சௌதி அரேபியா: குறைவான சம்பளம், பாஸ்போர்ட் பறிப்பு- தமிழரின் கதை

பொறியியலாளர் வேலை என ஏமாற்றப்பட்டு, சாதாரண தொழிலாளியாக சௌதி அரேபியாவில் பணிபுரியும் கனேஷ், வீடு திரும்ப உதவியை தேடி வருகிறார்.
படக்குறிப்பு, பொறியியலாளர் வேலை என ஏமாற்றப்பட்டு, சாதாரண தொழிலாளியாக சௌதி அரேபியாவில் பணிபுரியும் கனேஷ், வீடு திரும்ப உதவியை தேடி வருகிறார்.

சிறந்த வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி சௌதி அரேபியா அனுப்பப்பட்ட தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், கூலித் தொழிலாளியாக, குறைவான சம்பளத்திற்கு வேலைசெய்து துன்பப்படுவதால், நாடு திரும்புவதற்கு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

சௌதி அரேபியாவில் தம்மாமின் சாஃப்வா என்ற இடத்தில் வேலைசெய்யும் கணேஷ் சண்முகம், தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டமான ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் வெள்ளாளர் பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.

தன்னுடைய தற்போதைய நிலையை விளக்கி அவர் ஒரு வாட்ஸ்பதிவு காணொளியை வெளியிட்டுள்ளார்.

சௌதி அரேபிய நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளம் கிடைக்கும் பொறியியலாளருக்கான வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த முகவரிடம் கணேஷ் சென்றிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் சௌதி அரேபியாவை சென்றடைந்தார் கனேஷ்.

2500 சௌதி ரியாலுக்கு மேலாக சம்பளம் பேசி விட்டு 1300 ரியால் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது
படக்குறிப்பு, 2500 சௌதி ரியாலுக்கு மேலாக சம்பளம் பேசி விட்டு 1300 ரியால் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது

பொறியாளர் என்றல்லாமல் சாதாரண கூலி தொழிலாளியாக உழைக்க வேண்டும் என்று அங்கு வைத்து கூறப்பட்டபோது, அவருடைய கனவுகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்தன.

சிறந்த பொறியியல் வேலை என்று சொல்லி ரூபாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை ஏற்கெனவே அவருடைய சென்னை முகவரிடம் கொடுத்திருந்தார் என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

முகவருக்கு இவ்வளவு தொகையை கொடுப்பதற்கு தன்னுடைய சொந்த வீட்டையே அடமானம் வைத்து தான் பணம் ஏற்பாடு செய்திருந்தார்.

இத்தகைய பொறுப்புக்கள் இருந்ததால், கூலி வேலை என்றாலும், அதனையே தொடர அவர் எண்ணியிருக்கிறார்.

2500 சௌதி ரியாலுக்கு மேலாக (ரூ. 44,460) சம்பளம் பேசியிருந்த அவருக்கு 1300 ரியால் (ரூ. 23,119) தான் வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து கணேஷ் சண்முகம் குறிப்பிட்டுள்ள முகவரிடம் நாம் கேட்ட போது, அவர் கணேஷ் சண்முகத்தை தான் தான் சவூதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கணேஷ் சண்முகத்தை தான் மின்பணியாளர் பணிக்கு தான் அனுப்பியதாகவும், அவருக்கு தருவதாக கூறப்பட்ட ஊதியம் 1400 ரியல் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

நிறுவனத்தை விட்டு அவர் வெளியே சென்றுவிடாமல் இருக்க அவருடைய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) அந்த நிறுவன உரிமையாளர் பறித்து வைத்திருப்பதாக கனேஷ் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

பொறியியலாளர் வேலைபெற வேண்டி, ரூ. 1,17000-த்தை முகவருக்கு கொடுக்க தன்னுடைய சொந்த வீட்டை அடமானம் வைத்துள்ளார் கனேஷ்.
படக்குறிப்பு, பொறியியலாளர் வேலைபெற வேண்டி, ரூ. 1,17000-த்தை முகவருக்கு கொடுக்க தன்னுடைய சொந்த வீட்டை அடமானம் வைத்துள்ளார் கனேஷ்.

மிகவும் கவலையடைந்து, வேதனையுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை உதவிக்காக தொடர்பு கொண்டிருக்கிறார். பலமுறை அவருடைய டுவிட்டர் முகவரிக்கு பதில் அனுப்பியும் எந்த பதிலும் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகளே. மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் மனு அளித்திருப்பதாகவும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கணேஷின் தந்தை சண்முகம் பிபிசியிடம் தெரிவித்தார்.

"முதிய வயதிலும் கடுமையாக உழைக்கும் பெற்றோருக்கு ஓய்வு அளிக்கும வகையில், உழைத்து சம்பாதித்து வீட்டிற்கு பணம் அனுப்ப தான் இங்கு வந்தேன். அனைத்தும் தகர்ந்துவிட்டது. நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். உதவிக்காக ஏங்கி கொண்டிருக்கிறேன் "என்று அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

“நான் ஒரு கூலி தொழிலாளியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. என்னுடைய கால் முறிந்துவிட்டது. என்னுடைய ஆவணங்கள் எதுவும் என்னிடம் இல்லாததால் என்னால் வெளியே போக முடியவில்லை.

இங்குள்ள வாழ்க்கை நரகத்தை போன்றது. எப்படியாவது வீட்டுக்கு திரும்பி செல்ல விரும்புகிறேன்” என்று தமாமின் சாஃப்வா என்ற இடத்திலிருந்து கனேஷ் பிபிசியிடம் கூறினார்.

இந்திய அரசு தலையிடும் என்றும், அதனால் தமிழ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியும் என்றும் கணேஷ் நம்பிக் கொண்டிருக்கிறார்.

சவூதி அரேபியாவில் சுமார் 10,000 இந்தியத் தொழிலாளர்கள் பட்டினியால் தவித்து வந்த தகவல் கிடைத்ததும், அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ள பின்னணில், கணேஷ் சண்முகத்தின் இந்த அவலநிலையும் வெளிவந்துள்ளது.