சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக மாற்றும் தி.மு.க - தமிழ்நாடு அரசின் மசோதாவால் என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சுகாதார உரிமைக்கான மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. `கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்பில் பணியாளர் பற்றாக்குறை உள்பட ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இவற்றைக் களையாமல் சுகாதார உரிமையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது வெறும் வாசகமாக மாறிவிடக் கூடாது' என்கின்றனர், மருத்துவ வல்லுநர்கள். தி.மு.க அரசின் முயற்சிகள், இந்தியாவுக்கு முன்னோடித் திட்டமாக மாறுமா?
சுகாதாரம் - அடிப்படை உரிமை
`சுகாதாரம் - அடிப்படை உரிமை' என்ற மசோதாவை சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டமானது தாய்லாந்தில் கடந்த 2002 முதல் நடைமுறையில் இருக்கும் திட்டத்தைத் தழுவி கொண்டு வரப்பட உள்ளது. இதேபோன்ற சட்டம் அசாமில் இயற்றப்பட்டும் நடைமுறைப்படுத்தாத நிலையையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், ` கொரோனா பெருந்தொற்று என்பது ஒவ்வொருவரின் பொருளாதார பிரச்னையாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் சுகாதாரக் கட்டமைப்பு என்பது சிறந்தவையாக இருந்தாலும் அனைவருக்கும் சுகாதாரம் என்பது தொலைதூரக் கனவாகவே உள்ளது. அதனால்தான் தேசிய சுகாதாரக் கொள்கை 2017ஐ அரசு கொண்டு வந்தது. அந்தக் கொள்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை சுகாதாரத்துறைக்கு ஒதுக்குவது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் 15 ஆவது நிதிக்குழுவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவானது, சுகாதார வசதிகளுக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே கடிதத்தின் நகலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் ரவிக்குமார் எம்.பி அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக தனிநபர் மசோதாவையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

வரவேற்கத்தக்கதுதான்.. ஆனால்?
இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத சூழலில், சுகாதாரத்தை அடிப்படை உரிமையாகக் கொண்டு வரும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ``சுகாதார உரிமைக்கான மசோதாவை வரவேற்கிறோம். இதில் மருத்துவப் பணியாளர்களின் உரிமைகளும் சிறிய மருத்துவ நிறுவனங்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதேபோன்ற ஒரு மசோதாவை மத்திய அரசும் கொண்டு வர வேண்டும்' என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
அதேநேரம், மசோதாவை செயல்பாட்டு வடிவத்துக்குள் கொண்டு வருவது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி. `` மத்திய அரசு கடந்த 2002 ஆம் ஆண்டு வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது கல்வியை அடிப்படை உரிமையாக கொண்டு வந்தது. உச்சநீதிமன்றமும், பஞ்சாப் அரசு எதிர் மொகீந்தர் சிங் சௌலா வழக்கில், `சுகாதாரம் அடிப்படை உரிமை' எனத் தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளது. அந்தவகையில், சுகாதாரத்தை அடிப்படை உரிமை எனக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது'' என்கிறார்.
`` அதேநேரம், இத்திட்டத்தை பற்றி பேசுவதற்கு முன்னதாக, தமிழ்நாடு அரசின் பொருளாதார நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினரான ஜீன் ட்ரீஸ் முன்வைத்த இரண்டு கருத்துகள் முக்கியமானவை. அவர், `சுகாதாரத்துக்கு தமிழ்நாடு அரசு மாநில மொத்த வளர்ச்சியில் (GDP) வெறும் 0.6 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது. இதனைக் கூட்ட வேண்டும்' என்கிறார். அடுத்ததாக, `தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மாநில அரசின் முக்கிய செயல்பாடுகளை தாமாக முன்வந்து பொதுமக்கள் பார்வைக்கு முக்கிய புள்ளிவிபரங்களை பிரிவு 4(2)கீழ் வெளியிட வேண்டும் என இருந்தும் அதை செய்ய முன்வராமல் இருப்பது சரியல்ல' எனவும் தெரிவித்துள்ளார். எனவே, போதிய நிதியை ஒதுக்காமல் சுகாதாரம்-அடிப்படை உரிமை எனப் பேசி பயனில்லை'' என்கிறார் புகழேந்தி.
பத்தாயிரம் பேருக்கு ஒரு செவிலியர்
தொடர்ந்து பேசுகையில், `` இந்த வருடம் சுகாதாரத்துறைக்கு 18,931 கோடி ரூபாயை சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு ஒதுக்கினாலும் அது போதுமானதல்ல என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்தத் தொகையானது, சென்ற வருடத்தைவிட 20 சதவீதம் அதிகம். இதில், நோய் தடுப்புக்கு வெறும் 495 கோடி ரூபாய் (2.6%)மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சுகாதாரப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கொரோனா பேரிடரின்போது இதை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு சுகாதாரப் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது முக்கிய காரணம்'' என்கிறார்.
மேலும், ``தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் 5000 பேருக்கு ஒரு செவிலியரும் நகர்ப்புறத்தில் 10000 பேருக்கு ஒரு செவிலியரும் உள்ளனர். மொத்தத்தில் 12,000 செவிலியர்கள் உள்ளனர். அதேநேரம், சுகாதாரப் பார்வையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 4000 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதாரத்துக்கென 70 சதவீத நிதி ஒதுக்கிடு செய்தாலும், அதில் 30 சதவீதம் மட்டுமே பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கான பணமும் அதில் அடங்கும். இதனை அதிகரிக்க வேண்டும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வெறும் வாசகமாக மாறிவிடக் கூடாது
``தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஒவ்வோர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பிரிவு இருக்க வேண்டும் என்பது தேவையாக இருந்தும் அது இன்னமும் நிறைவேறவில்லை'' எனக் குறிப்பிடும் மருத்துவர் புகழேந்தி, `` சுகாதாரத்துறை பணியாளர்கள் பணி நிரந்தரமின்றி தற்காலிக பணியாளர்களாக இருப்பது களையப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க DIC (Drop In Centre) மையங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டும், அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடும் தேவையாக உள்ளநிலையில் அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்தின் தரம் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கிராமங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களின் இருப்பை (பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை) அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து மக்களின் பங்களிப்போடு குறைகள் களையப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பரிசோதனைக் கருவிகள் அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மேற்கொள்ளாமல் `சுகாதாரம்-அடிப்படை உரிமை' என்பது வெறும் வாசகமாக நின்றுவிடும்'' என்கிறார்.
நான்கு நிலைகளில் கண்காணிப்பு?
இதையடுத்து பிபிசி தமிழிடம் பேசிய பொது சுகாதாரத்துறை வல்லுநர் மருத்துவர் குழந்தைசாமி, ``சட்ட மசோதாவை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. அதேநேரம், சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு என்பது இருக்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகளை மாவட்டம்தோறும் உறுதிப்படுத்த வேண்டும். இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வருவதை இன்புட், பிராசஸ், அவுட்புட், இம்பேக்ட் (Impact) என நான்கு நிலைகளில் கண்காணிக்க வேண்டும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` தமிழ்நாட்டில் இன்னமும் 20,000 மக்களுக்கு ஒரு கிராம செவிலியர் இருக்கக் கூடிய கிராமங்களும் உள்ளன. ஆண் களப் பணியாளர்களே இல்லை. கிராம சுகாதார செவிலியர்கள் மட்டும்தான் உள்ளனர். அவர்களும் தலா பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கவனித்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு செவிலியர் இருக்கிறாரா, கிராமப்புறங்களில் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு செவிலியர் இருக்கிறாரா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மக்கள் வந்து செல்லும் வகையில் அரை மணிநேர பயணத்தில் ஓர் ஆரம்ப சுகாதார மையம் உள்ளதா என நிலவரத்தை பார்க்க வேண்டும். தாய், சேய் மரணம் உள்பட அனைத்தையும் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் மிகுந்த பலன் உள்ளதாக இந்தச் சட்டம் அமையும்'' என்கிறார்.
மசோதா - எப்போது தயாராகும்?
தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ள மசோதா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், `` மக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அத்தியாவசியமான சேவை கிடைக்கும் என்பதை உறுதி செய்வதற்கான திட்டம் இது. இதனை எந்த அடிப்படையில் கொடுக்க வேண்டும், இதற்கான நிதி ஆதாரம் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கான முதல்கூட்டம் நடந்துள்ளது. இன்னும் நான்கைந்து கூட்டங்கள் சென்ற பிறகுதான் மசோதாவாக தயாராகும்'' என்கிறார்.
``இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்தச் சட்டம் அரசாணை வடிவத்தில் இருந்தாலும் முழுமையான செயல்பாட்டுக்குள் வரவில்லை. இதனை அடிப்படை உரிமையாக எப்படி செயல்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகிறோம். மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்லும்போது தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்வதுதான் மிகப் பெரிய இலக்காக இருக்கப் போகிறது.
தற்போதுள்ள சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தவிர, இதனைக் கொண்டு வருவது என்பது சவாலான ஒன்றுதான். நமக்கு இருப்பதே போதும் எனத் திருப்தியடையாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான பாதையே நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், மக்களுக்கு பெரியளவில் நன்மை கிடைக்கும்'' என்கிறார்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- கொத்தமல்லி காதல்: இந்திய கலைஞரின் முயற்சிக்கு பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












