இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அஹ்மத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த ஒரு கடுமையான போரில், பதின்பருவ முஸ்லிம் ஜெனரல் ஒருவர், அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்தை கைப்பற்றினார். இழந்த பிரதேசம் சிறியது, ஆனால் பின்விளைவுகள் பெரிதாக இருந்தன. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் இதுவொரு பெரிய திருப்புமுனை என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
அவரது வெற்றி இஸ்லாமிய கலாசாரம் பண்டைய வேத நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பில் வருவதற்கும் இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம் பரவுவதற்கும் வழிவகுத்தது. தனது வெற்றி பல நூற்றாண்டுகளின் அரசியல் மற்றும் கலாசார நிலைத்தன்மையை அசைத்துவிட்டது என்பதை 17 வயதான ஜெனரல் முகமது பின் காசிம் அறியவில்லை.
தடம் மாறுகிறதா?
அப்போதிலிருந்து இந்தியா ஒரு சமய சார்பற்ற ஜனநாயக குடியரசாக மாறுவதற்கான ஒரு சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டது. ஆனால் அது இப்போது மாறுகிறதா?
2014 ஆம் ஆண்டு தனது அமோக தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில் அடிமைத்தனத்தில் இழந்த அந்த நூற்றாண்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்தார். வரலாற்றின் பக்கங்களை நினைவுகூர்ந்த அவர், இந்த நூற்றாண்டுகளை அடிமைத்தனத்தின் காலம் என்று வர்ணித்தார். 1200 ஆண்டுகால அடிமை மனநிலை நம்மை வாட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த 200 ஆண்டுகளை மட்டுமே இந்தியா அடிமைத்தளையில் இருந்த காலம் என்று வரலாற்றாசிரியர்கள் எப்போதும் கூறி வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வலதுசாரிகள் பிரிவு முழுவதும் இந்தியர்கள் 1200 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தனர் என்ற மோதியின் கருத்துடன் ஒத்துப்போனது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முஸ்லிம் ஆட்சியும் இருந்தது. முஸ்லிம் படையெடுப்பிற்கு முன் இந்தியா ஒரு ஹிந்து நாடாக, அந்நிய செல்வாக்கு இல்லாத நாடாக இருந்தது என்பது இந்தக் கூற்றின் உள்ளர்த்தம். புகழ்பெற்ற வேத காலத்தில் பாரதவர்ஷம், அதாவது இந்துராஷ்டிரம் இருந்ததாக சங்பரிவார் மற்றும் பிற மறுமலர்ச்சி இந்து அமைப்புகள் நம்புகின்றன. இந்துத்வ சித்தாந்தவாதிகளான சாவர்க்கரும் கோல்வால்கரும் இந்து ராஷ்டிரம் என்ற எண்ணம் பழங்காலத்திலிருந்தே இருந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
இருப்பினும், இந்து மதம் குறித்த அமெரிக்க நிபுணர் பேராசிரியர் வெண்டி டோனிகர், பண்டைய இந்தியா ஓர் இந்து தேசமாக இருந்தது என்பதை மறுக்கிறார். அவர், "இந்தியா எப்போதுமே ஓர் இந்து நாடாக இருந்ததில்லை. வேத காலத்தில், துணைக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வேத நூல்களால் ஆவணப்படுத்தப்பட்ட வழிபாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து எப்போதுமே மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் (பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம்) இருந்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், "இந்து மதம்" என்ற பொதுவான பெயரின் கீழ் பலவிதமான தெய்வங்களும் வழிபடப்பட்டன. மேலும் இந்து மதத்திலேயே பல வகையான வழிபாட்டு முறைகள் இருந்தன.
பல அறிஞர்கள் இந்து மதத்தை 'ஒரே' மதமாகக் கருதமுடியாது என்று கூறுகின்றனர். பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததால் அவை பல்வேறு வகையான இந்துக்களின் மிகவும் மாறுபட்ட நம்பிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யாமல், மேம்படுத்தவே செய்தன. எனவே இந்த முழு வாதமும் முட்டாள்தனமானது," என்று பேராசிரியர் டோனிகர் பிபிசியிடம் கூறினார்.
ஆனால், பண்டைய இந்தியாவின் நிபுணரான, வரலாற்றாசிரியர் ஷோனாலிகா கெளல், இந்து நாடு பண்டைய காலத்தில் இருந்ததாக நம்புகிறார்.
அப்படியென்றால், இந்து தேசம் என்ற எண்ணம் முதலில் எவ்வாறு எழுந்தது?
இந்தியா 'இந்து நாடாக' மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா?
