Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி வேகம்: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான ஜியோ.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ.

முதலில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசி சேவையை வழங்கிய ஜியோ, வெறும் மூன்றே ஆண்டுகளில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், சந்தாதாரர்கள் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது. டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ஜியோ. அடுத்தக்கட்டம் தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அத்தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் தொலைத்தொடர்புத்துறையை அதிர வைத்துள்ளன.

Jio GigaFiber எனும் பெயரில் கண்ணாடி ஒளி இழை (Optical Fiber) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அகண்ட அலைவரிசை (Broadband) சேவையின் வணிகரீதியிலான திட்டத்தை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி வேகம்: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

குறைந்தபட்சமாக மாதம் 700 ரூபாய் சந்தா கட்டினால், அனைத்து சந்தாதாரர்களுக்கும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவையை வழங்க இருப்பதாகவும், மாதத்திற்கு 10,000 ரூபாய் வரை செல்லும் மற்ற திட்டங்களில் அதிகபட்சமாக 1 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி தொழில் நுட்பத்தில் சராசரியாக 40 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில், அதைவிட சுமார் 25 மடங்கு அதிக வேகத்துக்கு உறுதியளிக்கிறது ஜியோ நிறுவனம்.

கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம்

குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் மற்றும் அதிகபட்சம் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரையிலான அசாத்திய இணையதள சேவையை அளிப்பதாக ஜியோ உறுதியளிப்பதற்கு பின்னால் இருப்பது கண்ணாடி ஒளியிழை (Optical Fiber) எனும் இணையதள வேகத்தை உறுதிசெய்வதில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய தொழில்நுட்பம்தான்.

குறிப்பாக, சொல்லப்போனால், ஜியோ நிறுவனம், வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை (Fiber to the Home) என்னும் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்த இருக்கிறது.

அகண்ட அலைவரிசை சேவை (Broadband), நிலவழி தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சி கேபிள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்தியா மட்டுமின்றி உலகின் பெரும்பாலான நாடுகளில் செப்பு கம்பியை முதலாக கொண்ட இணைப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை
இலங்கை

கொடுக்கப்படும் தரவை/ கட்டளையை எலெக்ட்ரான்களாக மாற்றி அதை மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் செப்பு கம்பிகளால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் திறம்பட செயல்பட முடியாமல் அதன் வேகம் குறைந்துவிடுகிறது. பல்வேறு குறைபாடுகளை கொண்ட இந்த தொழில்நுட்பத்தை மிஞ்சுவதற்கு வந்ததுதான் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம்.

இதன் பெயரை கொண்டே அது எப்படி செயல்படுகிறது என்பதை ஓரளவுக்கு யூகித்துவிடலாம். ஆம், கண்ணாடியாலான கம்பிக்குள் தமது தரவை ஒளியலைகளாக மாற்றி அதை மற்றொரு மூலையை நோக்கி பயணிக்கவைப்பதே கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் அடிப்படை. சத்தத்தை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடிய ஒளியே இங்கு அடிப்படை. ஒளியின் அதிவேகப் பயணத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை மனிதரின் மயிரிழையை விட சற்றே தடிமனான கண்ணாடி இழை உறுதி செய்கிறது.

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி வேகம்: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், AFP

அதுமட்டுமின்றி, ஒளி தொடர்ந்து அதிவேகத்தில் பயணிப்பதற்கு தேவையான மின்சாரத்தை அதற்கு மேலுள்ள மற்றொரு அடுக்கும், தரவும், மின்சாரமும் சிதறாமல் பாதுகாப்பாக இருப்பதை அதற்கு மேலுள்ள அடுத்தடுத்த அடுக்குகளும் உறுதி செய்கின்றன.

ஜியோவுக்கு முன்னதாகவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவையை வருகின்றன. ஆனால், அவற்றில் எல்லா சேவைகளும் முற்றிலும் இந்த தொழில்நுட்பத்தை அளிப்பதில்லை. அதாவது, ஒரு குறிப்பிட்ட இடம் வரை கண்ணாடி ஒளியிழை பயன்படுத்தப்பட்டு, அதன் பிறகு சேவையை பெறும் வீட்டிற்கு சாதாரண செப்பு கம்பி இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பயன்பாட்டாளர்களால் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் முழுப் பயனை பெற முடியாமல் போகிறது.

இலங்கை
இலங்கை

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து, இணைப்பை பயன்படுத்தும் கடைசி இடம் வரை முற்றிலும் கண்ணாடி ஒளியிழை கம்பியை பயன்படுத்தும் 'வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை' (FTTH) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த விதத்தில் மேம்பட்டது?

கற்றையகலம் (Bandwidth):

ஒலி சார்ந்த தொடர்பாடலுக்காக உருவாக்கப்பட்டததுதான் செப்பு கம்பிகள் அடிப்படையிலான தொழில்நுட்பம். எனவே, அவற்றால் குறைந்த அளவு தரவை மட்டுமே எடுத்துச்செல்ல இயலும். ஆனால், கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்திலோ, மிக அதிகளவிலான தரவையும் பாய்ச்ச முடியும்.

பதிவிறக்க/ பதிவேற்ற வேகம் (Upload/Download Speed):

ஒளி அலைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம் மூலம் செப்பு கம்பிகளை விட மிக அதிவேக இணையதள பதிவிறக்க/ பதிவேற்ற வேகத்தை தங்குதடையின்றி கொடுக்க முடியும். இதன் காரணமாகவே ஜியோவால் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் வேகம் என்ற உறுதிமொழியை கொடுக்க முடிந்துள்ளது.

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தொலைவு:

சில மீட்டர் தூரத்திலேயே தனது வேகத்தை இழக்கும் செப்பு கம்பிகளுடன் ஒப்பிட்டால், கண்ணாடி ஒளியிழை கம்பிகளால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி தரவை எடுத்துச்செல்ல முடியும். குறிப்பாக, உலக நாடுகளுக்கிடையேயான தொடர்பாடல் வேகம் அதிகரித்து வருவதற்கு கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி ஒளியிழை கம்பிகளே காரணம். அவை உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை:

பல்வேறுபட்ட அடுக்குகளை கொண்ட கண்ணாடி ஒளியிழை கம்பிகள் மிகவும் உறுதியானது மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. ஆம், அவற்றிலுள்ள பல்வேறு அடுக்குகள் கம்பிகளை இடைமறித்து தரவு திருட்டு மேற்கொள்ளப்படும் அபாயத்திலிருந்து தடுக்கிறது. அதுமட்டுமின்றி, செப்பு கம்பிகளை விட பல மடங்கு வலிமையான கண்ணாடி ஒளியிழை கம்பிகள், செப்பு உள்ளிட்ட மற்ற வகை கம்பிகளை விடவும் உறுதியானது.

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி வேகம்: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

செலவு:

செப்பு கம்பிகளுடன் ஒப்பிடும்போது, கண்ணாடி இழை, ஒளியிழை கம்பிகளின் விலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது மட்டுமின்றி, குறைந்த பராமரிப்பு, உறுதித்தன்மை, நிலையான வேகம் போன்றவை நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது செய்யும் முதலீட்டிற்கு லாபகரமான ஒன்றே என்று தொழில்சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வளவு குறைந்த விலை எப்படி சாத்தியம்?

ஜியோ அளிக்கும் வேகத்தையும், பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் அதன் சேவையுடன் தொடர்புபடுத்தி பார்த்தோமானால் ஆச்சரியமே ஏற்படுகிறது. ஆம், உலகளவில் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தை அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களின் மாத சந்தாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஜியோவின் குறைந்தபட்ச கட்டணம் அவற்றில் பத்தில் ஒரு மடங்குதான் இருக்கிறது. இதை, அறிமுக விழாவில் முகேஷ் அம்பானியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலைபேசி குரல்வழி அழைப்பு முதல் 4ஜி இணைய சேவை வரை குறைவான கட்டணத்தில் அளித்த ஜியோவால் எப்படி ஒப்பீட்டளவில் செலவுமிக்க கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தையும் குறைவான கட்டணத்தில் அளிப்பது சாத்தியமாகிறது என்று அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் மணி மணிவண்ணனிடம் கேட்டபோது, "கண்ணாடி ஒளியிழை கம்பிகளின் விலை எவ்வளவு அதிகமோ அதைவிட அவற்றை நிலத்தில் பதித்து தொலைதூரத்திலிருந்து கொண்டுவருவதற்கு அரசிற்கு அளிக்க வேண்டிய தொகை மிகவும் அதிகம்.

