறுவார்.
பாலனின் மாதேசி அடையாளம்

பட மூலாதாரம், Getty Images
ஜனக்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரௌஷன் ஜனக்புரி பிபிசியிடம் கூறுகையில், பாலன் எந்த அரசியல் பின்னணியிலிருந்தும் வரவில்லை என்று தெரிவித்தார். பாலனின் தந்தை ஆயுர்வேத மருத்துவர், மனைவி சபினா காஃப்லே பொது சுகாதாரப் பணியாளர், சகோதரர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், சகோதரி ஒரு ஓவியர் மற்றும் சகோதரியின் கணவர் ஒரு வங்கியாளர்.
ரௌஷன் ஜனக்புரியின் கூற்றுப்படி, 2015-இல் இந்தியாவின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையின் போதும், நிலநடுக்கத்தின் போதும் பாலன் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு நிவாரணப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
பாலனின் பேச்சையும் மக்கள் பாராட்டுகிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு எதிராக அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர் கருப்பு கண்ணாடி அணிவதை வழக்கமாக உடையவர்.
அவரது 'ஆம் நேபாளி புபா', 'போலீஸ் பத்ரிகார்' போன்ற பல பாடல்கள் பிரபலமானவை. இந்தப் பாடல்கள் நேபாளத்தின் சமூக மற்றும் அரசியல் நிலைமையை விமர்சிக்கின்றன.
நேபாளத்தின் சர்லாஹி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரேஷ் சிங்கின் கூற்றுப்படி, "பாலன் தனது புகழின் பெரும்பகுதியை இணையதளத்தின் வாயிலாகவே பெற்றுள்ளார்."
நேபாள அரசியலில் மாதேசி பின்னணி கொண்ட ஒரு தலைவர் காத்மாண்டு மற்றும் மலைப்பகுதி மக்களிடையே பிரபலமடைவது ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், டென்மார்க்கிற்கான முன்னாள் நேபாள தூதர் விஜயகாந்த் கர்ணா, பாலன் ஷாவின் மாதேசி அடையாளத்தை நிராகரிக்கிறார்.
"பாலன் காத்மாண்டுவின் நெவாரி பகுதியில் பிறந்தார். மாதேசி பிரச்சனைகளுக்காக அவர் எப்போதும் நின்றதில்லை. மாதேசி அரசியல் செய்து மலைப்பகுதி தலைவராக முடியாது என்பதால் அவர் ஒருபோதும் மாதேசி பிரச்சனைகளை எழுப்பவில்லை. 2015-ஆம் ஆண்டில் மாதேசி போராட்டம் ஒடுக்கப்பட்டது, ஆனால் பாலன் ஒருபோதும் இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாலனின் எழுச்சியின் முக்கியத்துவம்
நேபாளத்தின் பிரபல சிந்தனையாளர் சி.கே.லால், பாலன் ஷாவின் எழுச்சியை அதிபராவதற்கு முன்பு ஒரு நகைச்சுவை நடிகராக இருந்த யுக்ரேனின் ஸெலென்ஸ்கியின் எழுச்சியுடன் ஒப்பிடுகிறார்.
"மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இத்தகைய போராட்டங்களிலிருந்தே வருகிறார்கள். ஆனால் அவரிடம் அமைப்பு ரீதியான கட்டமைப்போ அல்லது சித்தாந்தமோ இல்லாததுதான் சிக்கல். பெரும்பாலும் மக்கள் அலையிலிருந்து உருவாகி வரும் தலைமையிடமிருந்து மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பதில் ஆபத்து இல்லாமல் இல்லை." என்று சி.கே.லால் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சமீப காலங்களில் நேபாளத்தில் மாற்று அரசியல் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் பாலன் ஷாவின் பெயர் அடிபடுகிறது. ஏன் பாலன் ஷாவின் மீது இவ்வளவு நம்பிக்கை?
மேயர் பதவிக்கான தனது தேர்தல் அறிக்கையில் டிஜிட்டல் அரசு முதல் ஐடியா பேங்க் வரை அவர் பேசினார். கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பிற்கான லட்சியத் திட்டங்களை அவர் முன்வைத்தார்.
மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாலன் ஷா கூறுகையில், "முன்னால் இருக்கும் பாதை எளிதானது அல்ல. எங்களது பரப்புரைக்கான சோதனை இனிமேல்தான் தொடங்கும். நாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையும் எடுக்கும் முயற்சியுமே இந்த நகரத்தின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