ஹிந்து ராஷ்டிரா என்ற கருத்தை ஊக்குவிக்க வரலாறு மற்றும் கல்வி எவ்வாறு திருத்தப்படுகின்றன? அதில் சிறுபான்மையினரின் நிலை என்னவாக இருக்கும்?
இதற்கு அரசியலமைப்புத் திருத்தங்கள் தேவைப்படுமா மற்றும் 2024 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் திட்டமாக இது இருக்குமா?
இந்தக் கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளன.
இந்து ராஷ்டிரம் என்ற எண்ணம் முதலில் எப்படி உருவானது?
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே, இந்து தேசத்தை மீட்பதில் செயல்பட்டு வருகிறது. ஹிந்துத்துவத்தில் நிபுணரான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் இதை ஒப்புக் கொள்கிறார்.
"சங்பரிவார் தரப்பில் எப்போதும் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்க ஒரு திட்டவட்டமான முன்னுரிமை உள்ளது. அதாவது அவர்கள் சமூகத்தைக் கீழே இருந்து மாற்ற விரும்புகிறார்கள். அடிமட்டத்தில் உள்ள இந்துக்களின் இந்து ஆன்மாவை சீர்திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். 1925இல் தொடங்கி 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்தத் திசையில் நிறைய சாதித்துள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.
வரலாற்றாசிரியர் புருஷோத்தம் அகர்வால் இந்து தேசத்திற்கான கோரிக்கை புதிதல்ல என்று கருதுகிறார். "சங்கம் (ஆர்எஸ்எஸ்) 1925இல் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கர் தனது "ஹிந்துத்வா: ஹூ இஸ் எ ஹிந்து" என்ற நூலில் இதைப் பற்றி எழுதியிருந்தார். இந்த நூலில் சாவர்க்கர் இந்துத்துவ சித்தாந்தத்திற்கான கருத்தியல் கட்டமைப்பை வழங்கியுள்ளார். இப்போது இந்தியாவில் அது அதிகாரத்தில் உள்ளது," என்கிறார் அவர்.
இந்துத்வா என்பது இந்து மதத்தை விட மேலானது, ஓர் அரசியல் தத்துவமாக அது இந்து மத நம்பிக்கையுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று சாவர்க்கர் தெரிவிக்கிறார். அவர் இந்துத்துவத்திற்கு அவசியமான மூன்று மந்திரங்களைக் கொடுத்தார்: ராஷ்டிரா (தேசம்), ஜடி (இனம்) மற்றும் சன்ஸ்க்ருதி (கலாசாரம்). இந்தியாவில் பிறந்தாலும்கூட இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இந்த மூன்றும் இருக்கும் எனச் சொல்ல முடியாது என்று அவர் கூறினார். இவ்வாறு வரையறுக்கப்பட்ட இந்துக்கள், தொன்றுதொட்டு இருந்த இந்திய தேசத்தை அமைத்தனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

சக்திவாய்ந்த மதத் தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கோரிக்கை எப்போதும் இருந்து வந்துள்ளது என்பது உண்மைதான்.
ஆனால் இப்போது அது நம் காலத்தில் குறிப்பாக மோதியின் ஆட்சியில் தீவிரமடைந்துள்ளது. உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியின் தால்கடோரா உள் விளையாட்டரங்கில், புரியின் செல்வாக்கு மிக்க சங்கராச்சார்யரான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, இந்தியா தன்னை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியா இந்து நாடாக மாறினால் வேறு 15 நாடுகள் அதைப் பின்பற்றும் என்று அவர் கூறினார்.
தற்போது இந்தியாவும் நேபாளமும் மட்டுமே தெளிவான இந்து பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு நாடுகள். "மாற்றம் இல்லை என்று சொல்லமுடியாது. நிச்சயமாக பிரசாரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரசாரங்களின் தீவிரம் அதிகரித்துள்ளது மற்றும் புவியியல் நோக்கம் விரிவடைந்துள்ளது," என்கிறார் பேராசிரியர் ஜாஃப்ரெலோட்.
ஓர் இந்து நாடு என்ற நிலை வருவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். அதற்கான அடிப்படை வேலைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், கூட்டாட்சி, மதசார்பின்மை, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை விலக்குவதில் பல நிறுவனங்கள் இணக்கமாகிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம் வரலாறை விலக்கும் விதமாக கல்வி நிறுவனங்கள் மறுவடிவமைக்கப்படுகின்றன. நகரங்கள் மற்றும் தெருக்களின் முஸ்லிம் பெயர்கள் நீக்கப்படுகின்றன.
