ஆடம் ஹாரி: விமானியாகும் கனவை நனவாக்க போராடும் திருநம்பி

ஆடம் ஹேரி

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி நியூஸ்

முதல் முதலாக விமானத்தில் காலடி வைத்தபோது ஆடம் ஹேரிக்கு வயது 11தான். அந்த விமானப்பயண அனுபவத்தின் விளைவாக, அவருக்குள் விமானியாக வேண்டும் என்ற கனவு முளைத்தது.

கேரளாவைச் சேர்ந்த அந்த 11 வயது சிறுவனின் கனவு நனவாக, அவரது குடும்பமும் அப்போது பக்கபலமாக நின்றது. தென்னாப்ரிக்காவில் உள்ள விமானப்பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மாதந்தோறும் பணம் அனுப்பி வந்த குடும்பம், ஒரு புள்ளியில் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. காரணம், படிப்பின் பாதியில் அவர் ஒரு மாற்றுப்பாலினத்தவராக மாறினார்.

இதுகுறித்து பேசியபோது, "நான் எப்படி இருக்கிறேனோ என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள என் குடும்பம் தயாராக இல்லை" என்கிறார் ஆடம்.

இந்தியாவில் 20 லட்சம் மாற்றுப்பாலின மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகம் என்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எல்லா பாலினத்தவரையும் போலவே இவர்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு என்று 2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் விதி ஒன்றை பிறப்பித்தது.

மாற்றுப்பாலினத்தவர்

பட மூலாதாரம், Getty Images

ஆனாலும், கல்வி, மருத்துவம், வேலை என எதைப் பெறுவதிலும் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என அவர்களது இடர்பாடுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. சமூகத்தின் பழமைவாத எண்ணங்களாலும், தவறான புரிதல்களாலும் பலர் வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகின்றனர்.

குடும்ப உதவியுடன் நனவாகத் தொடங்கிய ஆடமின் விமானி கனவும் இப்படித்தான் இடைநிற்றலை நோக்கி பயணித்தது. தென்னாப்ரிக்காவில் படித்தபோது, தனிநபர் விமானிக்கான உரிமத்தை (private pilot licence) அவர் பெற்றிருந்த போதும், குடும்ப உதவி இல்லாமல் படிப்பை முடிக்க முடியாத நிலை உருவானது.

கைகொடுத்த கேரள அரசு

திரும்பி தன் வீட்டுக்கே வந்த ஆடம், கேரள அரசின் நிதியுதவியுடன் ஒரு உள்ளூர் அகாடமியில் சேர்ந்து வணிக விமானி உரிமத்தை பெற்றார்.

அதற்குபிறகும் விமானிக் கனவு நனவாகவில்லை. பாலின மாறுதலுக்காக அவர் ஹார்மோன் தெரபி சிகிச்சையில் இருந்ததால், பறப்பதற்கு தகுதியற்றவர் என்று மருத்துவ சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் அறிவித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனம் இவரிடம் மேற்கொண்ட மருத்துவ சோதனை அறிக்கையின்படி, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் காலம் முழுக்க அவர் ஜெண்டர் டிஸ்ஃபோரியாவால் கஷ்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அதாவது, பாலின அடையாளத்துக்கும் பிறப்பின்போதான பாலினத்துக்கும் இடையிலான பொருத்தமின்மையால் வரும் மனஅழுத்தம் மற்றும் கோபத்தை மருத்துவ உலகில் இந்த பெயரால் குறிக்கின்றனர்.

இந்த மருந்துகளை எடுத்துகொள்வதை நிறுத்திய பிறகே இவர் மீண்டும் சோதனைக்கான கோரிக்கையை வைக்க முடியும் என்று இவருக்கு சொல்லப்பட்டது. இதன்பிறகு சில மாதங்களுக்கு இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டு தனக்கு சொல்லப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்த மருந்துகளை இவர், வாழ் நாள் முழுக்க உட்கொள்ள வேண்டும் என்று அதற்கு பிறகுதான் இவரது ஹார்மோன் நிபுணர் (endocrinologist) கூறியுள்ளார்.

இதனை "தன் பாலின அடையாளத்துக்கும், கனவுக்கும் இடையில் ஏதாவதொன்றை நான் தேர்வு செய்ய வேண்டிய நிலை" என்கிறார் ஆடம்.

களமிறங்கிய சமூகநலத்துறை

இது தொடர்பாக பிபிசி எழுப்பிய கேவிகளுக்கு, விமான போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநர் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால், ஆடமின் குற்றச்சாட்டுகளில் பலவற்றுக்கான மறுப்பை ஒரு செய்தி ஊடகத்தில் அத்துறை தெரிவித்துள்ளது.

"இந்த உலகம் முழுக்க ஏராளமான விமானிகள் தங்கள் சொந்த பாலின அடையாளத்துடன் பணியாற்றி வருகின்றனர். நான் தென்னாப்பிரிக்காவின் விமானப்போக்குவரத்துறையின் இரண்டாம் நிலை மருத்துச் சான்றும் பெற்றுள்ளேன். என்னை என் உடல் ரீதியிலான மாறுபாட்டிலிருந்தோ என் மருத்துவ சிகிச்சையிலிருந்தோ அவர்கள் தடுக்கவில்லை" என்கிறார் ஆடம்.

ஆடம் ஹேரி

பட மூலாதாரம், AFP

இந்த செய்தி, ஊடகங்களில் வெளியானபிறகு, இந்திய அரசின் சமூகநலத்துறை விமானப்போக்குவரத்து துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், விமானத்துறையின் நடவடிக்கைகள் "ஒடுக்குமுறையானது" என்று குறிப்பிட்டதோடு மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமையை மீறும் செயல் என்றும் தெரிவித்தது.

இப்போது, ஆடமை மாற்றுப்பாலினத்தவர் என்று பெயருடன் பதிவு செய்து கொண்டபிறகு மீண்டும் மருத்துவ சோதனைக்கு பதிவு செய்யுமாறு விமானப் போக்குவரத்துத்துறை அழைத்துள்ளது.

மேலும், ஹார்மோன் சோதனை உள்ளிட்ட சில கூடுதல் சோதனைகளுக்கும் தயாராக வரும்படி தெரிவித்துள்ளதோடு, அவரது ஹார்மோன் மருத்துவர் மற்றும் உளவியல் மருத்துவரையும் அந்த சோதனையின்போது அழைத்துள்ளது.

இந்தியாவின் முதல் நபர்

இந்தியாவில் மாற்றுப்பாலின விமானிகளுக்கென்று தனித்த கொள்கை வரைவுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒருவேளை, ஆடம் இந்த சோதனையில் வென்று விமானியானால் இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின விமானியாக அவர் இருப்பார்.

மாற்றுப்பாலின விமானிகளை அங்கீகரிப்பதற்கான, அமெரிக்க கூட்டமைப்பின் விமான நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி ஆடமின் தேர்வுமுறை நடைபெறும் என்று இந்திய விமானப்போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தன் கனவு நனவாகப்போகும் இந்த காலகட்டத்தில் அவர் செய்து வரும் பிற வேலைகளுக்கெல்லாம் அவர் விடை கொடுக்கலாம். உள்ளுர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வெலை செய்து வரும் அவர், கல்லூரிகளில் பாலின முக்கியத்துவம் குறித்தும் பேசி வருகிறார். இதற்கிடையில் உணவு டெலிவரி செய்யும் ஆப்களிலும் வேலை செய்துவருகிறார்.

ஆடம் ஹாரியின் இந்த போராட்டத்திற்கு ஆசிரியர்கள் நண்பர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் பலர், அவரை பள்ளிக்காலத்தில் கிண்டல் செய்தவர்கள். அவரது குடும்பம் இன்னும் அவரிடம் பேசக்கூட இல்லை.

"நான் என் குடும்பத்தை குறை சொல்லி ஒன்றும் ஆவதில்லை. பாலினம் குறித்தோ, பாலியல் தேர்வு குறித்தோ வரும்போது, அவற்றை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதற்கான போதிய புரிதல் இந்த சமூகத்தில் இல்லை. என் உறவினர்களால் அவர்கள் அவமதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் என்னுடைய இந்த மாறுதலை நிறுத்துவதற்காக அழுத்தம் தரப்பட்டிருக்கும்" என்கிறார் ஆடம்.

அத்துடன், "நான் அவர்களது நினைவாகவே இருக்கிறேன். அதேவேளை, எனக்கு மாற்றுப்பாலின சமூகத்திலும் இப்போது ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது" என்கிறார் ஆடம்.

காணொளிக் குறிப்பு, LGBTQ+ - சென்னையை திரும்பிப் பார்க்க வைத்த சுயமரியாதைப் பேரணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :