அனுஷ்கா சர்மா குறித்து என்ன பேசினார் சுனில் கவாஸ்கர்? சர்ச்சை எழுந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கருக்கு கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
அதாவது, நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) நடந்த பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது விராத் கோலியின் ஆட்டத்திறன் குறித்து அப்போது வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் தெரிவித்த கருத்தே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட போட்டியின்போது, பெங்களூரு அணியின் கேப்டனான விராத் கோலி, எதிரணி வீரர் கே.எல். ராகுலின் இரண்டு கேட்சுகளை தவறவிட்டிருந்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய ராகுல் சதடிமடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அடுத்து விளையாடிய பெங்களூரு அணியில், கேப்டன் விராத் கோலி ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் அடித்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோபிக்காத கோலியின் ஆட்டத்திறன் குறித்து அப்போது இந்தியில் வர்ணனை செய்துகொண்டிருந்த சுனில் கவாஸ்கர் பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.

பட மூலாதாரம், IPL
என்ன சர்ச்சை?
"பொது முடக்கத்தின்போது, கோலி அனுஷ்காவின் பந்துவீச்சை மட்டுமே பயிற்சி செய்திருப்பார் போல. நான் அதுதொடர்பான காணொளி ஒன்றை பார்த்தேன். ஆனால், அது போதுமானதாக இருக்காது" என்று இந்தியில் சுனில் கவாஸ்கர் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதையடுத்து கொதித்தெழுந்த கோலியின் ரசிகர்கள் சுனில் கவாஸ்கரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து பிசிசிஐ நீக்க வேண்டுமென்றும் கவாஸ்கர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கூறி சமூக ஊடகங்களில் பதிவிட தொடங்கினர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக தனியார் இந்தி மொழி செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமையன்று பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், "அனுஷ்கா ஷர்மா மீது பழிசுமத்துவதோ அல்லது குற்றஞ்சாட்டுவதோ எனது எண்ணம் இல்லை. விராத் கோலி அல்லது தோனி அல்லது வேறெந்த வீரருக்கும் கொரோனா பொது முடக்கம் காரணமாக சரிவர பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை ஐபிஎல் போட்டியின் முதல் சில ஆட்டங்கள் பிரதிபலிப்பதாகவே நான் கூற விரும்பினேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
சுனில் கவாஸ்கரை விமர்சிப்போர் ஒருபுறமிருக்க, சிலர் அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் இயக்குநரான ஜாய் பட்டாச்சார்யா, "பொது முடக்கத்தின் காரணமாக, கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள இயலாததை பொறுத்துக்கொள்ள முடியாத கோலி, அனுஷ்காவுடன் கிரிக்கெட் விளையாடினார். அதை அருகில் வசிப்பவர்கள் காணொளிகூட எடுத்துள்ளனர் என்றுதான் கவாஸ்கர் கூறினார். இதில் அவர் தவறாக என்ன சொன்னார்? அல்லது உங்களுக்கு கேட்ட ஏதோ ஒன்றை நான் தவறவிட்டுவிட்டேனா?" என்று பதிவிட்டுள்ளார்.
உண்மையில் என்ன சொன்னார் கவாஸ்கர்?
போட்டியின் வர்ணனையாளர்களாக இருந்த சோப்ரா மற்றும் கவாஸ்கர் வீரர்கள் பொதுமுடக்க காலத்தில் பயிற்சியின்றி இருந்தது குறித்தும் அது போட்டிகளில் தெரிவாதகவும் பேசினர்.
"அனைத்து வீரர்களும் பல காலம் கழித்து களத்தில் இறங்குகின்றனர். கத்தி துருப்புடித்துவிட்டதை நம்மால் காண முடிகிறது. 5427 ரன்களை எடுத்தவர் விராத் கோலி. ஆனால் 6-8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தால் அது எளிதான ஒன்று இல்லை," என சோப்ரா தெரிவித்தார்.
அதற்கு கவாஸ்கர், "நிச்சயமாக தேவையான பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் கோலிக்கு கிடைக்கவில்லை. அதிக பயிற்சி பெற்றால் அவர் சிறப்பாக விளையாட முடியும் என்பது அவருக்கு தெரியும். பொதுமுடக்க காலத்தில் அனுஷ்கா பந்துவீச, அப்போது மட்டுமே பயிற்சி செய்தார். நான் வீடியோவில் பார்த்தேன். ஆனால் அது பலனளிக்காது." என்று தெரிவித்தார்.
எனவே அவர்கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் தேவையில்லாமல் எதிர்ப்புகள் வருகின்றன என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
கவாஸ்கரின் கருத்து ஊடகங்களால் தவறாக கூறப்பட்டது. என்றும் அனுஷ்கா ஷர்மா குறித்து எந்த ஒரு தவறான கருத்தையோ அல்லது விராத் கோலியின் ஆட்டத்தை குறை கூறும் விதமாகவோ அனுஷ்கா குறித்து எதுவும் கவாஸ்கர் பேசவில்லை என உண்மை சரிபார்க்கும் ஊடகமான ஆல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.
கவாஸ்கருக்கு அனுஷ்கா கண்டனம்
இந்நிலையில் இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அனுஷ்கா ஷர்மா, "உங்களது கருத்து வெறுக்கத்தக்கது. கணவரின் விளையாட்டுக்காக ஒருவரது மனைவி மீது ஏன் இவ்வளவு கடுமையான அறிக்கையை வெளியிட நினைத்தீர்கள் என்பதை தாங்கள் விளக்க நான் விரும்புகிறேன். பல ஆண்டுகளாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் விளையாட்டைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போதும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நீங்கள் மதிப்பளித்தீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், அதே போன்று எங்களுக்கும் நீங்கள் சமமான மரியாதை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
"இது 2020. ஆனால் சம்பவங்கள் மாறவில்லை. நான் எப்போது கிரிக்கெட்டுக்குள் இழுக்கப்பட்டு கருத்துக்களை பரிமாறுவதில் பயன்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு பெறுவேன்?" என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"மரியாதைக்குரிய கவாஸ்கர் அவர்களே, நீங்கள் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டில் பெரும் உயரத்தில் நிற்பவர். நீங்கள் கூறியதை கேட்டபோது, நான் உணர்ந்ததை கூற விரும்பினேன், அவ்வளவுதான்."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதைத்தொடர்ந்து #AnushkaSharma என்ற ஹாஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டானது. மேலும், பத்திரிகையாளர் பர்கா தத் உள்ளிட்ட பலரும் அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய பெங்களூரு அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 109 ரன்களுக்கு சுருண்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