எதிர்கட்சித் தலைவரும் இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில்சிபல், எல்லா முக்கிய அமைப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்கிறார்.
"நீதித்துறையைத் தவிர எல்லா அமைப்புகளையும் அவர்கள் (மோதி அரசு) கைப்பற்றியுள்ளனர். ஊடகங்கள் அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் கைப்பற்றப்பட்டது. சுதந்திரக் குரல்கள் முடக்கப்படுகின்றன. அரசு அமைப்புகள் (அமலாக்க இயக்குனரகம், சிபிஐ மற்றும் வருமான வரி)" கைப்பாவைகளாகிவிட்டன," என்றார் அவர்.
பாஜகவும் மத்திய அரசும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் ஜனநாயகம் செழித்து வருவதாகவும் கடந்த ஆண்டில் மோதியின் தலைமையில் இந்தியா அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
இந்தியா இந்து நாடாக மாறுவதற்கான அறிகுறிகள் என்ன?
கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோதி காசி விஸ்வநாதர் ஆலய வழித் தடத்தை "ஹர்ஹர்மஹாதேவ்" என்ற கோஷங்களுக்கு மத்தியில் திறந்து வைத்தார். காவி உடை அணிந்து, முனிவர் போல் குளிர்ந்த கங்கை நீரில் நீராடி, கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் ஒரு ட்வீட்டில், புனித நதியின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இவை அனைத்தும் தேசிய தொலைக்காட்சியில் மெகா நிகழ்வாக நேரலையாக ஒளிபரப்பாகின.
"ஒளரங்கசீப் வரும் போதெல்லாம் ஒரு சிவாஜியின் எழுச்சி இருக்கும்" என்று அந்த நேரத்தில் அவர் தெரிவித்த வார்த்தைகள் ஒரு மதச்சார்பற்ற அரசின் தலைவர் என்பதைவிட ஒரு இந்துத்துவ பிரதமரின் செய்தி போல இருந்ததாக சில அரசியல் விமர்சகர்கள் கூறினர். கட்டுரையாளர் வீர்சாங்வி இந்த நிகழ்வைப் பற்றி எழுதுகையில், "மோதி வரும் வரை எந்தவொரு இந்தியப் பிரதமரும் பிரார்த்தனை செய்வதை இவ்வளவு பெரிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி காட்சியாக மாற்றியதில்லை," என்று கூறினார்.
சாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு இருக்காது என்று இந்திய அரசியலமைப்பு உறுதியளிக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அதாவது சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், சில அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் இந்து, சீக்கியர் அல்லது பௌத்தர்களாக இருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. இந்தச் சட்டம் இந்தியர்களை பாதிக்காது என்று பாஜக அரசு வாதிட்டது.
ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதற்கு எதிராக எச்சரிக்கை குரலை எழுப்பி, இது முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் என்று கூறி வருகின்றனர். உதாரணமாக, திமுக எம்பி கனிமொழி, இது இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கை என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்.
என்.ஆர்.சியின் (NRC) கீழ் அசாமில் உள்ள 19 லட்சம் முஸ்லிம்கள், இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மதம் காரணமாக சிஏஏ-வின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அவர்கள் இந்து/சீக்கிய/ஜைன மதத்திற்கு மாறுவதே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவின் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல் நடப்பதாகக் கூறி அதற்கு எதிராக ஒரு கடுமையான பிரசாரத்தைத் தொடங்கினார். ஷா பானோ ஜீவனாம்ச வழக்கு முஸ்லிம் திருப்திப்படுத்தலுக்கு உதாரணமாகப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
1986ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஷா பானோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு, நீதிமன்றத் தீர்ப்பை பலவீனப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அசல் நீதிமன்றத் தீர்ப்பு ஷரியா சட்டங்களுக்கு எதிரானது என்று நினைத்த முஸ்லிம் மதகுருக்களை காங்கிரஸ் திருப்திப்படுத்தியது.
இத்தகைய திருப்திப்படுத்தல் நடவடிக்கைகள், பின்னர் பெரிய இந்து எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு வழிவகுத்தன என்று பல அறிஞர்களும் எழுத்தாளர்களும் கருதினர்.
எல்.கே. அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தை வழிநடத்தியதன் உச்சகட்டமாக இந்துத்துவ கும்பல்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
வரலாற்றாசிரியர் புருஷோத்தம் அகர்வால், "முஸ்லிம் வாக்கு வங்கியைப் போலவே, இந்துத்துவவாதிகளும் இந்து வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பப் பாடுபட்டனர். அதுதான் அவர்களின் அரசியல் இலக்கு. அவர்கள் அதைச் சாதித்துவிட்டனர். இப்போது இந்து வாக்கு வங்கியை எதிர்க்க யாரும் துணியவில்லை," என்று கூறுகிறார்.
பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மாற்றங்கள்
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல நகரங்கள் மற்றும் தெருக்களின் முஸ்லிம் அல்லது முஸ்லிம் ஒலி கொண்ட பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒளரங்கசீப் சாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல டெல்லியிலுள்ள அக்பர் சாலை மற்றும் ஷாஜகான் சாலையின் பெயர்கள் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் இந்த கோரிக்கைகள் இந்துத்துவா சக்திகளின் போலித்தனத்தைப் பிரதிபலிக்கின்றன என்று பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால் கருதுகிறார்.
"அவர்களுக்கு அக்பர் சாலை அல்லது ஷாஜஹான் சாலை பெரிய பிரச்னை. ஆனால் டெல்லியில் மான் சிங் சாலை உள்ளது. அவர் யார்? அவர் அக்பரின் ராணுவ தளபதி. டெல்லியில் தோடர்மால் சாலையும் பீர்பால் சாலையும் உள்ளது. தோடர்மால் அக்பரின் நிதியமைச்சராக இருந்தார்.
பீர்பாலும் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவர். நீங்கள் அக்பரை அரக்கனாகச் சித்தரிக்க விரும்புகிறீர்கள். ஆனால் பீர்பால், தோடர்மால் மற்றும் மான் சிங்கை அப்படிச் சித்தரிக்க விரும்பவில்லை. அது ஏன்?" என்று அவர் வினவுகிறார்.
பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் முன்பை விட இப்போது இந்து ராஷ்டிரா என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுமாறு மக்களை ஊக்குவிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடச் சாதாரண இந்துக்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது என்கிறார் பேராசிரியர் அகர்வால்.
நாடு முழுவதிலும் இந்து தேசத்திற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தும் இந்துத்துவ அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதி (HJS), இதை ஒப்புக்கொள்கிறது. இந்து நாட்டிற்காகக் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று அந்த அமைப்பு கூறுகிறது.
மகாராஷ்டிராவில் நடந்த சமீபத்திய கூட்டத்தில், அதன் ஆன்மீக அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் செய்தித் தொடர்பாளர் அபய்வர்தக், "இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு தியாகம் செய்யாவிட்டால், இந்துக்களின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்" என்று கூறினார்.
இந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரமேஷ் ஷிண்டே பிபிசியிடம், "இந்திய மக்களுக்கு இந்து ராஷ்டிரம் பற்றிய செய்தியைப் பரப்புவதே எங்களைப் போன்ற அமைப்புகளின் பணி" என்று கூறினார்.

எழுத்தாளர் ஆகார் படேல் இந்து தேசம் பற்றிய தனது சமீபத்திய நூலில், "கட்டமைப்புரீதியாக இந்தியா ஏற்கெனவே ஓர் இந்து ராஷ்டிராவிற்கு வந்துவிட்டது" என்று வாதிடுகிறார்.
2019 தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதில் இருந்து இந்து ராஷ்டிரத்தின் அறிகுறிகள் அதிகமாகத் தெரிகின்றன என்று பேராசிரியர் ஜாஃப்ரெலோட் கூறுகிறார். "2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்துமே மிகவும் தீவிரமாகிவிட்டன. புதிய சட்டங்கள், அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பல செய்யப்பட்டன.
அதனால் அது ஓரளவு திருப்புமுனையாக இருந்தது. இரண்டாவதாக, உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது.
உண்மையான பிரச்னைகள் மிகவும் அழுத்தம் தருவதாக உள்ளன. பொருளாதார நிலைமை உண்மையில் கவலையளிக்கிறது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவை மக்களை மிகவும் பாதித்துள்ளன.
எனவே உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப அடையாள அரசியல் தீவிரமடைகிறது என்பதை நீங்கள் காணலாம். இந்த நிலையான செயல் உத்தி, ஒருமுனைப்படுத்துதலோடு கூடவே தேர்தல் சார்ந்ததும் கூட," என்று அவர் கூறுகிறார்.
ஹிந்து ராஷ்டிராவுக்காக வரலாறு மற்றும் பாடநூல்கள் மாற்றி எழுதப்படுகின்றனவா?
பல ஆண்டுகளாக இந்து வலதுசாரி அமைப்புகள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுப் பாடநூல்கள் எப்போதுமே இடதுசாரி அல்லது மார்க்சிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டதாக புகார் கூறி வருகின்றன. வரலாறு தங்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடமளிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
எவ்வாறாயினும், இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் வலதுசாரிகள் தரும் வரலாற்றின் விளக்கத்தை வெறுக்கிறார்கள். வரலாறு என்ற பெயரில் தாங்கள் கூறுவதை எதிர் கேள்வி இல்லாமல் ஏற்கவேண்டும் என்ற வலதுசாரி வரலாற்றாசிரியர்களின் போக்கு அதிர்ச்சியளிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வர மோதி அரசின் முயற்சி தொடர்ந்து வருகிறது. கோவிந்த் பிரசாத் ஷர்மா, அவர் இந்தியாவின் கல்வி முறையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வை குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.
கடந்த ஆண்டு ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "இன்று கற்பிக்கப்படும் வரலாறு நாம் இங்கு தோற்றோம், அங்கு தோற்றோம் என்று மட்டுமே பேசுகிறது. ஆனால், போர்களின் போது அந்நிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள், வீரம் மிக்க சண்டைகள் பற்றி நாம் விவாதிக்க வேண்டும். போதுமான அளவு அவை முன்னிலைப்படுத்தப்படவில்லை," என்று அவர் கூறினார். அதோடு, வேத கணிதம் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் ஷர்மா குறிப்பிட்டார்.
சமகால இந்திய வரலாற்றின் பேராசிரியரும், 'ஆர்எஸ்எஸ், ஸ்கூல் டெக்ஸ்ட் புக்ஸ் அண்ட் தி மர்டர் ஆஃப் மஹாத்மா காந்தி' என்ற நூலின் இணை ஆசிரியருமான டாக்டர் ஆதித்யா முகர்ஜி, வரலாற்றை மாற்றியமைக்கும் கோட்பாடு உண்மையான ஆபத்து என்று கூறியதாக இந்திய ஊடகங்களில் ஒருமுறை மேற்கோள் காட்டப்பட்டது.
மேலும், "விநாயகர் மற்றும் கர்ணன் உருவாவதற்கு பிளாஸ்டிக் சர்ஜரியும், மரபணு அறிவியலும் உதவியதாக பிரதமர் கூறும் போது, ஒரு மருத்துவர் அதற்கு எதிராக வாதிட முடியுமா? இது வரலாறு அல்ல," என்றார் அவர்.
கல்வி என்பது மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் பல கல்வி வாரியங்களும் வரலாற்று நூல்களை எழுதுவதற்கான குழுக்களும் தேசிய அளவில் உள்ளன. பாஜக ஆட்சியில் இருக்கும் சில மாநிலங்களில் பள்ளி பாடநூல்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சமீப மாதங்களில், பாடநூல் மாற்றங்கள் தொடர்பான சர்ச்சை கர்நாடக பாஜக அரசை உலுக்கி வருகிறது. பள்ளிப் பாடநூல் மறுஆய்வுக் குழுத் தலைவர் சக்ரதீர்த்தா, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி ஹெட்கேவாரின் உரையைச் சேர்த்து பாடநூல்களை காவி நிறமாக்குவதாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் அத்தியாயங்களை நீக்கிவிட்டதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் கபில்சிபல், பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியின் போது குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு மட்டத்தில் பல தசாப்தங்களுக்கு ஒருமுறை மட்டுமே பாடநூல்களில் பெரியளவிலான மாற்றங்கள் நிகழும். என்சிஆர்டி(NCERT), மாநில அரசுகளுக்கு மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். அதை மாநில அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். 2019ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புக்கான வரலாற்று நூல்கள் மாற்றப்பட்டன.

இந்து நாட்டில் முஸ்லிம்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் என்ன உரிமைகள்?
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பிரார்த்தனை செய்ய முடியுமா? வழிபாட்டுத் தலங்களைக் கட்ட முடியுமா? அவர்கள் தங்கள் மத நம்பிக்கையைத் தொடர்ந்து பரப்பவும் பின்பற்றவும் முடியுமா?
இந்து ராஷ்டிராவில் சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், சிறுபான்மையினராக இருக்க மாட்டார்கள் என்று சங்பரிவார் தலைவர்கள் எப்போதும் கூறி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட டெல்லியின் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, இப்போது ஹிந்து இகோசிஸ்டம் என்ற ஆன்லைன் நெட்வொர்க்கை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.
