இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

"இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்" - போர்க்கால நினைவலைகள்

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

படக்குறிப்பு, (கோப்புப்படம்)
    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.)

இன்று மே 18. இது வெறும் தேதி மட்டுமல்ல. தாய் - தந்தையை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினரை, உயிர் நண்பர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தேதி.

ஆம், இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வரை சுமார் 26 ஆண்டுகள் இலங்கையில் நடந்த இந்த வரலாறு காணாத உள்நாட்டுப் போரின்போது, எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அப்படிப்பட்ட கொடூரமான போர் நடந்து முடிந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகிறது. போரின்போதோ, போர் முடிவுற்ற பிறகோ தத்தமது உயிரை காத்து கொள்வதற்கான பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

போர் முடிந்து பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காதது ஏற்படுத்தும் வலியும், மன உளைச்சலும் ஒருபுறமிருக்க, தங்களது இளமை காலத்தில் போரின்போது சந்தித்த மோசமான நினைவுகளால், இன்றுவரை தினந்தினம் தூக்கத்திலிருந்து அலறித்துடித்து எழுந்து கொள்வதாக குமுறுகிறார்கள் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தாங்கள் சந்தித்த மிகவும் மோசமான அனுபவத்தை பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

ரோஷிணி ரமேஷ், பிரிட்டன்

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்

பட மூலாதாரம், Buddhika Weerasinghe

"எனக்கு அப்போது 13 வயதிருக்கும். யாழ்ப்பாணத்தில் வசிப்பது உயிருக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்த பிறகு, குடும்பம் குடும்பமாக கடலை கடந்து வன்னியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம். ஆனால், அப்போதுதான் தெரிந்தது அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளேதென்று" என்று கூறுகிறார் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் ரோஷிணி.

எனவே, வேறு வழியின்றி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்ல நேரிட்டதாகவும், அப்போது உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகளுக்கு நடத்தப்படாமலிருந்த யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலில் தீர்த்த திருவிழா வெகுகாலத்திற்கு பிறகு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

"உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தின் காரணமாக சொந்தங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கனோர் இந்த திருவிழாவிற்காக ஒன்று கூடினோம். குண்டுவீச்சுகளையும், துப்பாக்கிகளின் சத்தத்தையும், பீரங்கிகள் உண்டாக்கிய பிணக் குவியல்களையும், இரத்த ஆறுகளையும் பார்த்து, பார்த்து மரண பீதியில் உறைந்து போயிருந்த நாங்கள் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

ஆனால், அந்த நிம்மதி வெகுநேரத்திற்கு நீடிக்கவில்லை. நாங்கள் கோயில் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எங்களை நோக்கி பறந்து வந்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இருப்பதை அறிந்த ராணுவம் மொத்தமாக கொன்று குவிப்பதற்கே வந்துக்கொண்டிருப்பதாக எண்ணி, அலறி துடித்த மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்

பட மூலாதாரம், Luis Enrique Ascui

நான் அருகிலுள்ள ஒரு இடத்தில் ஒளித்து கொண்டேன். என்ன நடக்கப் போகிறதோ என்று அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், கோயிலுக்கு நேரே பறந்த ஹெலிகாப்டர் சிவப்பு பூக்களை கொட்டியது" என்று தனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ரோஷிணி.

இறுதிக்கட்ட போர் முடிந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு லண்டனுக்கு சென்ற ரோஷிணி, தனக்கு இன்றைக்கு கூட ஹெலிகாப்டர்களை பார்த்தால் பயமென்று கூறுகிறார்.

பரிமளநாதன் மயூரன், சுவிட்சர்லாந்து

உள்நாட்டுப் போரின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்து கொண்டிருந்த காலக்கட்டம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரிடமும் பதற்றம் நிறைந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய இந்திய ராணுவம், தங்களது பள்ளிக்கு வந்து இனிப்புகளை வழங்கியது ஆச்சர்யத்தை அளித்ததாக கூறுகிறார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மயூரன்.

"ராணுவத்தினரை கண்டாலே பயந்து ஓடும் சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இந்திய ராணுவத்தின் வருகையும், அணுகுமுறையும் தொடக்கத்தில் எங்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்களிலேயே பேரதிர்ச்சியாக மாறியது.

