தமிழக அரசின் சிறந்த விவசாயி ஆக வேண்டுமா? இதோ அந்த வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் சார்பில் சிறந்த விவசாயிகள், விவசாய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பரிசைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாவது ஆண்டாக தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய சாகுபடி முறையில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு அரசு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி, 2020 -21ம் ஆண்டில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதுகள் மற்றும் பரிசுத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 8ம் தேதி வழங்கினார்.
பெண் விவசாயி உள்ளிட்ட மூவருக்கு விருது

பட மூலாதாரம், M.K.Stalin
இதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகெ வேளாங்காடுதோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செ.மூர்த்தி கருப்பு கவுணி நெல் ரகத்தை சாகுபடி செய்து, ஒரு எக்டரில் 10,672 கிலோ மகசூல் பெற்றுள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் களக்குடி வட்டம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி பொன்னுபுதியவன் வாசனை சீரக சம்பா எக்டரில் 10, 200 கிலோ மகசூல் பெற்றார். அவருக்கு ரூ. 75 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை நகர் விவசாயி லட்சுமிதேவி ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் ரகத்தை சாகுபடி செய்து, எக்டரில் 10, 024.875 கிலோ மகசூல் பெற்றார். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த அவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

பட மூலாதாரம், M.K.Stalin
இது மட்டுமின்றி அதிக நெல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு விவசாயிகள் சங்க தலைவர் 'நாராயணசாமி நெல் உற்பத்தி திறன்' விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி கூறுகையில், ''வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து பரிசளிக்கும்," என்றார்.
இதன்படி, 2021-22 ஆம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூபாய் 2 இலட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதேபோல் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மூவருக்கு பரிசி வழங்கப்படும். முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய். இரண்டாம் பரிசாக ரூ. 60 ஆயிரம். மூன்றாம் பரிசாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து ரூபாய் 2 இலட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறையும் தேர்வும்
இப்போட்டியில், கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், முதலில் கைபேசியில் உழவன் செயலி (UZHAVAN APP) மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும். பின்னர் மாநிலக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், வேளாண் இணை இயக்குநர், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி, முன்னோடி விவசாயிகள் மூவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாநில அளவிலான தேர்வுக் குழுவில் வேளாண் துறை இயக்குநர் தலைமையில், வேளாண் பொறியியல் துறை நிர்வாக பொறியாளர், தோட்டக் கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பிரதிநிதி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
விண்ணப்பங்கள் மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயி, புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயி என தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்.
குத்தகை சாகுபடி விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்
குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இயற்கை விவசாயிகளுக்கு பரிசு
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ரூ. 60 ஆயிரம்,ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோன்று, வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட பரிசுத் தொகையப் பெற விண்ணப்பத்திற்கான கால அவகாசம், மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
பிற செய்திகள்:
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
- நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












