இலங்கை போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோர்: ஐ.நாவை நாடும் உறவினர்கள்

இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்றைய தினம் (செப்டம்பர் 15) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பேச்சேலெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஐநா மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 13ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றது.
இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர், கடந்த 13ம் தேதி வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடந்த 14ம் தேதி பதிலளித்திருந்தார்.
இலங்கை அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கருத்துரைத்த போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
2000ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான 20 வருட காலப் பகுதியில் சுமார் ஆறாயிரம் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவரக் கோவையை வெளியடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என அந்த அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது மிக குறைந்த எண்ணிக்கை என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவரக் கோவையை 4000 அல்லது அதற்கு குறைவாக காண்பிக்க முயற்சிக்கும் கண்துடைப்பு நாடகமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதை, மனித உரிமை ஆணையாளர் எவ்வாறு ஆமோதிக்க முடியும் என அவர் இந்த கடிதத்தின் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்திருந்ததாக அந்த அமைப்பு கூறுகின்றது.
இதன் ஓர் அங்கமாக, சுமார் 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும், அவர்களினால் இயக்கப்படுவோரினாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்லாது, 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் என ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவிக்கிறது. இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கும் அப்பால், ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்வி கண்டுவிட்டதுடன், ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுக்கிறது.

பட மூலாதாரம், Mfa sri lanka
கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும், கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை ஆணையாளர் எவ்வாறு கைக்கொள்ளலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு கூறுகின்றது.
இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? என ஐநா மனித உரிமை ஆணையாளரிடம், அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நடவடிக்கை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆபத்தானது என கூறியுள்ள அந்த அமைப்பு, இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து ராணுவத்தை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விவரங்களை முழுமையாகத் திரட்ட முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்பு குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் தீர்க்கமாகக் கோருவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐநா மனித உரிமை பேரவையிடம் கோரியுள்ளது.
பிற செய்திகள்:
- டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












