பருவநிலை மாற்றம்: உயரும் கடல் மட்டம், கேள்விக் குறியாகும், மனித குலத்தின் எதிர்காலம் - எச்சரிக்கும் ஐ.நா.

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேட் மெக்ராத்
- பதவி, சூழலியல் செய்தியாளர்
பருவநிலை மாற்றத்தின் காரணமாக நமது கடல், பனிக்கட்டிகள் அழிந்து வருகின்றன என ஐ.நா எச்சரித்துள்ளது.
ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், பனிக்கட்டிகள் உருகிவருகின்றன என்றும், மனித செயல்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
நிரந்தரமாக உறைந்த நிலப்பரப்புகள் அழிவது இன்னும் அதிகளவில் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக அமையும். மாசுபாட்டை விரைவுபடுத்தும்.

பட மூலாதாரம், SPL
காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு கடந்த 12 மாதங்களில் வெளியிட்டுள்ள மூன்றாவது அறிக்கை இது.
தொழில்மயத்துக்கு முந்திய காலத்தில் இருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கும் அதிகமாக உயர்ந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் நிலப்பரப்பு எப்படி நாசமாகுமென அவர்கள் முன்பே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த புதிய ஆய்வானது, உயரும் வெப்பநிலை எப்படி நமது பெருங்கடல்கள் மற்றும் உறைந்த நிலப்பரப்புகளின் மீது தாக்கம் செலுத்துமென விவரிக்கிறது.
இதற்கு முன்பு வெளியான மூன்று ஆய்வு முடிவுகளில் மிகவும் கவலை அளிப்பது இந்த அறிக்கைதான்.
ஆய்வு முடிவு கூறுவதென்ன?
கடல் வெப்ப அளவு உயர்ந்து வருகிறது, பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இதன் விளைவானது இந்த பேரண்டத்தில் வாழும் ஒவ்வோர் உயிரினத்தின் மீதும் தாக்கம் செலுத்தும் என்கிறது இந்த ஆய்வு.
"இந்த பூமி ஆபத்தில் உள்ளது. பல்வேறு திசைகளிலிருந்தும் இந்த புவி அவமானத்தைச் சந்தித்து வருகிறது. இது நம் தவறு" என்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய முனைவர் ஜீன் பீரே.
கடந்த பல பத்தாண்டுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான வெப்பத்தை கடல் நீர் உள்ளிழுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடல் மட்டம் உயர்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அதாவது கடல் நீர் மட்டம் உயர்வதற்கு வெப்பத்தால் நீர் விரிவடைவதும் ஒரு காரணம்.
இப்போது கடல் மட்டம் உயர்வதற்கு கிரீன்லேண்ட் மற்றும் அண்டார்ட்டிக்கா பனிப்பாறைகள் உருகுவதுதான் முக்கிய காரணம் என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு.
2007 - 2016 இடையேயான காலகட்டத்தில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் கிரீன்லேண்டில் பனிப்பாறைகள் உருகுவது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தின் காரணமாக வடக்கு ஆசியா மற்றும் மத்திய ஐரோப்பாவில் உள்ள பனிப்பாறைகள் 2100ஆம் ஆண்டுக்குள் 80 சதவீதம் வரை உருகிவிடும்.
இது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும்.
விளைவு என்ன?
இந்த பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கும்போது, கடல் மட்டம் உயரும்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது 2100ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 1.1 மீட்டர் வரை உயரும் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இது தாழ்வான பகுதியில் வசிக்கும் 70 கோடி மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குமென இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

How Dare You? ஆவேச கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த Greta Thunberg
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

நம்பிக்கை
ஆனால், முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிடத் தேவையில்லை என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
2030ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 45 சதவீதம் குறைத்தால் இந்த பேரழிவிலிருந்து நாம் தப்பலாம்.
இதற்காக அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சூழலியலுக்காக கடந்த வாரம் உலகெங்கும் நடந்த போராட்டத்தையும், நம்பிக்கையையும் பார்க்கும் இவர்கள், நிச்சயம் மாற்றம் வரும் என்று கூறுகிறார்கள்.
முனைவர் ஜீன் பீரே, "அவர்கள் ஊக்கத்துடன் செயல்படுகிறார்கள், அவர்கள் நிச்சயம் தொடர்ந்து இயங்குவார்கள். ஒரு சமூக மாற்றத்தை உண்டாக்குவார்கள்" என்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பு ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் ஆற்றிய உணர்ச்சிகரமாக உரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாகக் கேள்வி கேட்டார் அவர்.
"நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" என அரசியல்வாதிகளை அவர் குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












