பாகிஸ்தானில் "இந்திய உளவாளி" கைது; இந்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் "இந்திய உளவாளி" ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் சொல்வதை இந்தியா மறுத்திருக்கிறது.

குறித்த நபர் இந்தியர் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் இந்திய அரசு, உளவு குற்றச்சாட்டை மறுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறித்த நபர் இந்தியர் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் இந்திய அரசு, உளவு குற்றச்சாட்டை மறுக்கிறது.

செவ்வாய்க் கிழமையன்று பாகிஸ்தான் அதிகாரிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், இருந்த நபர் தான் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

"பாகிஸ்தானில் இந்தியாவின் தலையீடு இருக்கிறது என்பதற்கு இதைவிட தெளிவான ஆதாரம் தேவையில்லை," என அந்நாட்டு ராணுவத்தின் பேச்சாளர் லெப். ஜெனரல் அஸிம் பஜ்வா தெரிவித்தார்.

ஆனால், அந்த நபர் இந்தியர் என்பதை இந்திய அரசு ஒப்புக்கொண்டிருந்தாலும், உளவுக் குற்றச்சாட்டை அது மறுத்துள்ளது. அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.

"இந்த நபர் பாகிஸ்தானில் இந்திய அரசுக்காக அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதை அரசு முழுமையாக மறுக்கிறது" என இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டிருப்பவரின் நலன் குறித்து தாங்கள் கவலையடைந்திருப்பதாகவும் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்தியரைப் பார்க்க தூதரக அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த நபர் இந்திய கடற்படையில் வேலைபார்ப்பதாகவும் பலூசிஸ்தானில் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்னிருந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

"இந்த அளவுக்கு உயர் பதவியிலிருக்கும் புலனாய்வுத் துறை அதிகாரியோ, ராணுவ அதிகாரியோ மற்றொரு நாட்டில் கைதுசெய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை" என்கிறார் அஸிம் பஜ்வா.