இந்து ராஷ்டிராவில் சிறுபான்மையினர் இருக்க மாட்டார்கள் என்கிறார் அவர். "இந்துக்களுக்குப் பிறகு முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக இருப்பார்கள்," என்று கூறுகிறார் மிஸ்ரா. இந்து பெரும்பான்மை ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளிக்க விரும்புகிறார்.
"இந்தியா பெரும்பான்மையான இந்துக்களால் ஆளப்படும் வரை இந்தியா மதச்சார்பற்றதாக இருக்கும் மற்றும் மத சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கும்," என்று அவர் கூறுகிறார்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மதங்களை வலுக்கட்டாயமாகவோ, வேலை மற்றும் பண ஆசை காட்டி பரப்புவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிற இந்துத்துவ தலைவர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஒன்பது இந்திய மாநிலங்களாவது மதமாற்ற தடுப்புச் சட்டங்களை அமல் செய்துள்ளன.
கட்டாயப்படுத்தியோ, பணம் மற்றும் வேலைக்கு ஆசை காட்டியோ செய்யப்படும் மத மாற்றங்கள் சட்டவிரோதமானவை என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
சாவர்க்கரின் இந்துத்துவா கருத்து பாரதவர்ஷத்திற்கு வெளியில் இருந்து வந்த மூதாதையர்களை விலக்கியது. வெளிப்படையாக, இது இந்தியாவின் இரண்டு மிக முக்கியமான சிறுபான்மையினரான முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் நீக்குகிறது.
சாவர்க்கரின் இந்து ராஷ்டிராவில் அவர்களின் இடம் என்னவாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதிக உரிமைகளை எதிர்பார்க்காமல் இந்தியாவில் வாழக்கூடிய ஒரு வகையான இரண்டாம் தர குடியுரிமையை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்க முடியும்.
ஆனால் ஆர்எஸ்எஸ் சமீபகாலமாக முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் கவலைப்படத் தேவையில்லை என்று நம்ப வைக்க முயன்று வருகிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம்களின் முன்னோர்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான பாரம்பர்யம் உள்ளது.
எனவே இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்று அடிக்கடி கூறி வருகிறார்.
தற்போதுள்ள ஆர்.எஸ்.எஸ், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தன் பக்கம் ஈர்க்க வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸில் முஸ்லிம்களை ஈர்க்கும் பணியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இந்திரேஷ் குமார்.
பிபிசி அவரைத் தொடர்புகொள்ள முயன்றது .ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், முஸ்லிம்கள், தாங்கள் இந்து பெரும்பான்மை ஆட்சியின் கீழ் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள். தாங்கள் அரசியல் தனிமை மற்றும் தேர்தல் பாகுபாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்துத்துவ தலைவர்கள் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் அவர்களின் அச்சத்தைக் கூட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினரும் பாஜக தலைவருமான வினய்கட்டியார் ஒருமுறை, "முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. மக்கள் தொகை அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது.
எனவே அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள்? முஸ்லிம்களுக்கு அவர்களின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ செல்ல வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் எந்த வேலையும் இல்லை," என்று கூறியிருந்தார்.
முஸ்லிம்களிடையே நீங்கள் இருக்கும்போது, இந்து ராஷ்டிராவில் வாழ்வது பற்றி அவர்களுக்குள் தவிர்க்க முடியாத உணர்வு ஏற்படுகிறது என்பதை உணரமுடிகிறது.
15ஆம் நூற்றாண்டின் ஸ்பெயினில் 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் கத்தோலிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டபோது, நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். மதம் மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால், 'கர்வாப்சி' (மறு மதமாற்றம்) ஏற்கெனவே நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் அழித்தல் சாத்தியம் என்று பேராசிரியர் ஜாஃப்ரெலோட் கருதவில்லை. "முஸ்லிம்களை அழித்தொழிப்பது வெளிப்படையாக யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை. இது நடைமுறையில் கற்பனை செய்யக் கூடிய ஒன்றல்ல.
எனவே, முஸ்லிம்களை மீண்டும் மதமாற்றம் செய்வதன் மூலமோ அல்லது பின்னுக்குத் தள்ளுவதன் மூலமோ அவர்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக ஆக்குவதுதான் நடைமுறை இலக்கு. சில நகரங்களில் நிச்சயமாக நடக்கிறது," என்கிறார் அவர்.
பொதுவெளியில் முஸ்லிம்கள் தொடர்ந்து முஸ்லிமாக இருந்தால் அல்லது கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகத் தொடர்ந்தால் அவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்வார்கள் என்று பிரெஞ்சு பேராசிரியர் வாதிடுகிறார். "எனவே, அவர்கள் விட்டுக் கொடுத்தால் பயப்பட ஒன்றுமில்லை. உங்கள் அடையாளத்தை விட்டுவிடுங்கள், முஸ்லிம்கள் பொதுவில் செய்யும் செயல்களை விட்டுவிடுங்கள். அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக இருக்க வேண்டும்; அவர்கள் கல்வி மற்றும் வேலைகளில் இந்துக்களுடன் போட்டியிட முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்து ராஷ்டிராவை நிறுவுவதன் மூலம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், இந்த பிரசாரங்கள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் அவர்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறீர்கள். அவர்கள் தங்கள் வீட்டைவிட்டு, சுற்றுப்புறங்களை விட்டு வெளியேற அஞ்சுவார்கள். கல்வி, வேலை சந்தை, வீட்டுச் சந்தை ஆகியவற்றைக் கைவிடுவார்கள். அவர்கள் உண்மையான இந்து ராஜ்ஜியத்தில் இருப்பார்கள். அதாவது கண்ணுக்குத் தெரியாத மக்கள்தொகையாக இருப்பார்கள். அந்த நாட்டில் இருக்கும் கண்ணுக்குத்தெரியும் மக்கள்தொகை பெரும்பான்மை இந்துக்களாக மட்டுமே இருப்பார்கள்," என்று பேராசிரியர் ஜாஃப்ரெலோட் மேலும் கூறுகிறார்.
ஆனால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் தேவை என்றும் அவர் கூறுகிறார். "சங்பரிவாருக்கு 'மற்றவர்' தேவை. அவர் (முஸ்லிம்) தோற்றவராக இருந்தாலும்கூட, அவர் பெரும்பான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காண்பிக்க வேண்டும்."
பேராசிரியர் அகர்வால் இதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் இந்துத்துவ சக்திகளுக்கு 'அடிப்படைவாத முஸ்லிம் தலைவர்கள்' என்று அழைக்கப்படுபவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பது போல் தோன்றலாம். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால், முஸ்லிம் தலைவர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
சங்பரிவார் இந்து பெரும்பான்மை ஆட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்ற கருத்தை கபில் மிஸ்ரா நிராகரிக்கிறார். இந்து பெரும்பான்மையுள்ள இந்தியா மிகவும் சகிப்புத்தன்மை மற்றும் மதச்சார்பற்றதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
"இந்து பெரும்பான்மை இல்லாத பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை பாருங்கள். அவை சகிப்புத்தன்மை கொண்டதாக, மதச்சார்பற்றவையாக இல்லை. எனவே, பெரும்பான்மையான இந்துக்களுக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்," என்கிறார் அவர்.
எப்போது இந்து ராஷ்டிரம் உருவாகும்
இந்து ராஷ்டிரத்திற்கான காலக்கெடுவில் தெளிவு இல்லை. ஆனால் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் 'நாம் மாற்றத்தின் பாதையில் இருக்கிறோம்' என்ற உணர்வு இருக்கிறது. உத்தர பிரதேசம் ஏற்கெனவே ஒரு சிறந்த மாநிலமாக மாறிவிட்டது. இந்து ராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சாளரம் அது என்று பாஜகவின் கபில் மிஸ்ரா கூறுகிறார். "சமய சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் மத சமத்துவத்தின் முன்மாதிரியாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. ராமநவமியின் போது பல்வேறு இடங்களில் கற்கள் வீசப்பட்டபோது, உ.பி.யில் மலர்கள் பொழிந்தன. உத்திர பிரதேசம் முழு நாட்டிற்கும் சிறந்த ஆட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Hindustan Times
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியா என்றென்றும் இந்து நாடு என்றும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பொதுவான மூதாதையர்களின் காரணமாக இந்தியாவில் பிறக்கும் எவரும் இயற்கையாகவே இந்துக்கள் என்றும் எப்போதும் கூறி வருகிறார்.
ஆனால், இந்தியாவை இந்து நாடு என்று அழைப்பதற்கு முன் இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதை இந்துத்துவ தலைவர்கள் நன்கு அறிவார்கள். முடிக்கப்படாத பணிகளில் பின்வருவன அடங்கும்: இந்து ஒற்றுமை மற்றும் சாதி அமைப்பின் முடிவு; முஸ்லிம்கள் போன்ற சமூகங்களுக்கு வழங்கப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வருவது; காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்களுக்கு முடிவு; முஸ்லிம் திருப்திப்படுத்தலின் முடிவு; இந்துத்துவாவும் இந்துவும் எதிரெதிர் கருத்துகள் என்ற 'தவறான கருத்தை' நீக்குவது.
ரமேஷ் ஷிண்டே இந்த நிறைவேறாத இலக்குகளை இப்படி வர்ணிக்கிறார். "மதச்சார்பின்மை என்ற பெயரில் முஸ்லிம் திருதிப்படுத்தலை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். சிறுபான்மை அந்தஸ்துக்கு ஒரு முடிவு இருக்க வேண்டும். இந்து தேசத்தில் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை இருக்காது. இந்தியாவை இந்து நாடாக ஆக்குவதற்கு முன் இவை அனைத்தும் அவசியம். இதுவொரு செயல்முறை. இதை ஒரே இரவில் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.
ஷிகாகோவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் தாம்லே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்-இன் எழுச்சியைப் பின்பற்றி, அந்த அமைப்பைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியவர். "ஆர்எஸ்எஸ் பரிணாம மாற்றங்களைக் கொண்டு வர விரும்புகிறது. அது எந்த கருத்துப் போரும் இல்லாமல் அதை அடைய விரும்புகிறது," என்று பிபிசியிடம் கூறினார். பல தசாப்தங்களாக பல ஆர்எஸ்எஸ் தலைவர்களை தாம்லே சந்தித்துள்ளார். மேலும் அவர்களுடனான பேச்சுக்களின் அடிப்படையில் இதை அவர் தெரிவித்தார்.
புரிசங்கராச்சாரியார், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, இந்தியா இன்னும் மூன்றரை ஆண்டுகளில் இந்து நாடாக மாறும் என்று கடந்த ஆண்டு கணித்திருந்தார். 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா ஓர் இந்து நாடாக மாறும் என்று ஒரு முனிவர் கணித்ததாகத் தனது இணையதளத்தில் சனாதன் சன்ஸ்தா கூறியுள்ளது.
2023-25க்குள் இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்படும் என்று கூறுவது கடினம் என்று பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால் கூறுகிறார். ஆனால் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார் அவர்.
"இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் தாராளவாத சக்திகள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, 2025-க்குப் பிறகு அது நடந்தாலும் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். நான் சொல்ல விரும்புவது என்னவெனில், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், காந்தி அல்லது நேருவின் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள் உடனடியாகச் செயல்படவேண்டும் என்பதுதான். அவர்கள் சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகளை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
"அடிமட்டத்தில் சமூகத்தை மாற்றி, இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று சங்பரிவார் தரப்பில் ஒரு திட்டவட்டமான விருப்பம் உள்ளது," என்று பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் கருதுகிறார்.
அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, நிறைய சாதித்துள்ளனர் என்று அவர் கூறினார். ஓர் இந்து தேசத்திற்கான காலக்கெடுவை அவரால் கணிக்க முடியவில்லை, ஆனால் உண்மையான இந்து ராஷ்டிரா என்பது அவர்களால் (சங்கபரிவார்) சாதிக்கக்கூடிய ஒன்று மற்றும் அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
சில இந்துத்துவ தலைவர்கள் இந்தியாவை உடனடியாக இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை முறையாக இந்து நாடாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மற்றவர்கள் நம்புகிறார்கள். மதச்சார்பற்ற நாடு என்ற நிலையில் இருந்து இந்து தேசமாக மாறும் பாதையில் இந்தியா இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்.
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் வராது. இது இயற்கையாக நடக்கும் போதிலும், அது அதிகாரபூர்வமாக நடக்காமல் போகலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸை பொருத்தவரை இந்து ராஷ்டிரா என்பது மிகப்பெரும் இந்து கலாசார ஆதிக்கம். ஆனால் இந்து ராஷ்டிரா என்பது இந்தியாவின் வரலாறு மற்றும் கலாசாரத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல. எனவே முழு யோசனையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அகர்வால் வாதிடுகிறார்.
இந்து நாட்டிற்கான முன்னோக்கிய அணிவகுப்பு தீவிரம் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமூகத்தின் பெரும் பகுதியினர் அதை ஆதரிப்பதாகவோ அல்லது அமைதியாக இருப்பதைப் போலவோ தோன்றுகிறது.
இந்தியா அதிகாரபூர்வமாக சமய சார்பற்ற நாடு. அதிகாரபூர்வ மதம் இல்லாத நாடு மற்றும் எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் ஒரு நாடு. ஆனால் இந்தியாவின் 130 கோடி மக்களின் வாழ்வில் மதம் ஆதிக்கம் செலுத்துகிறது. 2024-இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இது மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













