குழந்தை வளர்ப்பு - மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு

பட மூலாதாரம், NATASHA BADHWAR
- எழுதியவர், நடாஷா பத்வார்
- பதவி, பிபிசி இந்திக்காக
நான் சகோதரிகள் இல்லாமல் வளர்ந்தேன். ஆனால், ஒரு பெற்றோராக நான் பாக்கியம் செய்திருக்கிறேன். நான் மூன்று மகள்களின் தாய். இந்த அனுபவம் மிகவும் அற்புதமானது.
என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களைப் போலவே, நானும் குழந்தை வளர்ப்பு பற்றி நான் நினைத்து வைத்திருந்த பிம்பங்களுடன் பெற்றோர் ஆனேன். இத்தனை ஆண்டுகாலத்தில், இயற்கை தந்த பரிசாக தோன்றிய நிறைய நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் நான் இழந்திருக்கிறேன். நான் இப்போது லேசாக உணர்கிறேன். எனக்கு கொஞ்சம் ஞானம் கிடைத்திருக்கிறது.
இதில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் முடிவில்லாதவை; முரண்பாடானவை; அவை எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. நான் அனுபவத்தின் மூலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட குழந்தைகளைப் போலவே இருக்கிறேன். சில நேரங்களில் நான் குழப்பமாக உணரும்போது, நான் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் நினைவு கொள்கிறேன்.
தம்பதியாக நானும் என் கணவரும் மூன்று குழந்தைகளுக்கு திட்டமிடவில்லை. ஆனால், நாங்கள் அவர்களைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ளோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் நான் கவலைப்பட மாட்டேன். நிச்சயமாக இது நடைமுறையில் அவ்வளவு சாத்தியமானதல்ல. நாங்கள் பெரிதாக இது குறித்து சிந்திக்கவில்லை. மேலும், ஒட்டுமொத்தமாக முட்டாள்தனமாக இருக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
ஆரம்ப காலத்தில், எங்கள் மகள்கள் அழகாக இருந்த போதும், எங்கள் நண்பர்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. எங்கள் வாழ்க்கையில் இருந்த அந்த வெற்றிடத்தை, சித்திகள், அத்தைகள், பாட்டிகள் போன்ற வயதான, சற்றே உற்சாகம் குறைந்த நபர்கள் எங்களை ஆதரித்து, எங்கள் வாழ்க்கை மீது கூடுதல் அக்கறை கொண்டு, நிரப்பினர்.

பட மூலாதாரம், NATASHA BADHWAR
நிச்சயமாக, அந்த நேரத்தில் இது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. சில சமயங்களில், நம் வாழ்க்கை போகும் போக்கை எதிர்த்து நின்றால், நாம் மூழ்க தொடங்குவோம் என்று காலப்போக்கில் நான் கற்றுக்கொண்டேன். இந்த பயணத்தில் பலவற்றை விட்டு கொடுக்க வேண்டும். எதிர்பாராத பரிசுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒத்துழையுங்கள். மற்றவர்கள் இந்த கட்டத்தை உங்களுக்கு முன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டட்டும்.
இதுதான் நடக்கும் என்பது போல, குழந்தைகள் மிகவும் வேகமாக வளர்கிறார்கள். சில சமயங்களில், நாட்கள் முடிவற்றதாக தோன்றினாலும், வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது ஆண்டுகள் கூட நாட்களாகவே தெரிகின்றன.
நண்பர்கள் மீண்டும் உங்களுடன் இணைவார்கள். அவர்களில் சிலர், மாறவே மாட்டார்கள். அதனால், பல ஆண்டுகள் தொடர்பில் இல்லாமல்கூட, அதே உணவகத்தில் என் அன்புக்குரிய நண்பர்கள் சிலர் அதே பிடித்தமான பானத்தை பருகிக்கொண்டு, முன்பு பேசிய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை இப்போது நான் அறிவேன். நான் 16 ஆண்டுகள் தொடர்பில் இல்லாமல் இருந்தாலும், 16 நாட்களே ஆனது போல் அவர்கள் என்னை வரவேற்பார்கள்.
ஆரம்ப காலத்தில், நாங்கள் இரண்டு அழகான குழந்தைகளின் இளம் பெற்றோராக இருந்தபோது, நான் மிகவும் விரும்பிய ஒரு தொலைக்காட்சி சேனலில் வேலையும் செய்து கொண்டிருந்தேன். குழந்தைகளும் என் வேலையும் என்னை நேசித்தன. இருந்தும், நான் நன்றாக இல்லை. ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பது போல் தோன்றியது. என்னுள் உள்ள குழப்பம் மூடுபனி போல் இருந்தது. எனது வாழ்க்கையில் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் நான் எவ்வாறு சரியாக கையாளப் போகிறேன் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், PUNEET BARNALA/ BBC
நான் அதுவரை வாழ்க்கையில் தனிமையாக உணர்ந்ததில்லை. ஆனால் தனிமை என்பது முழு உண்மை அல்ல. எங்கள் வாழ்க்கை கூச்சல்கள் நிறைந்ததாக இருந்தது. பார்ட்டி சத்தம், பணியிட சத்தம், போக்குவரத்து சத்தம். பின்னர் நான் குழந்தைகளுடன் இருக்கும்போது, மற்றொரு சத்தம் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கும்.
'சூப்பர் மாம்' என்று நகர்ப்புறங்களில் இருக்கும் கட்டுக்கதைக்குள் நான் சிக்கினேன். எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால், என் நிலையை கேட்க யாரும் இல்லை என்பது போல் தோன்றியது. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
குழந்தை வளர்ப்பு என் நேர்மைக்கு ஒரு சோதனையாக இருந்தது. நான் எனக்கு நேர்மையாக இருக்க தயாராக இருந்தேனா? எனக்கு அதில் அதிகம் பயிற்சி இல்லை. நண்பர்கள், அன்றைய நிகழ்வுகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு நேர்மையாக இருப்பது எப்போதும் எனக்கு எளிதாக இருந்தது. நான் எப்படி கூலாக இருக்க வேண்டும், மற்றவர்களால் போற்றப்பட வேண்டும் என்று எனக்கு தெரியும். இப்போது நான் என் உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும்.
நான் முதலில் என் மனக்குரலை கேட்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் நம்மை நன்றாக வளர்த்துக்கொண்டால் மட்டுமே நம் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும். பெரியவர்களுக்கும் சரி; குழந்தைகளுக்கும் சரி இது பொருந்தும். சரியான நேரத்தில் தூங்க வேண்டும், நன்றாக சாப்பிட வேண்டும், தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் சமயத்தில், அதில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது.
உங்களுக்குள் இருக்கும் குழந்தையை மகிழ்விக்க வேண்டும். அதனை நேசியுங்கள், பாராட்டுங்கள். பெற்றோர்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக இருந்தால், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதற்கு நேர்மாறாக ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இல்லை என்றால், நான் சரியாக இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

பட மூலாதாரம், PUNEET BARNALA/ BBC
குழந்தைகள் ஒன்றை கண்டுபிடிக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் அதிலிருந்து கற்றுக்கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். "அம்மா சோகமாக இருக்கும்போது, அவர் வருத்தமாக இருப்பார். ஆனால் அப்பா சோகமாக இருக்கும்போது, அவர் கோபப்படுகிறார்," என்று எங்களின் முதல் குழந்தை சஹர் ஒரு நாள் தனது தந்தையிடம் தெரிவித்தாள். இது அவளது தந்தையை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது. தனது நண்பர்களுடன் அந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களில் சிலர் ஒரு குழந்தையின் இந்த நுண்ணறிவால் எரிச்சலடைந்ததாகத் தோன்றியது.
அதே சமயத்தில், அலிசா ஒரு மகிழ்ச்சியின் திறவுகோலைக் கண்டுபிடித்தாள். அவ்வப்போது, அவள் என் பின்னால் குதித்து, என் முதுகில் ஒரு சாவி வைத்து திறப்பதுப் போல் சைகை செய்வாள். "இதோ, நான் சாவியில் திறந்து விட்டேன், இப்போது மகிழ்ச்சியாக இருங்கள்," என்று அவள் கட்டளையிடுவாள்.
நான் எந்த முகமூடியை அணிந்திருந்தேனோ அதை எடுத்துவிட்டு, அவளுடைய கள்ளம் கபடம் இல்லாத செயலுக்கு சரணடையாமல் இருக்க முடியாது.
பெற்றோராக இருப்பது விந்தையானது என்று நான் சொல்வேன். ஆனால் நம் வாழ்வில் அமைதியை உருவாக்குவதற்கு நிறைய கடின உழைப்பு வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குழப்பம் எளிதானது. அதை அமைதியாக்கி காண ஒருவர் அடிக்கடி கடினமான பாதைகளில் நடக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் பாதையும் தனித்துவமானது. நாம் நன்றாக ஓய்வெடுக்கவும் ஆழமாக சுவாசிக்கவும், ஒரு இடத்தை அடைய சகிப்புத்தன்மை தேவை.

பட மூலாதாரம், NATASHA BADHWAR
நம் இல்லாமையை விட நமது இருப்பு அதிகம் வேண்டும் என்று குழந்தை வளர்ப்பு கோரும். வேலையில் தொலைந்து போவது எளிது, ஒவ்வொரு நாளும் வாகன நெரிசலில் சிக்கிக்கொள்வது மிகவும் எளிதானது. பெற்றோர்கள் திங்கட்கிழமைகளை விரும்புகிறார்கள். வீட்டில் வேலை செய்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் வீட்டுக்கு வெளியே வேலை செய்தால், உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இளம் குழந்தைகளின் பெற்றோருக்கு திங்கட்கிழமை என்பது ரகசிய சனிக்கிழமையே.
இறுதியில், நம் பிள்ளைகள் நம்மிடமிருந்து பெற்றதை ஒருவருக்கொருவர் கொடுப்பார்கள். எனது போதாமைகளை ஏற்றுக்கொள்ளவும், நான் எதில் சிறந்து விளங்குகிறேனோ அதை கொண்டாடவும் கற்றுக்கொண்டேன். சரிவிகித உணவு எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. ஆனால், நான் மிகவும் நன்றாக புகைப்படம் எடுக்கிறேன். அதனால் நான் அதை செய்கிறேன். நல்ல உணவை உண்ண விரும்பும்போது, உள்ளூர் சந்தையில் உள்ள தோசை கடைக்கு செல்வோம். மற்ற நாட்களில், நாங்கள் மோமோஸ்களையும் சிற்றுண்டிகளையும் சாப்பிடுவோம். ஆனால், நான் புகைப்படங்களை என் சொந்த கைகளால் உருவாக்குகிறேன். நல்ல உணவு சமைத்திருந்தால், எப்படி இருக்குமோ, அத்தகைய அற்புதமான தருணங்களை அவை அளித்திருக்கின்றன.

பட மூலாதாரம், NATASHA BADHWAR
எங்கள் முதல் மகள் சாஹர் இளம் வயதில் இருந்தபோது, "எனக்கு பாட்டியின் ராஜ்மா, சித்தியின் ரொட்டி, அம்மாவின் மேகி பிடிக்கும்," என்று கூறுவது வழக்கம்.
நான் பாராட்டுகளையும் அன்பையும் பெற கற்றுக்கொள்கிறேன். என் குழந்தையின் வார்த்தைகளை நான் நம்ப ஆரம்பிக்கிறேன்.
நான் எனக்கு முக்கியமானவள் என்பதை உணர்ந்தேன். "நீ முக்கியம், நீ முக்கியம்," என நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன். அப்போதுதான், அவர்கள் அவர்களுக்கு முக்கியமானவர்கள் என்று என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பேன்.

பட மூலாதாரம், NATASHA BADHWAR
நான் என் மனக்குரலைக் கேட்கிறேன். நான் குழந்தைகள் பேசுவதை கேட்கிறேன். நான் ஒலித்துக்கொண்டு இருக்கும் அலைபேசிக்கு பதிலளிக்காமல் இருக்கிறேன். எங்கள் தேவைகளில் சிக்கல் ஏற்படும் போது நாங்கள் பேசி தீர்வு காண்கிறோம். அவை நியாயமாக உள்ளன.
குழந்தைகள் நாம் தொடக்கத்தில் எப்படி இருந்தோம் என்பதை நினைவூட்டுகிறார்கள். நாம் எப்படி இருக்க முடியும், என்னை எப்படி மீட்க முடியும் என்பதை நினைவூட்டுகிறார்கள். என் இரண்டாவது மகள் அலிசா ஒரு முறை மெதுவாக கூறினாள்," எனக்கு ஏற்கெனவே எல்லாம் தெரியும். ஆனால் நீங்கள் சில விஷயங்களை மறந்துவிட்டீர்கள், அம்மா."
(நடாஷா பத்வார் 'மை டாட்டர்ஸ் மம்', 'இம்மார்டல் ஃபார் எ மொமென்ட்' ஆகிய புத்தகங்களை எழுதியவர். மேலும், அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், ஆசிரியர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு தாய்.)
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












