கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''தடகள வீரர்களுக்கு இது சோதனை காலம்''

கொரோனா: ''தடகள வீரர்களுக்கு இது சோதனை காலம்''

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தடகள வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யமுடியாததால், தங்களின் உடற்கட்டு குறைவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் ஜூலை 2020ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி, சர்வதேச அளவிலான பல போட்டிகள், இந்தியாவில் தேசிய அளவில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதால், தடகள விளையாட்டு வீரர்கள் சோர்வான காலத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுப்பதற்கான வீரர்களை தேர்வு செய்யும் சுற்றுகள் நடைபெற்றுவந்த நேரத்தில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தேர்வுச் சுற்றுகள் நிறுத்திவைக்கப்பட்டன.

Arokiya Rajiv
படக்குறிப்பு, தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

ஒலிம்பிக் போட்டிக்காக பெருங்கனவுடன் பயிற்சி எடுத்து வந்தவர் திருச்சியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில்(2014) வெண்கலம், ஆசிய தடகள போட்டியில்(2017) வெள்ளி வென்றது உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஒலிம்பிக் போட்டிக்காக காத்திருக்கும் வீரர்கள்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்காக தங்கியிருக்கும் ஆரோக்கிய ராஜீவ் பிபிசி தமிழிடம் பேசியபோது, பயிற்சி வளாகத்தில் தனது அறையில் உடற்பயிற்சி மட்டும் செய்வதாக கூறுகிறார்.

''எங்களைப் போன்ற தடகள வீரர்கள் 120 பேர் இங்கு இருக்கிறோம். எங்களுக்கு ஒவ்வொரு நாளும் முக்கியம். ஒரு நாள் பயிற்சி செய்யாவிட்டால் கூட, அந்த நாளை வீணடித்துவிட்டோமே என வருந்துவோம். தொடர் பயிற்சி இருந்தால் மட்டும்தான் நம் உடல் ஓடுவதற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும். ஓடும் நேரத்தில் மூச்சை சீர்படுத்துவதும், இதயத்துடிப்பைச் சீராக வைத்துக்கொள்வதும்தான் நாங்கள் வெற்றிபெறுவதற்கு மிகவும் உதவும். ஆனால் தினமும் பயிற்சி செய்யாமல் இருந்தால், அது பிரச்சனைதான். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக ஓடாமல் இருந்தால், எங்களின் உடற்கட்டு கலைந்துவிடும். மீண்டும் புதிதாக பயிற்சியை தொடங்கவேண்டும்,' என்கிறார் ஆரோக்கிய ராஜீவ்.

Banner image reading 'more about coronavirus'

அர்ஜுனா விருது பெற்ற ஓட்டப்பந்தய வீரர் ஆரோக்கிய ராஜிவ், ஒலிம்பிக் போட்டிக்காகக் காத்திருந்தார். ''போட்டிகளுக்காக நாங்கள் 80 சதவீதம் தயாராக இருந்தோம். தற்போது போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் பயிற்சி செய்வதற்காக காத்திருக்கிறோம். நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து, தனியறைகளில் இருக்கிறோம்,'' என்கிறார் அவர்.

தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

பட மூலாதாரம், Arokiya Rajiv

படக்குறிப்பு, தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

''கடைசி வாய்ப்பை இழக்கிறார்கள்''

சென்னையில் தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் தன்னிடம் பயிற்சி பெற்றுவந்த வீரர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டதாக தெரிவிக்கின்றார்.

தடகள விளையாட்டுக்கள் என்பதில், ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் அடங்கும். தடகள போட்டிகளை பொறுத்தவரை எந்த உபகரணமும் இல்லாமல், உடலை மட்டுமே நம்பி விளையாடும் விளையாட்டு என்பதால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்களுக்கு தடகள போட்டிகள் மிகவும் நெருக்கமானவை என்கிறார் நாகராஜ். அவர்களின் வாய்ப்பு குறைகிறது என்பது வருதமளிப்பதாக கூறுகிறார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

''இந்த ஊரடங்கு நிறைவடைந்தாலும், உடனே பயிற்சியைத் தொடங்க அரசு அனுமதிக்குமா என தெரியவில்லை என்பதால், அனைவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டேன். மைதானத்தில் அவர்கள் பயிற்சி பெறமுடியாது என்பதால், வீட்டில் இருப்பார்கள். அவர்கள் பழையபடி பயிற்சி பெறவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். ஒரு சிலருக்கு ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு சுற்றுகளுக்கு தயாராகி இருந்தார்கள். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு இது சோதனை காலம்,'' என்கிறார்.

மேலும், ''வீட்டில் மட்டுமே இருப்பதால், அவர்களின் உணவு ஓடுவதற்கு ஏற்றதுபோல் அமையுமா என தெரியவில்லை. ஓடாமல் இருந்தால், உடல் இறுகிவிடும். ஒரு சில போட்டியாளர்களுக்கு வயது காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதே கடைசிமுறையாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது என்ற கவலையும் உள்ளது,'' என்கிறார்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், ஒவ்வொரு நாளையும் விளையாட்டு வீரர்கள் இழப்பதை சமன் செய்வது சிரமம் என்கிறார் நாகராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: