ஜூம் ஃபோன் வசதி இந்தியாவுக்கு எப்போது வரும்? - முக்கிய உயரதிகாரி பிபிசி தமிழுக்கு பேட்டி

ஜூம் நிறுவனத்தில் ப்ராடக்ட் & இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம்
படக்குறிப்பு, வேல்சாமி சங்கரலிங்கம், தலைவர் - ஜூம் ப்ராடக்ட், இன்ஜினியரிங் பிரிவு

இணைய சந்திப்புகள், கூட்டங்களுக்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Zoom செயலியின் பயன்பாடு இந்த பெருந்தொற்றுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த செயலியின் எதிர்காலம், அந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், Zoomல் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது, இந்தியாவில் அந்நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகியவை குறித்து அந்நிறுவனத்தில் ப்ராடக்ட் & இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம், பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து:

கே. Zoom செயலின் வளர்ச்சி இந்த பெருந்தொற்றுக் காலத்தில் எப்படி இருந்தது, குறிப்பாக இந்தியாவில் வளர்ச்சி எப்படி இருந்தது?

ப. இந்த பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பாகவே Zoom பெரும் வளர்ச்சியைச் சந்தித்திருந்தது. இந்த பெருந்தொற்றுக் காலம் அந்த வளர்ச்சியை வெகுவாக அதிகரித்தது. நாங்கள் பொதுவாக ஒரு பிராந்தியத்தில் மட்டும் எப்படி வளர்ச்சி எப்படி இருந்தது என்று பார்ப்பதில்லை. மொத்தமாகத்தான் பார்க்கிறோம். Zoomஐ பொருத்தவரை இலவச சேவையும் உண்டு; கட்டண சேவையும் உண்டு. இதில் இலவச சேவையானது, பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பும் பின்பும் சேர்ந்து 67 மடங்கு அதிகரித்துள்ளது. கட்டண சேவையைப் பொறுத்தவரை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.

கே. இது போன்ற செயலிகளின் பயன்பாட்டில் இந்தியச் சந்தையில் ஜூமின் பங்கு எவ்வளவு இருக்கிறது?

ப. இதுபோன்ற தகவல்களை நாங்கள் அளவிடுவதில்லை. ஆனால், Zoomஐப் பொருத்தவரை இந்தியா எங்களுக்கு ஒரு மிக முக்கியமான, பெரிய சந்தை என்று மட்டும் சொல்லுவேன்.

ஜூம் போன் கால்

பட மூலாதாரம், Getty Images

கே. Zoom செயலியைப் பொருத்தவரை இந்தியாவுக்கென பிரத்யேகத் திட்டங்கள் தாவது வைத்திருக்கிறீர்களா?

ப. பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பாகவே நாங்கள் இந்தியாவில் அலுவலகங்களை திறந்துவிட்டோம். இப்போது ஒரு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம். நிறையப் பேரை பணியில் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும், அரசுத் துறைகளுடன் பேசி, அவர்களுக்குத் தேவையான தயாரிப்புகளை உருவாக்கி வருகிறோம்.

Zoom App

பட மூலாதாரம், 10'000 Hours / getty images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கே. இந்திய சந்தையில் பிரத்யேகமான சவால்கள் ஏதும் இருக்கிறதா?

ப. இங்கே மொபைல் போனைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். ஆனால், அதே நேரம் உள்ளடங்கிய பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. ஆகவே எந்த விதமான நெட்வொர்க்கிலும் Zoom இயங்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இந்தியாவுக்கு உதவும். இப்போது பலர் வீட்டில் இருந்தபடி பணியாற்றுகிறார்கள். அவர்களுக்காக நிறைய மெய்நிகர் பின்னணி வடிவங்களை (Virtual background) உருவாக்கியிருக்கிறோம். தவிர, வீட்டுச் சூழலில் எழும் சத்தங்கள் பெரிதாக கேட்காத அளவுக்கு தொழில்நுட்பங்களை மேம்படுத்தியிருக்கிறோம்.

கே. இந்தியாவில் உங்கள் செயலியின் பரவலை அதிகரிக்க என்ன திட்டம் இருக்கிறது...

ப. நிறைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறோம். சில தரவு மையங்களை இங்கே உருவாக்கி இருக்கிறோம். மேலும் சில தரவு மையங்களை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. தவிர, எல்லோருக்கும் Zoom Meeting செயலி குறித்துத்தான் தெரியும். ஆனால், Zoom Phone என்ற தொழில்நுட்பமும் எங்களிடம் இருக்கிறது. அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து பேசி வருகிறோம்.

