காமன்வெல்த்: காணாமல் போன விளையாட்டு வீரர்கள், இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர்

ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காணாமல் போனவர்களில் பளு தூக்கும் வீராங்கனை ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும் ஒருவர்.
    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி

கேமரூன் நாட்டைச் சேர்ந்த எட்டு விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டிலிருந்து காணாமல் போனது அங்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் காணாமல் போகவில்லை. ஏப்ரல் 8ஆம் தேதியன்று யாரிடமும் சொல்லாமல் மூன்று விளையாட்டு வீரர்கள் கோல்டு கோஸ்டிலிருந்து வெளியேறினர். ஏப்ரல் 9ஆம் தேதியன்று இருவரும், ஏப்ரல் 10ஆம் தேதியன்று மேலும் மூவரும் காணாமல் போனார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கேமரூனிலிருந்து மொத்தமாக 24 பேர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வந்திருந்தனர். காணாமல் போனவர்களில் மூன்று பேர் குத்துச்சண்டை வீரர்கள், ஐந்து பேர் பளு தூக்கும் வீரர்கள்.

அவர்களில் ஆறு பேர் தங்கள் போட்டிகளில் பங்கேற்றுவிட்டனர். இருவர் போட்டியில் கலந்துகொள்ளும் முன்னரே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

அவர்கள் காணாமல் போயுள்ளது குறித்து ஆஸ்திரேலிய காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ள கேமரூன் அணி நிர்வாகிகள், அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத்தான் திரும்பியிருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Presentational grey line

இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர்

ஷ்ரேயாசி சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷ்ரேயாசி சிங்

பெண்களுக்கான டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் முதலிடம் பெற்று ஷ்ரேயாசி சிங், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 12வது தங்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எமா ஃபாக்ஸ் -ஐ 96 புள்ளிகளுடன் சமநிலை செய்த அவர் ஷூட்-ஆஃப் போட்டியில் இரண்டு இலக்குகளையும் சுட்டு தங்கம் வென்றார். எமா ஒரு இலக்கைத்தான் சுட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது ஷ்ரேயாசிக்கு உந்துதலாக அமைந்தது. ஷ்ரேயாசியின் தந்தை அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். அவர் 2010இல் மூளையில் உண்டான ரத்தக்கசிவால் மரணமடைந்தார்.

ஷ்ரேயாசியின் தாத்தா குமார் சுரேந்திர சிங் ஷூட்டிங் ஃபெடரேஷன் ஆ ஃப் இந்தியாவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். ஷ்ரேயாசி 2014இல் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றுள்ளார்.

'வெல்த் வேல்யூஸ்' (Wealth Values) எனும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ள 26 வயதாகும் ஷ்ரேயாசி 'தி டிப்ளமேட்' எனும் சர்வதேச சஞ்சிகையின் இந்திய செய்தியாளராக உள்ளார்.

Presentational grey line

மேரி கோமின் கண் மை

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

ஆக்சென்போர்டு ஸ்டுடியோவினுள் குத்துச்சண்டை போட்டியைப் பார்க்க நான் உள்ளே நுழைந்தபோது மேரி கோம் குறித்து குறைந்தது மூன்று வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் என்னிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையைச் சேர்ந்த அனுஷ்கா தில்ருக்சியை வென்றபின் அவரிடம் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று ஐந்து நிமிடங்கள் பேட்டி எடுத்தது. வழக்கமாக சில நொடிகளோ, அதிகபட்சம் ஒரு நிமிடமோதான் ஊடகவியலாளர்கள் விளையாட்டு வீரர்களிடம் பேச அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

"அனுஷ்கா தில்ருக்சியுடன் நான் ஏற்கனவே மோதியுள்ளேன். அதனால் அவரது நுட்பங்கள் எனக்குத் தெரியும். எனினும், இறுதிப் போட்டிக்காக நான் எனது சக்தியை சேமித்து வைத்துள்ளேன். காரணம், நான் இதுவரை வெல்லாதது காமன்வெல்த் பதக்கம் மட்டுமே" என்று கோம் என்னிடம் கூறினார்.

இன்னொரு வியப்பான விஷயத்தை நான் கவனித்தேன். குத்துச்சண்டைப் போட்டிகளுக்குப் பிறகு அதில் பங்கேற்ற வீரர்களின் முகம் புடைத்து வீங்கிவிடும். வியர்வை ஒழுகிய அந்த நிலையிலும் மேரி கோமின் கண் மை கலையாமல் இருந்தது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: