'கிறிஸ்தவராக மதம் மாறியதால் இறுதிச்சடங்குக்கு அனுமதி மறுப்பு' - சதீஸ்கரில் என்ன நடக்கிறது?

இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
    • எழுதியவர், அலோக் புதுல்
    • பதவி, பிபிசி இந்திக்காக

சதீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள போராய் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான புனியா பாய் சாஹு, தனது வாழ்வின் இறுதிப் பயணம் இவ்வளவு நீளமாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற எடுத்த முடிவு, அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரிய கேள்வியாக மாறியது. இதனால் அவரது உடல் அடக்கம் செய்யப்பட முடியாமல் மூன்று நாட்களாக கிராமம் கிராமமாக அலைக்கழிக்கப்பட்டது.

இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை, புனியா பாய் சாஹுவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளின் முன்னிலையில், குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களிடமும் இந்து அமைப்புகளிடமும் மன்னிப்பு கேட்டனர்.

மேலும், எதிர்காலத்தில் தங்களுக்குக் கிறிஸ்தவ மதத்துடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.

தம்தரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிசங்கர் சந்திரா இதுகுறித்துக் கூறுகையில், "போராய் கிராமத்தில் சாஹு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக சமூக உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த மோதலால் இறுதிச் சடங்குகளைச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் சமூக உறுப்பினர்களால் ஒரு சமூகக் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதியில், இது சமூக ரீதியாகத் தீர்க்கப்பட்டது," என்றார்.

புனியா பாய் சாஹு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, புனியா பாய் சாஹு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

போராய் கிராமத்தைச் சேர்ந்த புனியா பாய் சாஹு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தார். அவர் கடந்த புதன்கிழமை காலமானபோது, அவரது குடும்பத்தினர் கிராமத்தில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆனால் கிராம மக்களும் இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதால், அவரது இறுதிச் சடங்குகளைக் கிராமத்தில் செய்ய முடியாது என்று அவர்கள் கூறினர்.

நூற்றுக்கணக்கான மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் பெண்ணின் உடலை தாலுகா தலைமையகமான நகரிக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கேயும் அவர்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அந்தப் பெண்ணை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியை நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து மூடினர்.

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்ட நிலையில், அதே இரவு இறந்த பெண்ணின் குடும்பத்தினர் 'மத மாற்றம்' செய்யப்பட்டனர்.

சமூக மற்றும் இந்து அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து, அப்பகுதி நிர்வாக மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில் அதனை வாசித்தனர்.

அதன் பிறகு தான், மறுநாள் அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகள் இந்து முறைப்படி செய்யப்பட்டன.

"நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகளிலும் சமூகத்திலும் சேர்ந்து வந்தோம். எனவே, இனி முழு குடும்பமும் பிரதான இந்து பழக்கவழக்கங்கள், மரபுகள், உள்ளூர் தெய்வங்கள் மற்றும் கிராமப் பழக்கவழக்கங்களை ஆதரிப்போம்.

எங்கள் குடும்பம் இனி ஒருபோதும் கிறிஸ்தவ மதத்துடனோ அல்லது போதகர்களுடனோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாது. இதற்காக போராய் கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்குச் சென்றால், நாங்களாகவே கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்திற்குச் சென்றுவிடுவோம்." என்று குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கு தொடர்பாக நீடிக்கும் சர்ச்சை

சதீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வது தொடர்பாகத் தொடர்ச்சியாக சர்ச்சைகள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Screen Grab

படக்குறிப்பு, ராஜ்மன் சலாமின் தந்தையின் இறுதிச் சடங்கு குறித்தும் சர்ச்சை எழுந்தது.

சதீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பாகத் தொடர்ச்சியாக சர்ச்சைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, கேரளா மாநிலத்தை விடப் பெரிய பரப்பளவைக் கொண்ட பஸ்தர் பகுதியில், இறுதிச் சடங்குகள் தொடர்பான மோதல்களால் ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இடையே இத்தகைய வன்முறை மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தம்தரி மாவட்டத்தில் புனியா பாய் இறந்த அதே நாளில், கான்கர் மாவட்டத்தின் ஆமாபெடா பகுதியில் நடந்த இறுதிச் சடங்கு சர்ச்சையைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் சதீஸ்கர் மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்திற்கு வணிகர் சங்கம் உட்பட பல சாதி அமைப்புகளும் ஆதரவு அளித்தன.

டிசம்பர் 15-ஆம் தேதி, கான்கர் மாவட்டத்திலுள்ள படே தேவடா பஞ்சாயத்துத் தலைவரான ராஜ்மன் சலாமின் தந்தை சம்ரா ராம் சலாம் காலமானார். சலாம் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்து புதைத்தனர்.

ஆனால், இதற்கு உள்ளூர் கிராம மக்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டிசம்பர் 17-ஆம் தேதி வன்முறை வெடித்தது.

மாவட்ட நிர்வாகம் அச்சூழலைக் கட்டுப்படுத்த முயன்றபோது, ​​அந்தக் கும்பல் காவல்துறையினரையும் தாக்கியது.

அப்போது, காவல்துறையினர் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக ராய்ப்பூருக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் சதீஸ்கர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இறந்த சம்ரா ராம் சலாமின் மகனும் பஞ்சாயத்துத் தலைவருமான ராஜ்மன் சலாம் கூறுகையில், "நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் என் தந்தை கிறிஸ்தவர் அல்ல. அவர் இறந்த பிறகு, கிராமத்தின் பாரம்பரியத் தலைவர் மற்றும் 'காய்தா'விடம் என் தந்தையின் இறுதிச் சடங்குகளைப் பழங்குடியின பாரம்பரிய முறைப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். மறுநாள், கிறிஸ்தவர் அல்லாத எனது மூத்த சகோதரர் தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்தார்," என்றார்.

தனது தந்தையின் இறுதிச் சடங்கு தொடர்பான விவகாரம் மதம் சார்ந்தது அல்ல, அது அரசியல் சார்ந்தது என்று ராஜ்மன் சலாம் கூறுகிறார்.

பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தான் 214 வாக்குகள் பெற்றதாகவும், பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சி வேட்பாளர் 123 வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரே இதனைப் பெரிய பிரச்னை ஆக்கியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

தொடர்ந்து ராஜ்மன் கூறுகையில், "டிசம்பர் 17-ஆம் தேதியன்று மதியம், பாஜக வேட்பாளரின் தூண்டுதலின் பேரில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கிராமத்திற்கு வந்து எனது குடும்பத்தினரைக் கொடூரமாகத் தாக்கினர். பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. மறுநாள், காவல்துறை நிர்வாகம் எனது தந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றது. அந்த நேரத்தில், காவல்துறையினர் முன்னிலையிலேயே அந்த கும்பல் இரண்டு தேவாலயங்களுக்குத் தீ வைத்தது," என்று தெரிவித்தார்.

'மரபுகள் அழிக்கப்படுகின்றன'

குப்தேஷ் உசெண்டி

பட மூலாதாரம், Screen Grab

படக்குறிப்பு, பாஜக தலைவர் குப்தேஷ் உசெண்டி

கான்கர் பாஜக தலைவரும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான குப்தேஷ் உசெண்டி இந்தக் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று கூறுகிறார்.

முரியா பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்திலேயே தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ராஜ்மன் சலாமிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். ஆனால் அவர் கிராம மக்களை மிரட்டி, கிராமத்திற்குள்ளேயே தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

"கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பஞ்சாயத்து தலைவரும் அவரது கூட்டாளிகளும் பழங்குடியினரைத் தாக்கினர். இதில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் மற்ற கிராமங்களிலிருந்தும் ஆட்களை அழைத்திருந்தார். அவர்களும் பழங்குடியினரை அடித்தனர்," என்று குபேஷ் உசெண்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

பழங்குடி கலாச்சாரத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு ஒரு சதி நடப்பதாக குப்தேஷ் கருதுகிறார். பழங்குடி சமூகத்தில் காய்தா, படேல், சியான் போன்ற பாரம்பரியங்கள் இருப்பதாகவும், மகிழ்ச்சி மற்றும் துக்கம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் அவர்களின் அனுமதியுடன் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த பழங்குடி மரபுகள் அழிக்கப்பட்டு, மத மாற்றத்தின் மூலம் பழங்குடியினர் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

போஜ்ராஜ் நாக்

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, போஜ்ராஜ் நாக், கான்கேர் தொகுதியின் பாஜக எம்.பி.

அந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து கான்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் கிராம மக்களைச் சந்தித்த பாஜக எம்பி போஜ்ராஜ் நாக் கூறுகையில், ஐந்தாவது அட்டவணைப் பகுதிகளில் வழக்கமான நடைமுறைகளை பஞ்சாயத்து சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் அந்தச் சட்டத்தை ஓரங்கட்ட விரும்புகிறார்கள் என்றார்.

"ஆதிவாசிகள் ஏமாற்றப்பட்டும் அழுத்தம் கொடுக்கப்படும் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். அவர்களை பழங்குடியினரின் மரபுகளுக்கும் சட்டத்துக்கும் எதிராக நிறுத்துகிறார்கள். இப்படிச் செய்பவர்கள் சமூக மரபுகளையோ, பண்பாட்டு மரபுகளையோ, சட்டத்தையோ மதிப்பதில்லை. சதீஸ்கர் அரசு விரைவில் புதிய மதமாற்றத் தடுப்பு சட்டத்தை கொண்டு வரும். அதன் பின்னர் இப்படிப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது," என்று போஜ்ராஜ் நாக் பிபிசியிடம் கூறினார்.

ஆனால் சதீஸ்கர் கிறிஸ்தவ மன்றத் தலைவர் அருண் பன்னலால் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை.

சதீஸ்கரில் மூன்றாவது முறையாக மதமாற்ற மசோதாவை அரசு கொண்டு வரப்போகிறது என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆனால் கடந்த 25 ஆண்டுகளில், கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றப்பட்டோ மதமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு வழக்கு கூட மாநிலத்தில் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்.

மாநிலத்தில் நிலவும் இறுதிச் சடங்கு தொடர்பான சர்ச்சை குறித்து அருண் பன்னலால் கூறுகையில், "கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தங்கள் இறுதிச் சடங்குகளை எங்கே செய்ய வேண்டும்? மற்ற மதங்களைப் போலவே, கிறிஸ்தவர்களின் இறுதிச் சடங்கிற்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்திலும் நிலத்தை ஒதுக்கித் தருவது அரசாங்கத்தின் பொறுப்பல்லவா? அரசாங்கமே அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது." என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் பிளவுபட்ட தீர்ப்பு

சதீஸ்கரில் கிறிஸ்தவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான சர்ச்சைகள் பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளன.

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, சதீஸ்கரில், கிறிஸ்தவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன .

சதீஸ்கரில் கிறிஸ்தவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான சர்ச்சைகள் பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், பஸ்தர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் சுபாஷ் பாகேல் என்பவரின் இறுதிச் சடங்கு தொடர்பான சர்ச்சை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

சுபாஷ் பாகேலின் மகன் ரமேஷ் பாகேல், தனது தந்தையை கிராமத்தின் பாரம்பரிய மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால், சுபாஷ் பாகேலின் உடல் அடக்கம் செய்யப்படாமல் சுமார் மூன்று வாரங்களாகக் காத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு, "ஒருவர் தனது தந்தையை அடக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது." என்று தெரிவித்தனர்.

இருப்பினும், ஜனவரி 27-ஆம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியது.

ஒரு நபரின் மதத்தின் அடிப்படையில் மட்டுமே அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமையை மறுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார்.

இது அரசியலமைப்பின் 14-வது பிரிவான சமத்துவ உரிமை மற்றும் 15(1) பிரிவான மத அடிப்படையில் பாகுபாடு காட்டாமை ஆகியவற்றை மீறுவதாகும் என்று குறிப்பிட்டார்.

இறந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணியத்துடன் வாழவும், இறக்கவும் உள்ள உரிமையை இது பாதிக்கிறது எனக் கூறிய அவர், குடும்பத்தின் சொந்த நிலத்திலேயே இறுதிச் சடங்கு செய்யலாம் என்ற தீர்வை முன்மொழிந்தார்.

ஆனால், நீதிபதி சதீஷ் சந்திர சர்மாவின் கருத்து வேறாக இருந்தது.

எந்தவொரு நபருக்கும் தான் விரும்பும் இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க வரம்பற்ற உரிமை கிடையாது என்று அவர் கருதினார்.

பொது ஒழுங்கு, உள்ளூர் விதிகள் மற்றும் பஞ்சாயத்தின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கிராமத்திலிருந்து சற்று தொலைவில் இருந்தாலும், முறையாக அறிவிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ மயானத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ஜனவரி 27 அன்று இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியது.

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, சதீஸ்கரில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்களின் இறுதிச் சடங்கு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படாமல் உள்ளது.

இரண்டு நீதிபதிகளும் ஒருமித்த கருத்துக்கு வராததால், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ், மேற்கொண்டு தாமதமின்றி, இறந்தவரின் உடலைக் கண்ணியமாக அடக்கம் செய்ய அருகிலுள்ள ஒரு கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது.

இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வதற்கும் ,பாதுகாப்புக்கும் முழு ஏற்பாடுகளைச் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பு மதமாற்றம், மத சுதந்திரம், சமத்துவம் மற்றும் சமூகப் பதற்றம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முயன்றது.

ஆனால், நீதிமன்றம் உடனடி மனிதாபிமானத் தீர்வை வழங்கியதே தவிர, விரிவான கொள்கைகளையோ அல்லது தெளிவான வழிகாட்டுதல்களையோ உருவாக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனால் தான் சதீஸ்கரில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்களின் இறுதிச் சடங்குகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை முழுமையாகத் தீர்க்க இந்தத் தீர்ப்பு தவறிவிட்டது.

கான்கர் ஆகட்டும் அல்லது தம்தரி ஆகட்டும், கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்களின் இறுதிச் சடங்குகள் குறித்த சமூக எதிர்ப்பு இன்றும் அப்படியே உள்ளது.

இதன் விளைவாக, நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கிறிஸ்தவர்களுக்குக் கண்ணியமான இறுதிச் சடங்கு என்பது சதீஸ்கரில் ஒரு உணர்ச்சிகரமான மற்றும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே நீடிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு