பருவநிலை மாற்றத்தில் மீத்தேனின் பங்கு என்ன? - இன்னும் பல கேள்விகளுக்கு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாநாடு பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடக்கிறது. இது புவி வெப்பமடைதலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த உலகின் மிகப்பெரிய சந்திப்புகளில் ஒன்று.
ஆனால் அது எதைப் பற்றியது? பிபிசியின் சுற்றுச்சூழல் செய்தியாளர் மாட் மெக்ராத் உங்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
பருவநிலை மாற்றத்தில் மீத்தேனின் பங்கு என்ன? - மாயா யோசிஃபோவா, வியன்னா, ஆஸ்திரியா
மீத்தேன் என்பது ஒரு பசுமை இல்ல வாயு. சதுப்பு நிலங்கள் மற்றும் கரையான்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்தும், விவசாயம், புதைபடிவ எரிபொருளைத் தோண்டி எடுப்பது, நிலக்கழிவுப் பகுதிகள் போன்ற மனித நடவடிக்கைகளின் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.
இது கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் கலவை. மேலும் இது வெப்பத்தைப் பிடித்து வைப்பதில் மற்ற அனைத்தையும் விட தீவிரமாகச் செயல்படுகிறது. அதனால் இது பருவநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியாகிறது.
உலக வானிலை அமைப்பின் தரவுகளின்படி, வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு ஒரு பில்லியனுக்கு 1,889 பாகங்கள் என்ற அளவை 2021-ஆம் ஆண்டில் எட்டியிருக்கிறது.
மீத்தேனைவிட கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு ஏறத்தாழ 200 மடங்கு அதிகம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் புவியை வெப்பமாக்குவதில் கார்பன் டை ஆக்ஸைடை விட மீத்தேன் 80 மடங்குக்கும் அதிகமான ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நிலக்கழிவு தளங்கள், எரிவாயு கிணறுகளில் இருந்து வெளியேறும் உமிழ்வைக் குறைத்தல், உணவுக் கழிவுகளைக் குறைத்தல், கால்நடை நிர்வாகத்தை மேம்படுத்துதல், குறைந்த இறைச்சி மற்றும் பால் உணவுகளை உட்கொள்ள நுகர்வோரை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏதேனும் சாதகமான விளைவுகள் உண்டா? - மைக் பெல், ஜெர்மனி
வெப்பமயமாதலில் சில குறுகிய கால நல்ல விளைவுகள் இருக்கலாம். ஆனால் பருவநிலை விஞ்ஞானிகள் அவற்றை ஏற்பதில்லை. ஏனெனில் அவை எதிர்மறை விளைவுகளை விட மிக மிகச் சொற்பம்.
மிகவும் பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட "நன்மை" என்பது அதிக கார்பன் அளவைக் கொண்ட உலகத்தில் தாவரங்கள் வேகமாகவும் பெரியதாகவும் வளரும். இது கார்பன் உர விளைவு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், இந்த "நல்ல" விளைவு ஏற்கனவே குறைந்து வருவதாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கொரோனா தடுப்பூசிகளை சமமாக விநியோகிக்க முடியாத நிலையில், பருவநிலை மாநாட்டின் மீது நாம் என்ன நம்பிக்கை வைக்க முடியும்? - மகேஷ் நல்லி, லண்டன்
கொரோனா தொற்று நோய் மற்றும் பருவநிலை நெருக்கடிக்கு இடையே ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் சில முக்கிய வேறுபாடுகளும் உண்டு.
நாடுகள் தங்கள் எல்லைகளைத் தாண்டி மக்கள் வருவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்பதை நாம் கடந்த 18 மாதங்களாகப் பார்த்து வருகிறோம்.
இத்தகைய அணுகுமுறையை பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்ற விளைவுகளுடன் பொருத்திப் பார்க்க முடியாது.

பட மூலாதாரம், Getty Images
தடுப்பூசி சமத்துவமின்மையை காலம் மற்றும் பணத்தால் தீர்த்துவிட வாய்ப்புண்டு. ஆனால் பருவநிலை நெருக்கடி அப்படியல்ல. நமது எரிசக்தி முதல் உணவு, ஆடை வரை நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.
இன்னொன்று, தடுப்பூசியின் தேவை என்பது ஒரு குறுகிய கால நெருக்கடி. பருவநிலை மாற்றம் மெதுவாக நெருங்கிவருவது; பல பரிமாணங்களைக் கொண்டது.
பருவநிலை மாற்றத்துடன் முதலாளித்துவ மாதிரி முரண்படவில்லையா? - ஆண்ட்ரூ, எக்ஸெட்டர், பிரிட்டன்
பருவநிலை மாற்றம் என்பது சந்தையின் பெரும் தோல்வி என்று பொருளாதார வல்லுநர் ஸ்டெர்ன் போன்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏனென்றால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு நிறுவனங்கள் எதையும் ஈடாகச் செலுத்த வேண்டியதில்லை.
கடந்த இரண்டு தசாப்தங்களாக காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறன. அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முதலாளித்துவத்தைப் சரியாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, கார்பனுக்கு விலை நிர்ணயம் செய்தல் மற்றும் மாசுபடுத்துபவர்களுக்களை அதற்கான பணத்தை கட்டவைத்தல் போன்றவை.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில், பசுமைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தேவை இருக்கும்போது, அதைப் பூர்த்தி செய்யவதற்கு முதலாளித்துவம் முயற்சிக்கும்.
ஆனால் இந்த அணுகுமுறைகள் சரியாகச் செயல்பட இன்னும் நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றன.
பருவநிலை மாநாட்டுக்கு உண்மையில் 25,000 பேர் தேவையா? நிறைய கார்பன் டை ஆக்ஸைடு உருவாகும். அதை ஏன் ஆன்லைனில் நடத்த முடியாது? - டேவிட், பர்மிங்காம், பிரிட்டன்
தொற்று நோய்க் காலத்தில் ஐ.நா. கூட்டங்களை ஆன்லைனில் நடத்துவது சரியாக இருக்கலாம். கடந்த ஜூன் மாதம் இந்த மாநாட்டுக்காக மூன்று வாரங்கள் நடந்த ஆயத்த கூட்டத்தின் போது இந்தமுறை முயற்சிக்கப்பட்டது.
ஆனால் அது சரியாக நடக்கவில்லை. வெவ்வேறு நேர மண்டலங்களும் தொழில்நுட்பச் சவால்களும், குறைந்த வசதிகளைக் கொண்ட கொண்ட நாடுகளுக்கு இதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாற்றன.
இதனால் பல வளரும் நாடுகள் நேரில் பருவநிலை மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஒரு மோசமான ஜூம் ஆன்லைன் இணைப்பில் தங்கள் குரல்கள் எளிதாகப் புறக்கணிக்கப்படும் என்று அந்த நாடுகள் கருதுகின்றன.
இது சிறந்தது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. 2015 இல், பாரிஸ் உடன்படிக்கையில் கூறப்பட்ட வெப்பநிலை மாற்றங்களை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதில் தீவு நாடுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் இருப்பு முக்கியமானது.
பிற செய்திகள்:
- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி: ஜி20 நாடுகள் இறுதி செய்த முக்கிய ஒப்பந்தம்
- தொங்கா தீவு நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று
- உத்தராகண்டில் கிராமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காலியாவது ஏன்?
- “கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்
- பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா செய்ய வேண்டிய கடமை என்ன? அதற்கு முன் உள்ள சவால் என்ன?
- ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