கே. Zoom Phone குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா?

ப. எல்லா அலுவலகங்களும் தொலைபேசி நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றன. அலுவலகங்கள் பெரிதாகும்போது அல்லது புதிதாக அலுவலகங்களைத் திறக்கும்போது இந்த தொலைபேசிகளுக்கென பெரிய அளவில் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. அதற்குப் பதிலாக, Zoom மூலம் போனை இன்டர்நெட்டில் இணைத்துவிட்டால், இணைப்புகளை Zoom மூலமே இயக்க முடியும். இதற்கு செலவு குறைவாகவே ஆகும்.

கே. இந்தியாவில் இதனை எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்..

ப. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் ஏற்கனவே இருக்கிறது. நாங்கள் சில அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. இந்த போன் தவிர, வேறு சில அம்சங்களையும் அறிமுகப்படுத்த நினைக்கிறோம். அதாவது, Zoom பயன்படுத்துவோர் யாராவது, அதில் புதிதாக சில வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினால் அவர்கள் அதற்கென ஒரு புதிய செயலியை உருவாக்கலாம். அதாவது, zoomஐ ஒரு ப்ளாட்பார்மாக வைத்து அவர்கள் அந்தச் செயலியை உருவாக்கினால், அதற்கு Zoom நிதியுதவி செய்யும் திட்டமும் இருக்கிறது.

கே. பெருந்தொற்றுக் காலத்தின் போது கல்விக் கூடங்களில் zoom செயலி பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டது. பெருந்தொற்றுக் காலம் முடிந்த பிறகு, எல்லோருமே பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். அம்மாதிரி சூழலில், கல்வியில் zoomன் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்கும்?

ப. கற்பிப்பதற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை இந்த பெருந்தொற்றுக் காலம் விரைவுபடுத்தியிருக்கிறது, அவ்வளவுதான். இனி இதிலிருந்து திரும்பிப் போக முடியாது. இந்தப் பயன்பாடு தொடரவே செய்யும். முன்பெல்லாம் ஒரு விருந்தினரை அழைத்தால், அவரால் ஒரு பள்ளிக்கூடத்திற்குத்தான் வர முடியும். இப்போது zoom மூலம் அவர் இருக்குமிடத்திலிருந்தே பல பள்ளிகளில் தோன்ற முடியும், பேச முடியும். இதனால், குழந்தைகளுக்கு நிபுணர்களை, கல்வியாளர்களைக் கூடுதலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

Zoom App

பட மூலாதாரம், insta_photos / getty images

படக்குறிப்பு, கோப்புப்படம்

அதேபோல, ஒருவர் வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறார் என்றால், கல்லூரிக்குச் சென்றுவரும் நேரமே அதிகமாக இருக்கும். இதனால், வேலை மற்றும் படிப்பு ஆகிய இரண்டுமே பாதிக்கப்படும். ஆனால், இப்போது zoom அதனை எளிதாக்கியிருக்கிறது.

மேலும், பல நிறுவனங்கள் மிகச் சின்ன நகரங்களில் இருந்துகூட பணியாளர்களைத் தேர்வுசெய்கின்றன. நல்ல இணைய இணைப்பு இருந்தால் போதும். zoomஐப் பயன்படுத்தி வேலை வாங்க முடியுமென நினைக்கிறார்கள். ஆகவே, பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் திரும்ப பழைய நிலைக்குப் போகும். ஆனால், பல மாற்றங்கள் அப்படியே நிலைத்துவிடும். ஏனென்றால், zoom மூலம் கிடைத்த பலன்களைப் பார்ப்பவர்கள் அதனை விட்டுவிட மாட்டார்கள்.

கே. zoom இப்போதும் ஒரு அலுவலகம் சார்ந்த, அலுவலகங்களுக்குப் பயன்படக்கூடிய செயலியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், தனிநபர் பயன்படுத்தும் செயலிகளின் வீச்சும் வளர்ச்சியும் மிக அதிகம். நீங்கள் இந்தச் செயலியை எப்படித் தொடர விரும்புகிறீர்கள்?

ப. நாங்கள் zoom செயலியை அறிமுகப்படுத்தியோபது, அலுவலகப் பயன்பாட்டிற்கு என்றுதான் துவங்கினோம். பெருந்தொற்று காலத்தின்போது, அவரவர் தத்தம் தேவைக்கு ஏற்றார்போல பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆகவே, இப்போது நாங்கள் அலுவலகம் அல்லாத பயன்பாட்டாளர்களுக்கு என்ன கூடுதலாக செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.

கே. இம்மாதிரி செயலிகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் இருக்கின்றன. இதற்கென zoom செயலியில் பாதுகாப்பை எப்படி மேம்படுத்த நினைக்கிறீர்கள்?

ப. இந்த zoom செயலியை ஒரு லட்சம் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அலுவலங்களைப் பொருத்தவரை அவர்கள் தகவல் தொழில்நுட்பத்திற்கென ஆட்களை வைத்திருப்பார்கள். அவர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள். ஆனால், பள்ளிக்கூடங்களில் அப்படி இருப்பது அரிது.

ஆகவே, பள்ளிக்கூடங்களுக்கு என சில பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது, காத்திருக்கும் அறை (Waiting Room) ஒன்றை உருவாக்கி, அங்கிருந்து பிரதான கூட்டத்திற்கு அனுப்புவது போன்றவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. Meetingல் இருக்கும்போது, ஒருவர் தேவையில்லையென்றால் அவரை எளிதில் வெளியேற்றிவிடலாம். எல்லோரும் வந்துவிட்டால், Meetingஐ பூட்டிவிடலாம். உங்கள் Meetingகின் கடவுச் சொல், சமூக வலைதளத்தில் வெளியாகிவிட்டால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும்.

இது தவிர, கூட்டம் நடக்கும்போது யாராவது ஏதாவது செய்துவிட்டால், Meetingஐ செயலிழக்கச் செய்துவிட்டு (Freeze) செய்துவிட்டு, நடவடிக்கை எடுக்கலாம். இதற்கென ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கிறோம்.

ஜூம் செயலிக்கு அடுத்து ஜூம் ஃபோன் இந்தியாவுக்கு எப்போது வரும்? -Zoom App

பட மூலாதாரம், Getty Images

கே. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதைப் போலவே அலுவலகங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. அப்போது Zoom பயன்பாடு குறையுமே..

ப. முன்பே சொன்னதைப் போல, பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் நிலையானவை. முதலில், இப்படி வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிப்பதை ஏதோ ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகை போலத்தான் நிறுவனங்கள் நினைத்தன. ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் எல்லோரையும் வீட்டிலிருந்தபடி எல்லோரையும் வேலைபார்க்க அனுமதித்தனர். அப்போது அவர்களது செயல் திறன் கூடுதலாக இருப்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆகவே, வரும் காலங்களில் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க அனுமதிப்பது அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களுக்கு அலுவலக தேவைக்கான இடம் குறையும்.

எல்லா ஊரிலும் ஆட்களை எடுக்கலாம், எல்லோரையும் அலுவலகத்திற்கு வரச் சொல்ல வேண்டியதில்லை, எல்லா ஊர்களிலும் அலுவலகம் தேவையில்லை என்பது போன்ற பல முடிவுகளை நிறுவனங்கள் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. Zoom பயன்பாடு இதனால் அதிகரிக்கும்.

கே. Zoom செயலிக்கான எதிர்கால திட்டங்கள் என்னென்ன?

ப. ஒவ்வொரு ஆண்டும் 'ஜூம்டோபியா' என்ற மாநாட்டை நடத்துவோம். அடுத்த ஆண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதை அதில் அறிவிப்போம். ஒரு அலுவலகத்திற்கான மெய்நிகர் வரவேற்பாளர் (Virtual Receptionist) என்பதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு அலுவலகத்தில் இருந்து மூன்று பேர் ஒரே Zoom செயலி மூலம் பேசினாலும், அதைத் தனித் தனி வீடியோவாகக் காட்டும் வசதி இருக்கிறது.

கே. Zoom செயலி மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவது ஊழியர்களிடம் ஒருவிதமான சோர்வை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இது உங்கள் பிராண்டிற்கு எதிர்மறையானதாக இருக்காதா?

ப. நாம் கூட்டங்களை சரியாகத் திட்டமிட வேண்டும். பல அலுவலகங்களில் தகுந்த நேர இடைவெளிகளைத் தருகிறார்கள். அது மிக முக்கியம். தவிர, immerse என்ற ஒரு வசதியைத் தருகிறோம். அது நிஜமான அலுவலக கூட்டத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :