மு.க.ஸ்டாலின்: ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் - முதல்வர் உரையின் 10 அம்சங்கள்

பட மூலாதாரம், MK STALIN
மலையாள மனோரமா பத்திரிகையின் 'இந்தியா 75' நிகழ்வில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என் பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே என்று பேசத்தொடங்கி உரையாற்றினார்.
நான் கன்னூருக்கு வந்தபோது கேரள மக்கள் அளித்த வரவேற்பை என்னால் மறக்க முடியவில்லை என்று கேரள மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 2 நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசினார்.
இந்த பேச்சின்போது, இந்தியாவின் பன்மைத்தன்மை, திமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு, சிபிஎம் கூட்டணிக்கான காரணம் ஆகியவை குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார். அவர் பேச்சில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இதோ:
- கூட்டாட்சி கருத்தியலும் சுதந்திரத்தால் பெற்ற உரிமைகளும், வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்த அளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு, இந்தியாவின் வேற்றுமைகளை (பன்மைத்துவத்தை) மதிக்கும் பிரதமராக இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கினார். இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, இந்தி திணிக்கப்படாது என்று அவர் உறுதி அளித்தார். மதச்சார்பற்ற மனிதராக இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். அனைவரும் விவாதிக்கும் களமாக நாடாளுமன்றத்தை அவர் நடத்திக்காட்டினார்.
- கூட்டாட்சி நெறிமுறைகளை பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தியும் கடிதங்கள் எழுதியும் வந்தார். அவர் எழுதிய கடிதங்கள் பல்வேறு தொகுப்பாக கிடைக்கின்றன. இத்தகைய காரணங்களால்தான் இந்தியா 75 ஆண்டுகளாக வலிமையாக இருக்கிறது.
- இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்துகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சமூகத்துவம், சமூக நீதி ஆகிய தன்மைகளை பலப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் உண்மையாகவே இந்தியாவை காப்பாற்றுவது.
- 75ஆண்டு சுதந்திர தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது. இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக வைப்பதற்கான பணிகளை ஆற்ற வேண்டும்.
- இந்தியா என்பது ஒற்றை அரசாங்கம் அல்ல. பல மாநில அரசுகளின் கூட்டமைப்பு, ஒன்றியம்தான் இந்தியா. ஒன்றியம் என்பது புதிய சொல் அல்ல. அனைத்து மாநிலங்களையும் காப்பது என்பதுதான் இந்தியாவைக் காக்கும் வழி. ஓர்மைத்தன்மை என்பது ஒற்றுமை ஆகாது என்பார் அறிஞர் அண்ணா. ஓர்மைப்படுத்துவதன் மூலம் உங்களால் ஒற்றுமையை உருவாக்க முடியாது என்று அவர் சொல்வார்.
- இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை அல்லவா? இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள் உண்டு. அனைவருக்கும் ஒரே மதம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் உணவு உடை தொடங்கி அனைத்திலும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால், நம்மை ஒற்றுமைப்படுத்துவது நட்பும் சகோதரத்துவமும்தான்.
- ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்பது நம் ஒற்றுமையை தகர்க்கும். அவ்வாறாக நம் ஒற்றுமையை தகர்க்கப் பார்ப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளாவர். இதுபோன்ற துர்சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கக் கூடாது.
- மாநிலங்கள் தன்னிறைவைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, பலவீனம் அல்ல. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6%. இதனால், இந்தியாவுக்குதானே நன்மை. மக்களோடு நெருக்கமாக இருப்பது மாநில அரசுதான். மக்களின் தேவையை பார்த்து பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உண்டு. எனவே மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்.
- இந்தியா கூட்டரசாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிராக பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்திய மக்களாட்சியின் தற்போதைய நிலை.
- ஜிஎஸ்டி, நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட கொள்கைகள் மக்களுக்கு எதிராக உள்ளன. தனக்கு கீழ் இயங்கும் இணை அரசுகளை நடத்தவே பாஜக திட்டமிடுகிறது. ஆனால், இந்தத் தடைகளை எதிர்த்து நாம் நம் அரசை நடத்த வேண்டும்.
- அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, நீண்ட கால நன்மை என்றாலும் குறுகிய கால நன்மை என்றாலும் ஜனநாயகமே நம் நாட்டுக்கு பொருந்தும். நம் நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்கும் அதுவே பொருந்தும் என்று அவர் எழுதினார். அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட இந்தியாவை காக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
என் அன்புள்ள மலையாள உடன்பிறப்புகளே! அனைவருக்கும் நன்றி. என்றவர், தொடர்ந்து அரங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேரளாவில் உங்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ்நாட்டில் எங்கள் முதல்வரை எப்படி பார்க்கிறார்கள்?
"எனக்கு மலையாளத்தில் இருக்கும் ரசிகர்களைப்போலவே தமிழ்நாட்டில் காம்ரேட் பினராயி விஜயனுக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் வேறொரு கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பின்னர், ஆட்சிமாற்றம் வந்தபிறகு, நான் என் செயல்பாடுகளுக்கான முன்னுதாரணமாக உங்கள் முதல்வரை எடுத்துக்கொண்டேன். குறிப்பாக கொரோனா தொற்றைக் கையாள்வதற்குகூட அவரையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளேன்."
கேள்வி: சிபிஎம் கட்சியுடன் கூட்டணி குறித்து
பதில்: திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே உள்ளது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கைக் கூட்டணி. திமுக ஆட்சிக்கு தேவையான ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம் அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறது. சிபிஎம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரில் ஆட்சியில் நடக்கும் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஆரோக்கியமான கொள்கைக் கூட்டணி தொடரும்.
கே: ஒரே நாடு ஒரே மொழி என்றபோது, கேரளாவும் தமிழ்நாடும்தான் எதிர்த்தன. இதனால் பிராந்திய மொழிகளுக்கு ஆபத்து உண்டா?
ப: ஆமாம், இங்கு ஒற்றை மொழி என்பது அரசு மொழியாகவோ ஆட்சி மொழியாகவோ இருக்ககூடாது. அப்படியிருந்தால், பிற மொழிகள் பாதிக்கப்படும். காலப்போக்கில் அழிந்துவிடும்.
கே: அண்மைக்காலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள் போலி ட்வீட்டுகளுக்காக கைது செய்யபடுகிறார்கள்? எதிர்க்கட்சியினர் சுதந்திரத்தை இந்தியர்கள் இழக்கும் நிலை நோக்கி செல்கின்றதா? தனிமனித, ஊடக சுதந்திரம் குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: இது அத்தனையும் எதேச்சதிகாரமான போக்கு. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செய்யும் துரோகம். போராடி பெற்ற சுதந்திரத்துக்குப் பின் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் செயல் இது" என்று பதிலளித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