இலங்கை

Jio Giga fiber எப்படி வாங்குவது? | Full HD TV Free - All you need to know | Reliance

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இலங்கை

ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதியை கொள்கைரீதியாகவே மத்திய அரசு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை காட்டுகின்றன. அதுவே, குறைந்த விலையை அளிப்பதற்கான ரகசியத்தின் அடிப்படை.

அதற்கடுத்து பார்த்தோமானால், சந்தையில் தங்களுக்கென தனி இடத்தை பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கடைபிடித்த அதே பாணியை மீண்டும் ஜியோ கடைபிடித்துள்ளதாக கூறலாம். அதாவது, தங்களது சேவையின் தனித்துவத்தை சுட்டிக்காட்டி மக்களை ஈர்ப்பது மட்டுமின்றி, சந்தை விலையை விட குறைவான விலையை நிர்ணயிக்கும் அலைபேசி சந்தையில் பயன்படுத்திய பாணியை தற்போது இங்கும் ஜியோ நீட்டித்துள்ளது எனலாம்" என்று அவர் கூறுகிறார்.

'ஜியோவை கட்டுப்பாடின்றி வளர விட கூடாது'

அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வணிகரீதியாக தொடங்கப்படவுள்ள தங்களது கண்ணாடி ஒளியிழை இணைய சேவையை பெறுவதற்கு 15 மில்லியன் மக்கள் முன்பதிவு செய்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இது இந்திய தொலைத்தொடர்புத்துறையில் முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கை என்று கருதப்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் அதீத வளர்ச்சி பெற்று வரும் ஜியோவின் போக்கு ஒருவகையில் 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறையை தன்னந்தனியாக கட்டுப்படுத்திய ஏடி&டி (American Telephone & Telegraph) எனும் கூட்டு நிறுவனத்தை நினைவுப்படுத்துகிறது என்கிறார் மணிவண்ணன்.

"அமெரிக்காவின் தொலைத்தொடர்புத்துறையில் நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட நிறுவனம்தான் ஏடி&டி. தொழில்நுட்பம் வளரவளர அதனுடன் சேர்ந்து அபரிதமாக வளர்ந்து வந்த இந்நிறுவனம் ஒருகட்டத்தில் அமெரிக்காவின் தொலைத்தொடர்புத்துறையில் அசைக்க முடியாத பெரும் நிறுவனமாக உருவாகி, போட்டியாளர்களுக்கு இடமளிக்காமல், ஒட்டுமொத்த சந்தையையும் கட்டுப்படுத்த தொடங்கியது.

Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி வேகம்: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக நாடு முழுவதும் அதிருப்திகள் எழவே, 1984ஆம் ஆண்டு ஏடி&டி நிறுவனத்தின் ஏகபோக செயல்பாட்டை மட்டுப்படுத்தி, அதை எட்டு தனிப்பட்ட நிறுவனங்களாக பிரித்தது அமெரிக்க அரசு.

அதைத்தொடர்ந்தே, அமெரிக்க தொலைத்தொடர்புத்துறையில் மீண்டும் நல்ல போட்டிமிக்க சூழல் உருவாகியது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் மீண்டும் வளர்ச்சியை காட்டிய ஏடி&டி, இதே வேகத்தில் சென்றால் மீண்டும் அரசின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலை நிலவுகிறது."

குறிப்பிட்ட சந்தையை தன்மயமாக்கும் வகையிலான நிறுவனங்களின் ஏகபோக செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் உள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "கிட்டத்தட்ட அமெரிக்காவை ஒத்த சட்டம் இந்தியாவிலும் உள்ளது. ஆனால், அதை காலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வைத்திருப்பது சிறந்தது. இணையதள சேவை மட்டுமின்றி, தரவுப் பகுப்பாய்வியல் (Data Analytics), செயற்கை அறிவு (Artificial Intelligence), பொருள்களின் இணையம் (Internet of Things) போன்ற பல்வேறு விடயங்களில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களோடு சேர்ந்து கால்பதிக்கப் போவதாகவும் ஜியோ அறிவித்திருக்கிறது.

ஒரே நிறுவனத்திடம் கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் சென்று குவிவது எப்போதுமே நல்லதல்ல. அதை கட்டுப்படுத்துவதற்கு, முறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் தேவை இப்போது இல்லாதது போன்றிருக்கலாம்; ஆனால், எதிர்காலம் குறித்து இப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்" என்று எச்சரிக்கை விடுக்கிறார் தொழில் நுட்பவியலாளர் மணி மணிவண்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: