முள்ளம்பன்றி தாக்கிய புலிக்குட்டி சிகிச்சைக்குப் பின் பாதுகாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிப்பு

பட மூலாதாரம், TN Forest Department
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முள்ளம்பன்றியால் தாக்கப்பட்டு வனத் துறையால் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக வேட்டையாட புலிக்குப் பயிற்சி அளிப்பதே தங்கள் இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை வனச்சரகத்தில் கடந்த ஆண்டு, பிறந்து ஐந்து மாதமே ஆன புலிக் குட்டி ஒன்று முள்ளம் பன்றியால் தாக்கப்பட்டு மோசமான காயங்களுடன் வனத்துறையால் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த புலிக் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டுவந்தது. மீண்டும் காட்டுக்குள் விடும் வகையில் புலிக் குட்டியைத் தயாரிப்பதற்காக அதற்கு இயற்கையான உறைவிடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் முறையாக...
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட புலி குட்டியை மீண்டும் வனத்துக்குள் செலுத்த இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
தற்போது 14 மாதங்களான புலிக்குட்டி அதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டு வந்த உறைவிடத்தில் இன்று ஜூன் 5ம் தேதி விடுவிக்கப்பட்டது. புலியின் செயல்பாடுகளை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 10,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த உறைவிடத்தில் குகை, சிறிய அளவிலான குளம் போன்றவை அமைக்கப்பட்டு புலியின் நடவடிக்கைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. "புலிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுத்து காட்டு வாழ்க்கைக்கு தயார்படுத்துவதே எதிர்கால திட்டம்" என்றார் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இயக்குனர் ராமசுப்ரமணியன்.
'புலிகளுக்கு வேட்டையாட பயிற்சி வேண்டுமா?'
புலிகளுக்கு இயல்பிலேயே வேட்டையாடும் திறன் இருக்காதா? புலிக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுத் தரவேண்டுமா? யானைகள் வழிதவறி விளைநிலங்களுக்கு போவது போன்ற சம்பவங்களின்போது பிடிபடும் யானைகள் காலம் முழுவதும் மனிதர்களின் பிடியிலேயே வாழ நேர்கின்றதே, புலிக்கு மட்டும் ஏன் இந்த மாறுபட்ட அணுகுமுறை? முள்ளம்பன்றி தாக்கினால் புலிகளுக்கு என்ன ஆகும்? என்பது போன்ற கேள்விகளை வன உயிர் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் முன்வைத்தோம்.
அதற்குப் பதில் அளித்த அவர்,

பட மூலாதாரம், Ramakrishnan
"யானை ஒரு சமூக விலங்கு (social animal). அதனால் யானை குழுவாக வாழ்கின்ற போது தான் அதற்கு தேவையான திறன்களை கற்றுக் கொள்ளும். அதே சமயம் புலிகள் தனித்து வாழும் விலங்கு (solitary animal). வேட்டையாடுவது உட்பட வன வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறன்களையும் புலிகள் பரீட்சார்த்த முறையில் தான் கற்றுக் கொள்ளும். அவ்வாறு இளம் வயது புலி குட்டிகள் அதற்கு தேவையான இரையை தேர்ந்தெடுத்து வேட்டையாடும். இயல்பாக சிறிய மான்களைத் தான் புலிகள் வேட்டையாடும். ஆனால் இந்த புலி குட்டி முள்ளம் பன்றியை குறி வைத்ததால் காயப்பட்டுள்ளது. முள்ளம் பன்றியால் காயப்பட்டு வயது வந்த புலிகள் கூட இறந்துள்ளன. புலிகள் தாக்கும் தன்மை கொண்ட விலங்கு. அதே சமயம் முள்ளம்பன்றி மற்ற விலங்குகளை தாக்காமல் தற்காத்துக் கொள்ளும் விலங்கு. அவ்வாறு தற்காப்பின் போது முள்ளம் பன்றியின் கூர்மையான முட்களால் புலிகள் காயப்படுவது இயல்பு," என்றார்.

பட மூலாதாரம், TN Forest Dept.
மேலும் இது குறித்துப் பேசிய அவர், "யானைகள் அதன் கூட்டத்திலிருந்து தனக்கான திறன்களை கற்றுக் கொள்ளும். ஆனால் புலிகளுக்கு உள்ளார்ந்த திறன்கள் உண்டு (instinctive behaviour). வீடுகளில் வளர்த்தப்படும் பூனைகள் கூட நாம் தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்தால் அதன் மீது ஈடுபாடு கொள்ளும். பூனை குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து விலங்குகளுக்கும் இந்த குணாதசியம் உண்டு. மிக இளம் வயதிலே காயப்பட்டதால் அதனால் தன் திறன்களை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தடைபட்டது. வன உயிர் ஆய்வுகளில் விலங்குகளின் நடத்தை பற்றியும் ஆய்வு செய்யப்படும். புலிகள் Trial and error முறையில் வேட்டையாடக் கற்று திறன்களை வளர்த்துக் கொள்ளும். இத்தகைய புலிகளை மொத்தமாக அடைத்து வைப்பதும் தவறு. உடனடியாக விடுவிப்பதும் தவறு. தற்போது செய்யப்படுவது நெறிமுறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழி.இது வரவேற்கத்தக்க முடிவு. தமிழ்நாட்டில் இது தான் முதல்முறை என்றாலும் வட இந்தியாவில் பல இடங்களில் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது. புலிக்காக அமைக்கப்பட்டுள்ள உறைவிடத்தில் அதற்கான இரை விடுவிக்கப்பட்டு வேட்டையாடுவதற்கான சூழல் உருவாக்கப்படும். தேவை வருகின்ற போது தான் புலி அதன் திறன்களைப் பயன்படுத்தும். இங்கு சில மாதங்கள் இருந்த பிறகு புலியின் வேட்டையாடும் திறன் மேம்பட்டுள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டு வனத்துக்குள் விடுவிக்கப்படும். இந்த புலியை வனத்துக்குள் விடுவிக்கும் போது ரேடியோ காலர் ஒன்றை அதன் மீது மாட்டிவிட்டு விடுவிப்பது அதனைத் தொடர்ந்து கண்காணிக்க உதவும்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