இலங்கை
இலங்கை

அச்சமயம் எனக்கு சுமார் ஏழு வயதிருக்கும். பள்ளி விடுமுறை தினத்தன்று, விளையாடுவதற்காக எங்களது பாட்டி வீட்டருகே இருக்கும் தோட்டத்திற்கு சென்றோம். அந்த தோட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரயில் தண்டவாளம் இருக்கும். தண்டவாளத்திற்கு ஓரமாக மக்கள் நடந்து செல்வது இயல்பான ஒன்று. இந்நிலையில், சம்பவ தினத்தன்று தோட்டத்தின் பக்கம் இருக்கும் தண்டவாளத்தின் ஓரமாக சென்றுக்கொண்டிருந்தவரை அதன் மறுபுறத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

எனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒருவரது மரணத்தை, அதுவும் சுட்டுக்கொல்லப்படுவதை அப்போதுதான் பார்த்தேன். ராணுவ வீரர்கள் மீதான எனது பார்வையை மாற்றிய இந்திய ராணுவத்தினரின் செயல்பாடு என்னை திடுக்கிட செய்தது. அடுத்த நொடியே அங்கு விளையாடி கொண்டிருந்த நாங்கள் அனைவரும் பயந்துக்கொண்டு அருகிலுள்ள கோயிலுக்குள் ஒளிந்து கொண்டோம்.

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

அதன் பிறகு எங்களது ஊருக்குள் புகுந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்ற இந்திய ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்ணார பார்த்தேன்" என்று கூறுகிறார் சுவிட்சர்லாந்து தேசிய வானொலியின் தமிழ் சேவையின் ஆசிரியரான மயூரன்.

1991ஆம் ஆண்டு தனது பதினோராவது வயதில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளாக அந்த துப்பாக்கி சத்தமும், நிகழ்வும் தன்னை துன்புறுத்தி கொண்டிருப்பதாக கூறுகிறார்.

பாஸ்கரன் சித்திரவேல், ஆஸ்திரேலியா

இலங்கை உள்நாட்டுப் போரை இன அழிப்பு போர் என்று வர்ணிக்கும் பாஸ்கரனின் போர் கால நினைவுகள் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது.

"நான் உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதிவரை இலங்கையில்தான் இருந்தேன். அதாவது, உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததை என் கண்ணால் நேரடியாக பார்த்துள்ளேன்; நானும் பல தாக்குதல்களிருந்து கடும் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளேன்" என்று கூறும் பாஸ்கரன் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் மின் வினைஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இலங்கை பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலே தனது வாழ்க்கையில் கண்ட மோசமான மற்றும் மறக்க முடியாத சம்பவம் என்று அவர் கூறுகிறார்.

இலங்கை
இலங்கை

"2008ஆம் இறுதிப்பகுதி அல்லது 2009ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியாகவோ இருக்குமென்று எண்ணுகிறேன். அப்போது நாடுமுழுவதும் உச்சகட்ட போர் நடைபெற்று கொண்டிருந்தது. இரத்த காயமின்றி மக்களையோ அல்லது பிணங்கள் அற்ற பகுதிகளையோ பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியபோது, செஞ்சிலுவை சங்க உறுப்பினரான நான் வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள மருத்துவமனையில் உதவி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம், இரண்டாயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்வர். இந்நிலையில், இலங்கை ராணுவத்தின் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் திடீரென்று மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமானதுடன், ஏற்கனவே காயமடைந்து அறைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததை என் கண்ணால் பார்த்தேன்."

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்

பட மூலாதாரம், Robert Nickelsberg

அதுமட்டுமின்றி, ராணுவத்தின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு தக்க மருத்துவ வசதியோ அல்லது துணிகூட இல்லையென்றும், அதன் காரணமாக மக்கள் மண்ணை எடுத்து இரத்தம் வெளியேறிய பகுதிகளில் அடைக்க தொடங்கினர் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"தனக்குத்தானே மனித குலம் இதுபோன்ற பேரழிவை, அவலநிலையை ஏற்படுத்துவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிஞ்சு குழந்தைகளும், தாயுடன் சேர்ந்து அவரது வயிற்றினுள்ளேயே இறந்துபோன சிசுக்களும் என்ன பாவம் செய்தன? இந்த போர் காட்சிகள் கடந்த பத்து ஆண்டுகள் மட்டுமல்ல, இனி எத்தனை ஆண்டுகள் நான் உயிர் வாழ்கிறேனோ அத்தனை ஆண்டுகளும் எனது மனதை விட்டு விலகாது" என்று கூறும் பாஸ்கரனால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :